வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18)

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (14.4.2016 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழின் தொடர்ச்சி)

இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமாகும். வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய முடியும்? அப்படி செய்வதற்குக் கையாளும் முறை என்ன? இவைதான் இங்குச் சிந்திக்க வேண்டிய முக்கிய காரணமாகும்.

ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் மேயர் மன்னிக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிக் காரர்களுக்குள் காங்கிரஸ் ஒரு பெரிய கட்சியார், எப்படி யென்றால், ஏன் என்றால் அந்தக் கட்சியார்தான் இந்த நாட்டை ஆளும் கட்சியாராக இன்று இருக்கிறார்கள். ஆதலால் அதை நாம் மறுக்க முடியாது.

இந்தக் கண்டனக் கூட்டத்தில் அவர்களும் பெரு வாரியாகக் கலந்து இருக்கிறார்கள். வாஞ்சு அறிக்கையை இன்று “அதிகாரமற்ற அறிக்கையல்ல, அது ஒரு சிபாரிசு அறிக்கைதானே, அதுவும் ஹேஸ்யம் தானே, அன்றியும் அது முடிந்ததல்லவே” என்று விவகாரத்திற்குச் சொல்லி விடலாம். ஆனாலும் மாஜிமந்திரி பக்தவச்சலம் அவர்களே என்னோடு பேசும்போது, “அது ஹேஸ்யம் அல்ல உண்மை என்றுதான் கருத வேண்டும்” என்று சொன்னார். எப்படியோ இருக்கட்டும். நமது கண்டனங்களை தந்தி தீர்மானம் மூலமாகப் பண்டிதருக்குச் சொல்லுகிறோம்; அவர் அதை மதித்தால் நமக்கு நல்ல வாய்ப்புத்தான்; அவர் இலட்சியம் செய்யாமல் அறிக்கைப்படி காரியத்தை முடிவு செய்து விட்டால் மேலால் நாம் என்ன செய்வது? - என்பதைக் காட்ட வேண்டாமா? எந்த அளவுக்கு நாம் தயாராய் இருக்கிறோம்? என்பதைக் கலந்தாவது பேசிக் கொள்ள வேண்டாமா? அதற்கு மக்கள் தயாராய் இருக்கிறார்களா என்று இந்தக் கூட்டத்தில் அறிய வேண்டாமா?

இஷ்டப்படாத காரியம் நடப்பது என்றால், அதைத் தடுக்க நாம் சிறிதாவது சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு ஆக சிறிதாவது கஷ்ட நஷ்டங்களை அனுபவித் தாவது சிறிது எதிர்ப்பாவது காட்ட வேண்டும். அப்படி இல்லையானால் இதற்குத் தீவிர எதிர்ப்பு இல்லை என்று கருதி மேலிடத்தார் உறுதி செய்துவிட்டால், அப்புறம் நமக்கு எவ்வளவு கஷ்டம் தொல்லை ஏற்படும்? அந்தத் தொல்லை கஷ்டங்களை இப்படி ஒன்று சேர்ந்து அனு பவிக்க முன்வர முடியுமா? என்பது தெரிய வேண்டாமா?

நான் வரப்போகும் கஷ்டத்திற்கு இன்று இங்கு உள்ள காங்கிரசுக்காரர்கள் பின்வாங்குவார்கள் என்று கருதிப் பேசுவதாகத் தயவு செய்து யாரும் கருதக் கூடாது. மக்கள் அரசியல் காரணங்களுக்குக் கஷ்ட நஷ்டமடைவது, தியாகம் செய்வது என்பது இந்த நாட்டில் காங்கிரஸ் காரர்களால் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நானும் தியாகம் என்பதைக் காங்கிரசினால்தான் தெரிந்துகொண்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதலால் நான் காங்கிரஸ் தோழர்களைப் பற்றி இப்போது என்ன கருதுகிறேன் என்றால், இன்று காங்கிரஸ் வேறு; கவர்ன்மென்ட் வேறு என்பதாக இல்லை. அவர்கள்தான் நாட்டை ஆளு கிறார்கள். அந்த ஆட்சி முறையில் பிரதம மந்திரி பண்டித நேருவினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு காரியம் நேரு சர்க்கார் அவர்களின் முத்திரை பெறுவது, சாதாரண நிலையில் அசாத்தியமானதாக இருக்க முடியுமா? அப்படி முத்திரை பெற்றுவிட்டால் காங்கிரஸ் தோழர்கள் தங்கள் தலைவர் முடிவு என்பதற்குத் தலைவணங்காமல் எப்படி இருக்க முடியும்? இது ஒரு சங்கடமான நிலைதான். ஆதலால் அதை அவர்கள் இங்கேயே கூற வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

