வள்ளலார்..

அண்மைச் சில ஆண்டுகளாகத்தான் பலராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறார்..

அவரைப் பற்றிய பலரின் தேடல்களும் அதிகமாகி இருக்கின்றன..

அவர் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவாகி இருக்கிற நிலையில்.. அவரை முழுமையாக அறிந்து கொள்வதற்கும் அவரின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கும் இந்தக் கால இடைவெளி மிக அதிகப்படியானது..

அப்படி, இக்கால இடைவெளிக்கு அப்பாலும் அனைவரும் அறிந்து கொள்ளுகிறபடியாக அவரும் அவரின் கொள்கைகளும் நோக்கங்களும் பரப்பப்பட்டு விடவில்லை..

வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் சில நிகழ்வுகள் அறியப்பட்டிருக்கிற அளவில் பெரும்பாலோருக்கு வள்ளலார் என்ன செய்திருக்கிறார், என்னவெல்லாம் பேசி இருக்கிறார், எழுதி இருக்கிறார், என்னென்ன வகையில் இயங்கி இருக்கிறார், எந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தன் கருத்துகளைப் பேசியிருக்கிறார் என்பது குறித்த அறிதல்கள் பலருக்கும் இருந்திடவில்லை..

Vallalarவங்காளத்தின் விவேகானந்தர் தமிழ்நாட்டிற்குள் தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்டிருக்கிற அளவிற்கு வள்ளலார் தெரியவில்லை அல்லது தெரிவிக்கப்படவில்லை..

பொதுவாகச் சமயத் துறவியர்க்கு அரசியல் தேவையில்லை என்பதாகச் சிலர் குறிப்பிடலாம்..

எல்லாவற்றுக்கும் மேலாகச் சமயக் கருத்தாளர் என்றாலும் சமயத் துறவி என்றாலும் அவரும் மாந்தரே.. அவரிடமும் உயிரிகளுக்குரிய மாந்தருக்குரிய உணர்வுகளும் இருக்கவே செய்யும்..

உயிர்க் காற்றை இழுப்பதும், தண்ணீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் உயிரிகளின் இயல்பு..இயற்கை..

அந்நிலைகளெல்லாம் துறவியர்க்கு இருக்காது என்று எவரும் கருத இயலாது..

அதுபோலவே துறவி ஒருவர், தான் பிறந்த இயற்கைச் சூழலுக்கு உகந்த நிலமும், தன் தாய் மொழியும் அவருக்குள் ஓர் உள்ளுணர்ச்சியைத் தரவல்லனவே..

அவர் பிறர் தேவைக்காகப் பிற மொழிகளில் பேசினாலும், பிற நிலங்களில் போய் வாழ்ந்தாலும், தன் தாய் மொழியை, தன் தாய் நிலத்தை உணர்வோடு எண்ணுதலே இயல்பு..இயற்கை..

ஆரியப் பார்ப்பனியச் சங்கராச்சாரிகளுக்குத் தமிழ் மீது இருக்கிற உணர்வை விடச் சமஸ்கிருதத்தின் மீது உணர்வீடுபாடுகள் அதிகம் என்பதிலிருந்து வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள முடியும்..

அப்படியான உள் உணர்வுதான் அந்தந்த மண்ணின் மக்களுக்கும் இருக்கும்.. வள்ளலாருக்குத் தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தமிழர்தம் அற வாழ்க்கையின் மீதும் தமிழ் நிலத்தின் மீதும் வெகுவாக ஈடுபாடு இருந்தது.. அஃது அவருக்கு இயல்பு.. இயற்கை என்பதைக் கடந்து அவர் குமுக உண்மையை அறிந்ததன் வெளிப்பாடு என்றும் உணரலாம்..

அவை குறித்தெல்லாம் அறிவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் பிற மொழித் துறவியர்யர்க்கு இருக்கும் மதிப்பீடுகள் பற்றிச் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்..

சங்கராச்சாரிகளோ, விவேகானந்தரோ தமிழ் நாட்டில் மதிக்கப்படுகிற அளவிற்கு வள்ளலார் மதிக்கப் பெறவில்லை.. அதற்கான காரணங்கள் முகாமையானவை.

