அமெரிக்க மத சுதந்திர ஆணையம் ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் RAW அமைப்புகளுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் காக்கப்படுவதில்லை என்றும், சகிப்புத்தன்மை சரிந்துவிட்டது என்றும் அதற்கு ஆர்எஸ்எஸ்-தான் காரணம் என்றும் கூறியுள்ள இந்த அமைப்பு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (RSS) எதிராக தடைகளை விதிக்க வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பரிந்துரைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சொத்துக்களை முடக்குவது மற்றும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது போன்றவை இந்த தடையில் அடங்கும். இந்த ஆணையம், மத சுதந்திரத்திற்கான உலகளாவிய உரிமையைக் கண்காணித்து வெள்ளை மாளிகைக்குக் கொள்கை ஆலோசனைகளை வழங்கும் ஒரு சுதந்திரமான அமெரிக்க அரசு நிறுவனமாகும்.

கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட இந்தியா தொடர்பான இதழ் ஒன்றில், "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. இடையேயான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உறவு, குடியுரிமை, மதமாற்றத் தடை மற்றும் பசுவதை தடுப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பல பாகுபாடான சட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் அனுமதிக்கிறது" என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது. இதற்காக இந்தியாவை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' (Country of Particular Concern) என்று பட்டியலிடவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

2026-ஆம் ஆண்டு வருடாந்திர அறிக்கையில், மத சுதந்திர மீறல்களைப் பொறுத்துக் கொள்ளும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட வேண்டிய பட்டியலில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவும் (RAW) இருக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பாகும். இத்தகைய பரிந்துரைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை என்றாலும் கூட, சர்வதேச சமூகத்தில் இந்தியாவை வெட்கித் தலைகுனியச் செய்யும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.

தமிழ்நாடு தவிர்த்துவிட்டு இந்தியா முழுமையும் இத்தகைய வெறுப்புவாத பேச்சுக்கள், கலவரங்கள் நடந்து வருவதை உலகம் அறிந்ததே. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய தொழில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 54 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. 7 கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி சட்டமன்றத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சிக்கல்களுக்கு தீர்வு காணாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, , இந்த ஆணையம் "சார்புடைய மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட மதிப்பீடுகளை வெளியிடும் முறையைக் கொண்டுள்ளது" என்று குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. “இந்தியா மீதான பழிபோடுதல்களுக்குப் பதிலாக அமெரிக்காவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரிப்பு போன்ற தீவிர பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தலாம்” என்றும் ஒன்றிய அரசு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் உடனான போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறியதற்கு மோடி அரசு இதுவரை வாய் திறக்கவில்லை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் 50% வரி விதிப்போம் என்று கூறி கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் திணித்தபோதும் மோடி அரசு வாய் திறக்கவில்லை, இந்தியாவுக்கு பயிற்சி மேற்கொண்டு திரும்பிய ஈரான் ராணுவக் கப்பலை அமெரிக்க படைகள் வீழ்த்தியபோதும் மோடி அரசு வாய் திறக்கவில்லை, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்க்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு வேண்டுமானால் ஒரு மாதம் அவகாசம் தருகிறோம் என்று பண்ணையார்த்தனமாக அமெரிக்கா அறிவித்தபோதும் மோடி அரசு வாய் திறக்கவில்லை. ஆனால் ஆர் எஸ் எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமென்று கூறிய உடனே பதறி அடித்துக்கொண்டு மறுப்பு சொல்லுகிறது இந்த மோடி அரசு. மக்கள் பிரச்னைகளை விட மதப் பிரச்னைதான் எங்களுக்கு முக்கியம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது மோடி அரசு.

- பிரகாசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.