கவனிக்க வேண்டும்: ஆனால் ஒரு எதிர்ப்பைச் சித்தரிக்க வேண்டி வந்தால் இந்த விஷயம் கவனிக்கப்பட வேண்டியதாகும் என்று சொல்லிவிட்டு, காங்கிரஸ் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுகிற அளவில் ஒரு சிறிய தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றலாம் என்று மேயர் அவர்கள் அனுமதியை எதிர்பார்த்துக் குறிப்பிடு கிறேன். அது என்னவென்றால் நாளது பிப்ரவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையைத் தமிழ்நாடு எங்கும் எல்லாக் கட்சியாரும் வாஞ்சு அறிக்கை கண்டன நாளாகக் கொண்டாட வேண்டுமென்று வேண்டுகோளும் அறிக்கை யும் விடுத்து இருக்கிறேன். அதுவும் “சென்னையைப் பொறுத்தவரையில் 22ஆம் தேதி தவிர்த்து வேறுநாள் வைத்துக் கொள்ளலாம்” என்று மேயர் யோசனையை அனுசரித்துப் பொது மக்களுக்குத் தெரிவித்து இருக்கிறேன்.

கடையடைப்பு நாள்: அது தவிர்த்து வாஞ்சு அறிக்கையைக் கண்டிக்கிற அளவில் ஒரு வாரத்திற் குள்ளாக ஒரு நாளில் தமிழ் நாடெங்கும் கடை அடைப்பு, அர்த்தால் நடத்தலாம் என்றும் அதற்கு ஒரு நாள் குறிப்பிட லாம் என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறேன்.

இதை மேயர் அவர்கள் ஏற்றால் ஓட்டுக்கு விடலாம்; இல்லாவிட்டால் நான் வலியுறுத்தவில்லை. ஏனென்றால் எந்தக் காரணத்தாலும் மேயர் அவர்களின் அதிருப்திக்கு இடம் தரும் காரியம் இங்கு நடக்கக் கூடாது என்பது எனது கருத்தும் கவலையும் ஆகும்.

நாம் ஒரு பலமான காரியத்தை எதிர்க்க வேண்டி யவர்கள் கூடிச் செய்கிற காரியத்தில் நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கக்கூடாது என்பது என் கருத்தாகும். (விடுதலை 17.02.1953)

மேலே கண்ட பெரியாரின் கடற்கரைச் சொற் பொழிவில் டாக்டர் லங்கா சுந்தரம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர் விசாகப்பட்டிணம் தொகுதி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர். 1952 முதல் நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஆந்திரப் பிரிவினையையும், சென்னை ஆந்திராவுக்கு மட்டுமே சொந்தம். சென்னை இல்லாத ஆந்திரா எங்களுக்குத் தேவை இல்லை என்று பேசியவர்.

கடற்கரைச் சொற்பொழிவில் பெரியார் கூறியபடி அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது வேலை நிறுத் தம் கடையடைப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

22.02.1953 அன்று சென்னை வந்த குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்துக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் குத்தூசி குருசாமி தலைமையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டினர். தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாஞ்சு அறிக்கை கண்டன நாள், “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” கொண்டாடப்பட்டது.

08.03.1953 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செட்டிநாட்டு முத்தையா செட்டியார் தலைமையில் கூடிய கூட்டத்தில் பேசிய ம.பொ.சி. “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், சர்வக்கட்சித் தலைவர்களும், சென்னைச் சட்டசபை ஆந்திரர் அல்லாத உறுப்பினர்கள் 200 பேரும், பார்லிமென்டிலிலுள்ள ஆந்திரர் அல்லாத உறுப்பினர்களும் பெரியார் ஈ.வெ.ரா.வும் எல்லோரும் சேர்ந்து மகஜர் மூலம் சென்னையில் ஆந்திரத் தலை நகரை ஒரு நாளைக்குக் கூட அமைக்கக் கூடாது என்று அறிவித்த பின்னும் சஞ்சீவ ரெட்டி கோரிக்கைக்கு மத்திய சர்க்கார் அசைந்து கொடுக்காது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பேசியுள்ளார். (விடுதலை 09.03.1953)

ஆந்திரத் தலைநகர் பிரச்சனை - சென்னையில் மாபெரும் கூட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியாலய செக்ரட்டரி என்.இ. ரகுநாதன் எழுது வதாவது:

16.02.1953ஆம் தேதி மாலை 6 மணிக் குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில், சென்னையில் தற்காலிகமாகக் கூட ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் நிறுவப்படுவதற்குத் தங்களின் உறுதியான எதிர்ப்பைக் காட்டு வதற்காகச் சர்வக்கட்சிப் பிரதிநிதித்துவ மடங்கிய ஒரு மாபெரும் கூட்டம் நடைபெறும்.

சென்னை மேயர் திரு.டி. செங்கல் வராயன் தலைமை வகிப்பார். பெரியார் ஈ.வெ. இராமசாமி, திருவாளர்கள் எம். பக்தவச்சலம், எஸ். முத்தையா முதலியார், எல்.எஸ். கரையாளர், ம.பொ. சிவஞானம் கிராமணி, கே. விநாயகம், உபயதுல்லா சாகெப், மீனாம்பாள் சிவராஜ் முதலியவர்கள் பேசுவார்கள். (விடுதலை 14.02.1953)

(தொடரும்)

Pin It