அதற்கான காரணங்களை இரண்டு நிலைகளில் உணரலாம்.. ஒன்று.. அவர்கள் கொண்டிருந்த கருத்தியல்கள் சார்ந்தவை.. இரண்டு அவர்கள் அமைத்துக் கொண்ட கட்டமைப்புகள் சார்ந்தவை..

இந்த இரண்டு காரணங்களையும் சிறிது ஆழ்ந்துப் பார்த்தாக வேண்டும். முதலில் அவர்கள் அதாவது விவேகானந்தர், சங்கராச்சாரி போன்றவர்கள் மேற்கொண்டிருந்த கருத்தியல்கள் இந்தியப் பார்ப்பனியம் ஏற்றுக் கொண்டிருக்கிற அதிகார வகுப்பின் கருத்தியல்..

வேத, புராணங்களைக் கொண்டாடியவர்கள் அவர்கள்.. வேதங்களின் ஒலிப்புகள்தாம் அண்ட புடவி (பிரபஞ்சங்) களையும் காக்கவும் இயங்கவும் வைப்பதாகச் சங்கராச்சாரி உள்ளிட்டோர் இட்டுக் கட்டியுள்ளனர்.

உலகில் வேதங்களுக்கு இணையான நூல் எதுவுமில்லை என்ற கருத்துகளைப் பரப்பியவர் விவேகானந்தர்.

"நீங்கள் இறைவனைப் பற்றிய எந்தக் கொள்கையை வேண்டுமானால் நம்பாதவர்களாக இருக்கலாம் ஆனால் வேதங்களை ஒப்புக் கொள்ளாவிடில் நாத்திகர்களே.." - என்றும்,

"வேதத்தில் இல்லாததே இல்லை" -என்றும் வேதத்தை உச்சி முகர்ந்தவர் அவர்.

“தன் தாயை ஒரு துறவி எவ்வாறு நேசிக்காமல் இருக்க முடியாதோ அதுபோலவே தாய்நாட்டை நேசிக்காமலும் இருக்க முடியாது.”

- என்று கூறியதோடு,

"ஒரு துறவிக்குத் தாய்ப்பாசம் இருக்கலாம் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன. அதுபோலவே ஒரு துறவிக்குத் தாய்நாட்டுப் பாசம் இருப்பதிலும் தவறில்லை. உலகத்தவரை நேசிப்பதற்குத் தாய்நாட்டுப் பற்றுத் தடையாக இருக்க முடியாது”

என்றும் விளக்கியவர் தன் தாய் மொழியான வங்காள மொழியையோ, தன் தாய் நாடான வங்காளத்தையோ அடையாளப்படுத்தாமல் சமசுக்கிருதத்தின் மீதும் 'பாரதம்' - என இந்தியத்தின் மீதும் பற்றுடையதாக அறிவித்திருந்தார்.

"பெருமைகொள்.. நான் ஒரு பாரதவாசி, ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன்

- என்று பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு!

மூட பாரதீயனும், பிராமண பாரதீயனும், பறையராகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவராயினும் உரத்தக் குரலெடுத்து, “பாரதீயரே எனது சகோதரர், பாரதீயரே எனது உயிர், பாரதத்தின் தேவ தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள், பாரதத்தின் ஷன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில், இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா, மூப்படைந்த தருணத்தில் அடையும் வாரணாசியான மோட்சத்தலம்” என்று பெருமையுடன் சொல்வாயாக..."

- என்றவாறும்...

"சகோதரனே, 'பாரதபூமியே எனது அதியுயர்ந்த மோட்சலோகம், பாரதத்தின் நன்மையே எனது நன்மை' என்று சொல்வாயாக..."

- என்றவாறெல்லாமும் விவேகானந்தர் இந்தியாவையும் இந்து மதத்தையும் வேத, புராணங்களோடு இணைத்துக் கருதி மெச்சிக்கொண்டதுண்டு..

எனவேதான்.. அவர் பார்ப்பனர்களால் பெரிதும் உயர்த்திக் காட்டப்பட்டார். ஆர் எஸ் எஸ் அவரை முன்னிறுத்திக் கொண்டது.. விவேகானந்தர் கேந்திரம் அமைத்தது.. விவேகானந்தர் பாறை என்று பெயர் சூட்டிக்கொண்டு ஆரிய வைதீகம் குமரியில் ஆட்டம் போட்டுவருகிறது..

