joining handsதிராவிட இயக்கத் தமிழர் பேரவையில், தமிழ்நாடு திராவிடர் கழகம் ஒன்றிணைவது வரவேற்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றியபோது தமிழர்கள் பெரும் நெருக்கடிகளுக்குள் இருந்தார்கள். ஏறத்தாழ இன்றைய சூழலும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு வகையினர் பார்ப்பனர், மற்றவர் பார்ப்பனரல்லாதார்.

பார்ப்பனரல்லாதாரில் பிற்படுத்தப் பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோரும் அடங்குவார்கள். இவர்கள் மக்கள் தொகையில் 97 விழுக்காடு இருக்கிறார்கள்.

மூன்று விழுக்காடு மட்டுமே இருக்கக்கூடிய பார்ப்பனர்கள், 97 விழுக்காடு இருக்கக்கூடிய பார்ப்பனர் அல்லாதவர்களைக் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு அடக்கி வந்தார்கள்.

சாதி, மத, மூட நம்பிக்கை இவைகளைக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளை வளர்ப்பதும், அதற்குக் கலவரங்களைத் தூண்டுவதும் பார்ப்பனிய அரசியலாக இருக்கிறது.

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் உருவெடுத்த பின்னர் பார்ப்பனரல்லாத மக்களுக்கான அரசியலை அது முன்னெடுத்தது.

தந்தை பெரியார் 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தை உருவாக்கிய பின்னர் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து பெரியாரின் பின்னால் அணிவகுக்கத் தொடங்கினார்கள்.

அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும், போராட்டங்களும் மக்களுக்குத் தன்னம்பிகையை ஊட்டின.

சாதி ஒழிய வேண்டும், பெண்களின் அடிமைத்தனம் நீங்கி அவர்கள் விடுதலை பெற வேண்டும். அன்றைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற இடஒதுக்கீடு என்ற பெரியாரியச் சிந்தனைகள் இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி, தமிழ்நாட்டைப் பெரியார் மண் ஆக்கியிருக்கிறார்கள் இன்று, அவர்கள்.

இத்தகைய சூழலில் ராஷ்டிரிய சுயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, வருணங்களாகப் பிரிந்துள்ள மக்களை இன்று இந்துக்கள் என்று சொல்லி அணி திரட்ட முயல்கிறது. அதற்கான அரசியல் அமைப்பான பாஜகவைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட இந்தச் சூழ்நிலையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையில், தோழர் கா.சு.நாகராசன் தலைமையிலான தமிழ்நாடு திராவிடர் கழகம் ஒன்றிணைகிறது.

இந்த இரண்டு இயக்கங்களுக்கும் தந்தை பெரியாரும் அவரது கொள்கைகளும் தலைமையாக இருக்கிறது. மதவாத அரசியலை எதிர்ப்பது, திராவிட அரசியலை இந்த மண்ணில் நிலைநிறுத்துவது என்ற கொள்கையில் இணைந்திருக்கிறது இந்த இரண்டு இயக்கங்கள்.

இதுவரை களத்தில் நின்று மக்களுக்காகப் பணியாற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையில், தமிழ்நாடு திராவிடர் கழகம் இணைந்து ஒரே தலைமையின் கீழ் பணியாற்றுவது காலத்தின் தேவையாகும். சுருங்கச் சொன்னால் கருஞ்சட்டைகள் இணைகின்றன, கோவையில்.

கருஞ்சட்டைகள் கைகோக்கட்டும்.

- எழில்.இளங்கோவன்

Pin It