மகளிர் அணி நடத்திய மன நிறைவான விழா
ஆண், பெண் என்னும் இருபாலின மக்களைத் தாண்டி, ‘திருநங்கையர்’ என்னும் தோழர்களை நம்மில் பலர் எண்ணியும் பார்ப்பதில்லை என்பதே உண்மை. அவர்களின் உலகம் தனி ஒரு உலகமாகவே உள்ளது. அவர்களைக் கேலி பேசுகின்றவர்களாகவே நாம் இருந்தோம். இன்று உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. நம் சமூகம் நாகரிகம் பெறத் தொடங்கியுள்ளது. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள், நமக்குள்ள உணர்ச்சிகள், தேவைகள் யாவும் அவர்களுக்கும் இருக்கின்றன என்பதை இப்போது உணரத் தொடங்கியுள்ளோம். அதன் வெளிப்பாடாக, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில், 20.11.2016 ஞாயிறு மாலை, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில், ‘திருநங்கையரைப் போற்றுவோம்“ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மகளிர் அணிச் செயலாளர் தோழர் மகாலட்சுமி தலைமை ஏற்க, தோழர்கள் இரா.உமா, கிரேஸ் பானு, கிருபா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மகளிர் அணியைச் சேர்ந்த தோழர்கள் நித்யா, மகேஸ்வரி, ஜனனி, தென்றல், சபானா ஆகியோரும், இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மு.மாறன், முத்தையா குமரன், தமிழ்மறவன், எட்வின் ஆகியோரும் பங்கேற்றுக் கருத்துரை ஆற்றினார். தோழர் தீபா தொகுப்புரை வழங்கினார். தாம்பரம் இளங்கோ ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
உமா, இளவரசி ஆகிய புதிய தோழர்கள் இயக்கத்தில் தங்களை பொதுச் செயலாளர் முன் இணைத்துக் கொண்டனர். கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்கான பத்து ஆண்டுக் கட்டணங்களாக ரூ.15000, சமூக வலைத்தள அணிச் செயலாளர் நித்யாவினாலும், ரூ.3000 மகளிர் அணிச் செயலாளர் மகாலட்சுமியாலும் வழங்கப்பட்டன.
ஆண்களை விடப் பெண்களும், பெண்களை விடத் திருநங்கையர்களும் போராடிப் போராடியே வாழ்வில் முன்னேறியுள்ளனர் என்றும், தங்களின் சொந்தக் குடும்பத்தாராலேயே ஒதுக்கப்பட்டு, பல்வேறு அவமானங்களைக் கடந்து இன்று திருநங்கையர் இந்த இடத்தை அடைந்துள்ளனர் என்றும், ஆணின் வலிமையையும், பெண்ணின் இரக்கமும் உடையவர்கள் திருநங்கையர் என்பதால் இருவரையும் விட மேலானவர்களாக உள்ளனர் என்றும், குழந்தைகள் உரிமை, பெண்கள் உரிமை என்றெல்லாம் தனித்தனியே பார்க்க வேண்டியதில்லை, மனித உரிமையே இங்கு வேண்டுவது என்றும் பல்வேறு கருத்துகள் கருத்தரங்கில் பேசப்பட்டன.
நேற்றுவரை அவர்களைக் கேலி செய்த நாம் பிறகு அவர்களின் மீது பரிவு காட்டினோம். இன்று அதனையும் கடந்து அவர்களுடன் தோழமை பூண்டுள்ளோம். இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் பால் வேறுபாடுகளைக் கடந்து சமூக மேம்பாட்டிற்கு இணைந்து நடப்போம் என்றார் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன்.