இந்திய அரசின் அஞ்சல் துறை சார்பில் விவேகானந்தருக்கு இதுவரை ஏழு அஞ்சல் தலைகளுக்கு மேலாகவும், இராமகிருஷ்ண பரமகம்சருக்கும் கோல்வால்கர் உள்ளிட்ட எண்ணற்ற ஆர் எஸ் எஸ் காரர்களுக்கும் அஞ்சல் தலைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.. சங்கராச்சாரிகளை 'லோககுரு' என்றுகூறி உயர்த்திக் காட்டி வருகின்றனர்..

திருக்குறளையும் ஆரிய வைதீகச் சார்புடையதாகக் காட்டிக் கொள்வதற்கான முயற்சியைக் கி வா செகநாதனைக் கொண்டு செய்விக்கிற பொறுப்பை கோவையின் இராமக்கிருட்டிணா மடம்தான் ஏற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது..

இப்படியாகவெல்லாம் விவேகானந்தரைக் கொண்டையத்தில் வைத்து அடையாளப்படுத்தி எளிய மக்களை அறியாமை வலையில் மத ஆளுமை வலையில் சிக்க வைக்கிற ஆரிய சூழ்ச்சி போல் அல்லாது அச் சூழ்ச்சிகளை மறுத்து மக்களை அறிவுக்குட்படுத்துகிற முயற்சி புத்தர் காலந்தொடங்கியே.. திருவள்ளுவர் காலந்தொடங்கியே நடந்து வருவதை அறிய வேண்டும்..

அறிவைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு இயங்கினார் புத்தர்..

அறிவு அற்றம் காக்கும் கருவி - என்றார் திருவள்ளுவர்..

அவரின் வழிவந்தவர்களே திருமூலரும் சித்தர்களும் வள்ளலாரும்..

வள்ளலார் தொடக்கத்தில் சிவனிய கருத்தாளராக இருந்த போதும் பின்னர் சமயங்களை மறுத்திட அவர் எடுத்துக்கொண்ட பெரு முயற்சிகள் மிகவும் வியப்பானவை..

எளிய வகையில் பாடல்கள் இயற்றுகிற திறனைத் தாயுமானவரைத் தொடர்ந்து அவர் பெற்றிருந்தாலும்.. ஆரிய மறுப்புக் கருத்தும், சமய மறுப்புக் கருத்தும் வள்ளலாரின் மிக அழுத்தமான அறிவுத் தேடல் முயற்சியாலேயே நடந்தவை என்பதை அறியலாம்..

அறிவுச் செருக்குள்ளிட்ட எந்தச் செருக்குமற்றவராக இருந்ததோடு..

திருக்குறள் வகுப்புகளை முதன் முதலில் நடத்தத் தொடங்கியவரும் வள்ளலார் அவர்களே..

"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்"

- என்று மென்மையாக அறக் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கிய வள்ளலார்.. பின்னர் படிப்படியாகத் தம் நோக்கங்களை ஆய்வு செய்து விரிவாகப் பதிவு செய்தார்..

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால்
இளைத்தே வீடுதோ றிரந்தும்
பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம்
பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர்
என் நேர் உறக்கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர்
தமைக்கண்டே இளைத்தேன்”

- என்றும்,

"சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்
தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர்
அழிதல் அழகலவே"

- என்றும் அழுத்தத்தோடு பேசினார்.

"சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணித்தேன்..”

“மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவாக் கதத்திலே

மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்..

குலத்திலே சமயக் குழியிலே நரகக்

குழியிலே குமைந்துவீண் பொழுது

நிலத்திலே போக்கி

மயங்கி யேமாந்து நிற்கின்றார்”

“சாதிகுலம் என்றும் சமயமதம் என்றும்

உபநீதியில் ஆச்சிரம நீட்டென்றும் ­ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த

வேதியர்தம் வாயாட்டந் தீர்த்தனவே மற்று.. "

- என்று தன் கருத்தைத் துணிந்து உரைத்தார்.

