ஒரு நூற்றாண்டு காணாத அளவிற்குக் கொட்டித் தீர்த்திருக்கும் மழையால், அல்லல்படும் மக்களுக்கு ஆதரவாக உதவிகள் கோரியும், இதனைத் தேசியப் பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற தருணங்களில் மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் நிதி கேட்பதும், சற்றுக் கூடுதல் குறைவாக ஒன்றிய அரசு நிதி வழங்குவதும் இயல்பானவை! இப்போது தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர் என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக இருக்கும்போது, உடனடியாக உதவிகள் கிடைக்கும் என்று பலரும் நம்பி இருக்கக்கூடும்!
ஆனால் நிர்மலா சீதாராமனின் பேச்சும், அந்த எரிச்சல் மொழியும், வெந்த புண்ணில் வேல் எடுத்து வீசுவதாகவே இருக்கிறது. எந்த ஒரு மாநிலத்தில் நடக்கும் துயரத்தையும், தேசியப் பேரிடர் என்று அறிவிக்க முடியாதாம்! ஏன்? மாநிலம் என்பது, அவர்கள் சொல்கிற அந்த “ஒரே தேசத்தில்” இல்லையோ? இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் இடர் ஏற்பட்டால் மட்டும்தான், அது பேரிடர் போலும்!
அள்ளிக் கொடுக்க வேண்டாம், ஆறுதல் மொழியாவது கூறியிருக்க வேண்டும்! ஆனால் அவர் உதிர்த்த சொற்கள் மட்டும் இல்லை, அதை அவர் உதிர்த்த விதமும் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் அவருக்கு இருக்கிற எரிச்சலைத்தான் வெளிப்படுத்துகிறது.
இந்திய அரசின் நிதி அமைச்சரின் பேச்சில் பரிவும் இல்லை, கண்ணியமும் இல்லை! இவ்வளவு துயரத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் போதும், அவர் இப்படிப் பேசுகிறார் என்றால், அவர் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார் என்பதுதான் பொருள்! அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை, மக்களிடம் வாக்குகளைக் கேட்கப் போவதுமில்லை. தேர்தலைச் சந்திக்காமலேயே இந்தியாவின் பெரிய பெரிய பதவிகளில் அவரால் அமர்ந்து விட முடிகிறது. அதனால் மக்களை மதிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று அவர் கருதுகிறார் போலும்!
இந்த நிலையில், எப்படிப் பேச வேண்டும் என்று அமைச்சர் உதயநிதிக்குப் பாடம் வேறு எடுக்கிறார். “அவர் தாத்தா எவ்வளவு பெரிய தமிழறிஞர்!” என்று கேலி பேசுகிறார். இவர் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும், அவர் தமிழறிஞர் - முத்தமிழறிஞர்தான். அதனை யாரும் மறுக்க முடியாது!
அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்றால், அதற்கு ஒரே ஒரு விடைதான் உண்டு. ஆம், ஆணவத்தின் மறுபெயர் நிர்மலா சீதாராமன் என்பதுதான் அந்த விடை!
- சுப.வீரபாண்டியன்