பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில், தமிழின உணர்வாளர்கள் திரளுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் இலங்கை ராணுவம் தமிழர்களை கொத்து கொத்தாக பிணமாக்கி வருகிறது.அய்.நா.வும், அமெரிக்காவும், பிரிட்டனும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் - இலங்கை அரசு கேட்க மறுக்கிறது. கடந்த ஜன.20 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 46 நாட்களில் 2683 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தாகவும், 7 ஆயிரத்து 241 பேர் படுகாயமடைந்ததாக வும் அய்.நா.வின் தகவல் கூறுகிறது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் முதலில் இதை வெளியிட மறுத்த நிலையில் மனித உரிமைக் குழு உறுப்பினர்கள் அறிக்கையை கசிய விட்டதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிவந்தன.
இந்த நிலையில் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் - தமிழர்கள் மீது ராணுவம் நடத்தும் இனப் படுகொலையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்து, அதற்கான பட்டியலில் இணைத் துள்ளது. அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர அமெரிக்க பிரதிநிதி சூசன் ஈ ரைஸ் பாதுகாப்புக் குழுவில் இதை விவாதிக்க, தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலினால் அமெரிக்கா மிகவும் கவலை கொண்டுள்ளதால் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார். அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சார்பாக பிரிட்டனுக்கான அய்ரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர் ஜான் சேவேர்ஸ் பாதுகாப்புக் கவுன்சில், இது பற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதம் வந்துவிடக் கூடாது என்று இலங்கை, சீனாவிடம் தஞ்சமடைந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் அய்.நா. தலையிடக் கூடாது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் செய்யாவிட்டால், இலங்கையை ‘காமன் வெல்த்’ அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பெண் மக்களவை உறுப்பினர் ஜோன்மேரி ரியான் - இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இனியும் இனப்படுகொலைகள் தொடர்வதை தாங்கிக் கொள்ள முடியாது என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதோடு, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி சண்டே டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். சர்வதேச பிரதிநிதிகள் - முல்லைத் தீவுக்கு வந்து நேரில் பார்வையிட்டு உண்மைகளைத் தெரிந்து கொள்ளட்டும் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியா இவ்வளவுக்குப் பிறகும் வாய் திறக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கலைஞர், இலங்கையின் இறை யாண்மையில் தலையிட முடியாது என்று - ராஜபக்சே கூறும் கருத்தை இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டார்,. சோனியா இதுவரை ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி வாயே திறக்கவில்லை. இந்தியப் பார்ப்பன வல்லாதிக்க ஆட்சியின் துரோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் இனப் பகைக்கு பாடம் புகட்ட தமிழின உணர்வாளர்கள் தயாராகி வருகிறார்கள். காங்கிரசை தோற்கடிக்க வற்புறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குறுந்தகடு, தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது. பெரியார் திராவிடர் கழகம் - தமிழ்த் தேச பொது வுடைமை கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ ஈழத் தமிழர்களின் பிரச் சினையை மக்களிடம் கொண்டு செல்லும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதன் மற்றொரு செயல்பாடாக எதிர்வரும் ஏப்.11 ஆம் தேதி ஈரோட் டில் தமிழின வாக்காளர் மாநாட்டை கூட்டியுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஈரோட்டில் அபிநயா ரீஜென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. கழக பொதுச் செய லாளர்கள், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், பெ. மணியரசன் (தே.பொ.க), தியாகு (த.தே.வி.இ.), ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொறுப் பாளர்கள் நாத்திக ஜோதி, இராம இளங்கோவன், த.தே.பொ.க., த.தே.வி.இ. தோழர்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். 15 பேர் கொண்ட வரவேற்புக்குழு மாநாட்டுக்காக அமைக்கப்பட் டுள்ளது.
ஏப்.11 ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனி மாவீரன் முத்துக்குமரன் அரங்கில் மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்குகிறது. ஈரோடு ரத்தினசாமி தலைமை தாங்குகிறார். மோகனராசு வரவேற்புரை யாற்றுகிறார். இராம. இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். இயக்குனர் மணிவண்ணன், தமிழருவி மணியன், புலவர் புலமைபித்தன், ஓவியா, பெ.மணியரசன், தியாகு, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். சமர்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் உண்டு. மாநாட்டில் தேர்தல் குறித்து இன உணர்வுள்ள தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழ்நாடு முழுதுமிருந்தும் தனிப் பேருந்துகளில் கட்சிகளைக் கடந்து இன உணர்வாளர்கள் ஈரோடு நோக்கித் திரள இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் புதிய திருப்புமுனையை இம்மாநாடு உருவாக்கப் போகிறது. தமிழக முழுதும் பரவியுள்ள இன எழுச்சி உணர்வுக்கு வடிவம் தந்து ஒருங்கிணைத்து உணர்வுகளை ஓட்டு சக்தியாக மாற்றும் மாநாடாக இது திகழப் போகிறது. மாநாட்டை தடுத்து நிறுத்திடும் முயற்சிகள் ஆளும் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் அந்த முயற்சிகளை முறியடித்து, மாநாட்டை உறுதியாக நடத்திட தீவிரப் பணிகள் தொடங்கி விட்டன.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஏப்.11 ஈரோட்டில் தமிழின வாக்காளர் மாநாடு
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளார்
- பிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2009