"கங்கையிலே காவிரியிலே
நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில்
கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு
ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற
யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை
பணம்அள்ளித் தந்து
பசுவதனைப் பூசித்து
அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை
அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய்
முக்தியதை யடையார்."

- திருவருட்பா (இறவா நிலை)­

"சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போங்காட்ட நேராவே."

”வேதாகமங்கள் என்று

வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறியீர் -

சூதராகச் சொன்ன அலால் உண்மை வெளி

தோன்ற உரைத்தல் இலை என்ன பயனோ இவை?”

- என்று தம் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்..

“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு;

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு;"

- என்றும்,

“கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலனொன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி

நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ...."

- என்றும் சாதி சமயக் குப்பைகளைச் சாடுவார்.

"மாலும் துஞ்சுவான்; மலரவன் இறப்பான்;

மற்றை வானவர்

முற்றிலும் அழிவார்"

- என்று சமயக் கருத்தாளர் போலல்லாது வானவர்க்கும் அழிவுண்டு என்பதாகச் சமயங்கடந்து கூடுதலாகக் கருத்தறிவித்தவர்..

இந்த வகையில் வள்ளலார் அவர்கள் இந்தக் கருத்தை எட்டுவதற்குப் பல படிகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது..

யாதொன்றையும் அதன் அளவையியலுக்கு (இலாஜிக்கல்) அப்பால் கொண்டு சென்றால் அது எதிர்மறையாகிப் போகும் என்பது இயங்கியல் என்பர்..

அந்த வகையில் முழுமையான சிவனியக் கருத்தாளராக இருந்தவர்.. சமயப் பிடிப்போடு இருந்தவர்.. சடங்குகளைக் கடைபிடித்து ஒழுகி வந்தவர்.. பின்னர் அனைத்தையும் துறந்து சமயத்தை மறுத்து, சாதியை மறுத்து, வேதத்தை மறுத்து, வேதாந்தங்களை மறுத்து, சித்தாந்தத்தை மறுத்து, ஆகமங்களை மறுத்து, சமஸ்கிருத அதிகாரத்தை மறுத்து, மூட வழக்கங்களை மறுத்து.. பொதுமை அற உணர்வோடு புதிய குமுகத்தைப் படைக்கிற எண்ணங் கொள்ளும் அளவிற்கு மாறினார்..

குமுகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வும், பசிப்பிணியும் அவர் உள்ளத்தை வருத்தியது..

பசியை ஒழிப்பதே முதன்மை நோக்கமாகக் கொண்டார்..

தன் மெய்யறிவு அவையில் ( சத்திய ஞான சபையில் ) வழிபாட்டு நிலைகளில் உருவ வழிபாடு, நெய்வேதியம், பூசை, திரிநீராட்டுப் போன்றவற்றை மறுத்தார். பித்தளை முதலானவற்றில் செய்த குத்துவிளக்குகள் கொண்ட வழிபாடுகளுக்குக்கூட இடம் தராமல் தகரக் கண்ணாடி விளக்கொன்றை மட்டும் வைக்க இசைந்தார். தனக்கானத் தேவைக்காக மட்டும் கடவுளிடம் வழிபாடு செய்து கொள்ளும் நடைமுறையை மறுத்து, உலகமெல்லாம் உய்யும் படியும், அனைவருக்காகவும் வேண்டும் படியும் நெறிமுறைப்படுத்தினார்..

எவை எவை தமிழ்ச் சொற்கள் எவை எவை சமசுக்கிருதச் சொற்கள் என்று அறியப்படாத நிலையில் தமிழாகக் கருதித் தாம் ஏற்றுக் கொண்ட நெறிக்கான இயக்கத்தை 'சத்திய தர்ம சாலை' என்கிற அளவில் மக்களிடமிருந்து பெற்ற 800 காணி நிலத்தில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்கிற வகையில் இலவய உண்டிச்சாலையை முதன்முதலில் தொடங்கினார்..

அவரின் இந்தக் கருத்துகளே ஆரியத்திற்கு எதிரானவை என்பதை மிக வெளிப்படையாகவே உணர்ந்த ஆரியப் பார்ப்பனிய கருத்தாளர்களும், சிவனியப் பற்றாளர்களும், சாதிய ஆளுமைச் சிந்தனையாளர்களும் அவரோடு ஒன்றுபடவில்லை என்பதோடு அவரை மறுத்தும் எதிர்த்தும் இயங்கத் தொடங்கினர்..

அந்த மறுப்புகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட அளவிலேயும் அவர் இயங்க வேண்டியிருந்தது..

தம் மீதான சமயச் சார்பினரின் வழக்குகளைக்கூட எதிர்கொண்டார்..

எனவே ஆரியத்திற்குச் சார்பான இயக்க நிலை என்பது வேறு.. ஆரியத்துக்கு எதிரான இயக்க நிலை என்பது வேறு..

அதுபோலவே, சாதியத்திற்கு, சமயங்களுக்குச் சார்பான இயக்க நிலை என்பது வேறு அவற்றுக்கு எதிரான இயக்க நிலை என்பது வேறு..

அதில் இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலச்சூழலில் இந்த ஆரியப் பார்ப்பனிய, சாதிய வலிமை நிலைகளை ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்..

எனவே.. வள்ளலார் இராமலிங்க அடிகளார் பெரும் போராட்டத்தோடையே தம் கருத்துகளை ஊன்றிச் செயல்பட வேண்டி இருந்தது என்பதும் அனைத்தையும் கடந்து அவர் எளிய பின்புலத்திலிருந்து பிறந்து வளர்ந்ததோடு ஆற்றலோடு உயர்ந்து தம் கருத்துக்களுக்குரிய வகையில் விரிவாகச் செயல்பட்ட பாங்கையும் உணர வேண்டும்..

-2­

அடுத்ததாக.. அவர்களின் செயல் கட்டமைப்புகள் சார்ந்த நிலைகளையும் அறிய வேண்டும்..

விவேகானந்தர் தன் இலக்குகளைச் செயல்படுத்துவதற்கு நிறுவனங்களை நிறுவி வகைப்படுத்தியிருக்கிறார்.. இராமகிருட்டிணர் பெயரில் 1897 இல் நிறுவனத்தை நிறுவினார்.. 1898 இல் வங்காளத்தில் பேலூர் மடத்தை உருவாக்கினார்.. அதற்கு எண்ணற்ற ஆங்கிலேயர்களே துணை நின்றனர்.. மார்க்ரேட் நோபல் அவர்கள் நிவேதிதா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு பெருந்துணையாற்றினார்..கேப்டன் சேவியர், மெக்லியோட், ஓலே ஃபுல் எனப் பலர் தொடக்கக் காலங்களிலேயே துணை நின்றனர்.. ஆரியப் பார்ப்பனியச் சார்புடையவர்கள், இந்து மதச்சார்படையவர்கள், சிவனியச்சார்புடையவர்கள் என எண்ணற்றவர்கள் ஆதரவு என்ற பெயரில் பெருமளவில் பொருளியலாகவும் உழைப்பளவிலும் துணை நின்றனர்.. மேற்கு வங்கத்தில் விவேகானந்தர் பேலூரில் அவர் தொடங்கிய நிறுவனம் விவேகானந்தர் காலத்திற்குப் பிறகு அது மிகப் பெரிய அளவில் வளர்க்கப்பட்டது.. அதை இங்கிருந்து துணை நின்று வளர்த்ததில் ஆர் எஸ் எஸ் அமைப்புக்குப் பங்கு உண்டு.. தொடர்ந்து அவர்கள் அதன் சார்பில் வளர்த்த ஏறத்தாழ 750 கல்வி நிலையங்கள் கல்லூரிகளாகவும்.. மேல்நிலைப் பள்ளிகளாகவும்.. உயர்நிலைப் பள்ளிகளாகவும்..கல்விக்கூடங்களாகவும்.. விடுதிகளாகவும்.. ஏதிலியர் இல்லங்களாகவும்.. மருத்துவ நிறுவனங்களாகவும்.. செயல்பட்டு வருகின்றன..

இவையன்றி ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இராமகிருட்டிணா நிறுவனத்திடமிருந்து உதவி பெறுகிற வகையில் உண்டு..

மொத்தத்தில்.. ஏறத்தாழ ஆண்டுக்கு இரண்டு இலக்கம் மாணவர்கள் விவேகானந்தா, இராமகிருட்டிணா நிறுவனங்கள் வழி அவர்களின் கருத்துகளுக்கு இழுக்கப்பட்டு வருகின்றனர்...

அதற்கான செலவுகளை முழுக்க முழுக்க இராமகிருட்டிணா மடங்களே செய்கின்றன.. உலகெங்கும் உள்ள இந்துக்களிடமிருந்து என்ற பெயரில் உலகெங்கும் ஆரியப் பார்ப்பனர்களிடமிருந்தும் பார்ப்பனியச் சார்புடையவர்களிடமிருந்தும் பெரு முதலாளிகளிடமிருந்தும் மிகப்பெரும் நன்கொடைகள் பெற்றுக் குவிக்கின்றனர்..

அதனால் அவர்கள் இந்திய அரசின் அரவணைப்பில் ஆர் எஸ் எஸ் இன் துணையில் முழு அதிகாரங்களோடும் நிறுவி வேதாந்தக் கருத்துகளைப் பரப்பல் செய்கின்றனர்..

அவையன்றி, கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம் அமைத்தது.., பெரும்பாறையில் விவேகானந்தா மண்டபம் அமைத்தது, அதற்கான அனைத்து அடிப்படை ஏந்துகளையும் நிலங்களையும் பறித்துக் கொண்டது, சென்னைக் கடற்கரையில் சிங்காரவேலர்க்குச் சொந்தமான நிலத்தில் அவருக்கு ஒரு நினைவு மண்டபமோ, சிலையோ நிறுவப்படாத நிலையில் பனியகத்தை (ஐஸ் ஹவுஸை) தமிழ்நாடு அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்று, பெரிய அளவில் விவேகானந்தர் மண்டபத்தை அமைத்துப் பரப்பல் செய்து வருவது.. இவையெல்லாம் திட்டமிட்ட ஆர் எஸ் எஸ் சார்புடைய செயல்கள் என அறிய வேண்டும்..

அதே போல், சங்கரமடங்களும் அளவற்ற பொருளியல் பின்புலம் உடையவையாக அரசு அதிகாரத்தின் அரவணைப்போடு ஆரியப் பார்ப்பனிய அடித்தள வலிவுகளோடு வளர்க்கப்பட்டுவருகின்றன.. அவற்றுக்கும் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உண்டு

அவற்றின் வழியே பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவர்களின் வைதீகக் கருத்துகளுக்கு உள்ளிழுக்கப்படுகின்றனர்.. ஆக இவற்றின் வழியாகவெல்லாம் உள்ளிழுக்கப்படுகிற இளைஞர்கள் அவர்களின் வைதீக, வேத, புராண கருத்துகளுக்காட்பட்ட வகையில் சாதிய உணர்வோடும், மதவியல் உணர்வோடும், வருண வேறுபாட்டுணர்வுகளோடுமான வகையிலேயே கருத்தும் செயல் பயிற்சியும் பெற்று இயங்குகின்றனர்..

ஆனால்.. சத்திய தர்ம சாலை , சத்ய ஞான சபை, சமரச சன்மார்க்க இயக்கம் என்றெல்லாம் இயங்கிய வள்ளலார் அவர்களுக்கு மக்களின் துணையே பெரிய அளவில் இருந்ததேயன்றி ஆரியப் பார்ப்பனிய அதிகார வகுப்புகளோ, அரசு அதிகாரங்களோ, வெளிநாட்டு நிறுவனங்களோ, சமய இயக்கங்களோ, இந்து மதப் பெரு நிறுவனங்களோ எனப் பொருளியல் ஏந்துடைய எவையும் உதவியதில்லை என்று அறிய வேண்டும்..

சிலர் வள்ளலாரைச் சிவனியச்சார்பு நிலையில் அடக்குகிற பெரு முயற்சியைச் செய்தனர்..

திரு.வி.க. அவர்கள்கூட வள்ளலாரின் சமயச்சார்பற்ற போக்குகள் குறித்து எதுவும் கருத்தறிவிக்காததும், வள்ளலார் கருத்துகளுக்கு மறைமலை அடிகள் ஏற்பிசையாததும் இங்குக் கவனிக்கத்தக்கவை..

ஓமந்தூரார், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோரும் கூட வள்ளலாரின் சில கருத்துகளைத் தன் நிலைப்பாடுகளின் அளவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட வகையில் உயர்த்தி நிறுத்திக் காட்டிக் கொண்டனரே அல்லாமல், வள்ளலாரின் சாதிய எதிர்ப்பு, சமய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, சமசுக்கிருத அதிகார எதிர்ப்பு, ஆகம எதிர்ப்பு என அந்த எதிர்ப்புகளோடெல்லாம் உடன்பட்டோ அல்லது அவ்வெதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பல் செய்கிற வகையிலோ செயல்பட்டிடவில்லை என்பதையும் அறிதல் வேண்டும்..

வள்ளலார் தம்முடைய காலத்திலேயே தாம் கொண்ட கொள்கைகளை ஒரு பெரும் மக்கள் இயக்கமாகச் செய்யவில்லை..

ஒரு குமுக சீர்திருத்த இயக்கம் என்கிற அளவிலேயே அவர்தம் செயல் வட்டத்தை அமைத்துக் கொண்டார்.

எண் கோண வடிவிலான 'மெய்யறிவு அவை' (சத்திய ஞான சபை) அந்த அளவிலேயே இப்போதும் இருக்கிறதேயன்றி, அவர் மறைவுற்று 150 ஆண்டுகளாகியும் அது பெருமளவில் வளர்க்கப்பட்டு விடவில்லை..

கோட்பாடுகள் இயக்க வழிப்படுத்தப்படாததால் அதற்கான நிறுவன அமைப்புகள் உருவாக்கப் பெறவில்லை.. ஆரிய அதிகார வகுப்புகள் உருவாக்க விடவில்லை.. (அவரையே வாழ விடாதவர்களாயிற்றே! ) அவர் கருத்து வழிகாட்டலிலானக் கல்விக்கூடங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, ஏதிலியர் பேணுகையகங்கள் இல்லை.. பின்பற்றாளர்களை ஒருமுகப்படுத்தி நெறிப்படுத்துகிற செயற்பாடுகள் இல்லை..

இந்த நிலைகள் ஒப்பிட்டு எண்ணப்பட வேண்டுவன..

ஆரிய வைதீகக் கருத்தாளர்கள் அமைப்பாக செயல்பட்டதும்.. தமிழிய அறக்கருத்தாளர்கள் அவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளாமல் போனதும்..கொள்ளவிடாமல் போனதும்..பெரும் தேக்கத்தையே உருவாக்கியுள்ளன..

அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழிய அற நெறியாளர்களை, தமிழ்க் குமுகச் சீர்திருத்தக் கருத்தாளர்களை, தமிழ்ப் பற்றாளர்களை, தமிழ் உணர்வாளர்களை, தமிழ்த் தேசிய உணர்வாளர்களை, தமிழ்க் குமுகமாற்றப் புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கிற, ஓரணிப்படுத்துகிற போக்கு வளர்க்கப்பட வேண்டுவது காலத்தின் கட்டாயம்..

அத்தகைய செயல்பாடுகளின் ஊடாக வள்ளலாரின் நோக்கம் கொண்ட அவையங்கள் ஏராளமாய் உருவாக்கப்பெற வேண்டும்..

வள்ளலாரின் பெயரில் உண்டி கொடுத்தால் மட்டும் போதாது.. சாதியற்ற, சமயமற்ற, வேதமற்ற, சமசுக்கிருத அதிகாரமற்ற, மூடக் கருத்துகளற்ற.. மெய்யறிவு (சத்ய ஞானம்) சமன்மை நன்னெறி (சமரச சன்மார்க்கம்) உணர்வையும் ஊட்டியாக வேண்டும்..பரப்பியாக வேண்டும்..

அதுவே அவரின் இருநூறாம் ஆண்டின் நிறைவு நினைவு நமக்கெல்லாம் உணர்த்துகிற பாடம் என உணர்வோம்..!