மார்ச் 8 - பெண்கள் நாள்
தனக்கென ஓர் அடையாளம், ஓர் ஏற்பிசைவு(அங்கீகாரம்), உரிமை இல்லாமல், எந்த ஒரு மனித உயிரும் இப்பூமிப்பந்தில், தன்மதிப்புடன் வாழ முடியாது. குறைந்தது, மனிதருள் தான் ஒரு பெண் அல்லது ஆண் என்கின்ற ‘பால் அடையாள உரிமை’யாவது வேண்டும். ஆனால் இப்படி எந்த உரிமையும் இன்றி ஒரு சமூகம் - மாற்றுப் பாலினத்தவர் எனப்படும் திருநங்கையர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் போக்கில் நிகழ்ந்து வருகின்ற பெரும்பாலான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற மனித சமூகம், இயற்கையாக உடற்கூறில் நிகழும் சிறு மாற்றத்தின் விளைவான மாற்றுப்பாலினத்தவரை மட்டும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. மண்ணைக் கீறி வெளிவரும் விதைகளைப் போல, வலிகளைக் கீறி எழுந்து, பல துறைகளிலும் வெற்றிவாகைசூடி வருபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநங்கை பிரியாபாபு.
ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்து உரையாடியபோது, தான் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், தன்னுடைய சமூகத்திற்குத் தான் செய்து வரும் பணிகளையும், மாற்றுப்பாலினத்தவர் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரியா தன்னை ஓர் எழுத்தாளர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்புவதாகக் கூறுகிறார். மும்பையில் வாழ்ந்தபோது, கடைகேட்கச் சென்ற இடத்தில், மும்பை தினபூமி நிருபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரின் ஊக்கப் படுத்துதலில், ‘விடியலை நோக்கி அலிகள்’ என்ற தொடரை தினபூமியில் எழுதியதாகவும், அதில் பல செய்திகளை வெளிப் படையாக எழுதியதால், திருநங்கையர் சமூகத்தில் இருந்தே தான் வெளியேற்றப்பட்டதாகப் பிரியா கூறும்போதே, அவருடைய சிந்தனை ஓட்டம் எப்படி இருந்திருக்கும் என்பது, அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசியபோது புரிந்தது.
‘முக்தாம்பர் டிரஸ்ட்’ நடத்திவந்த ஜி.ஆர்.கேர்னரின் அறிமுகம் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதாக நன்றியோடு நினைவுகூர்கிறார். அந்த டிரஸ்ட்டில் வேலை செய்த போதுதான், கள ஆய்வு, அலுவலக நிர்வாகம் பற்றிய பயிற்சி தனக்குக் கிடைத்தது என்றார். தன்னைப் பற்றி அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வந்தபிறகு, பல திருநங்கைகள் இதுபோன்று வேலை செய்ய முன்வந்ததைக் குறிப்பிட்டார்.
பிறகு, ஒத்த கருத்துடைய திருநங்கைகளை ஒருங்கி ணைத்து, Dai welfare society என்ற அமைப்பையும் நடத்தி யிருக்கிறார். அதோடு, Mumbai district Aids control society உடன் இணைந்து, எய்ட்ஸ் உள்ளிட்டப் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்.
‘பாலின அடையாளம் தவிர்த்து வேறு என்ன மாதிரியான புறக்கணிப்புகளைச் சந்திக்க நேர்கிறது’ என்று கேட்டபோது, சென்னையிலும், திருச்சியிலும் எச்.ஐ.வி தொடர்பான சமூகப் பணிகளைச் செய்தபோதுதான், சாதி வேறுபாடு என்னும், சமூகத்தின் மற்றொரு கொடுமையான பக்கத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார். இவற்றையயல்லாம் பார்த்தபோது, தான் செய்ய வேண்டிய வேலைகளின் எல்லைப் பரப்பு அதிகம் என்பதை உணர்ந்து, அதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிப் பதிவு செய்யச் சென்றபோது, இன்னொரு புதிய சிக்கலையும் எதிர்கொள்கிறார். பதிவாளர், அடையாளச் சான்று இருந்தால்தான் பதிவு செய்ய முடியும் என்று கூறிவிடுகிறார். ‘அடையாளம் ஏதுமற்று நின்ற அந்த நிமிடம், நெருப்பின் மீது நிற்பது போன்று தன்னைச் சுட்டெரித்ததாக’ சொன்னார்.
‘அடையாளச் சான்றுச் சிக்கலை எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று கேட்டோம்.
‘வழக்கறிஞர் ரஜினியின் அறிமுகம் கிடைத்தது. அடையாளச் சான்று சிக்கலைப் பற்றி அவரிடம் சொன்னோம். அப்போது 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டைக்கான எங்களின் கோரிக்கையை முன்வைக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தோம்.
2003, மார்ச் 6 ஆம் தேதி நானும், வழக்கறிஞர் ரஜினியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தோம். அதில் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டிருந்தோம். நீதிபதி சுபான் ரெட்டி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்படி ஒரு நிலை இருப்பது இதுவரை தனக்குத் தெரியாது. இது புது செய்தியாக உள்ளது. எனவே உலககெங்கும் இருக்கின்ற இது தொடர்பான செய்திகளைத் திரட்டித் தனக்குத் தந்தால்தான், சரியாக வழக்கு விசாரணையை நடத்த முடியும் என்றார். நாங்களும் கொடுத்தோம். தீர்ப்பு நாங்கள் விரும்பியபடியே கிடைத்தது. “திருநங்கைகள் தாங்கள் விரும்பும் பாலினத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்று சுபான் ரெட்டி தீர்ப்பளித்தார்”. இது சட்டத்தின் துணையோடு நாங்கள் அடைந்த முதல் வெற்றி’ ‘தீர்ப்புக்குப் பிறகு உங்கள் அனைவருக்கும் அடையாளச் சான்று கிடைத்ததா?’ என்று கேட்டபோது, ‘அனைவருக்கும் என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே ரேன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் பலருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிலும் பாலின அடையாளத்தைக் குறிப்பதில் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. காரணம் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வரும் அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு கொடுக்க வில்லை. எங்கள் போராட்டமும் ஓயவில்லை’ என்றார்.
‘சரி, சாதாரண மக்களோடு கலந்து பழகுவதில், அவர்களுக்கு நடுவில் வாழ்வதில் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிறது’ என்ற போது, முன்னைக்கு இப்போது கொஞ்சம் நல்ல மாற்றம் தெரிவதாகச் சொன்னார்.
‘எங்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதற்காகக் கண்ணாடிக் கலைக்குழு என்ற நாடகக் குழுவை நடத்தி வருகிறோம். இந்தியாவின் முதல் திருநங்கைகள் நாடகக் குழு இதுதான். எங்களோடு அ.மங்கை, மீனா சுவாமிநாதன், சிவகாமி ஐ.ஏ.எஸ். மற்றும் பல ஊடகத் துறை நண்பர்கள் எப்போதும் இணைந்திருக்கின்றனர்.’
இந்தச் சமூகம் கொடுத்த ஒவ்வொரு அடியும், பல அடிகள் அவருடைய செயல்பாடுகளை முன்னே உந்தித் தள்ளியிருக்கிறது.
முக்கியமாகக் குடும்பங்களின் புறக்கணிப்புத் தங்களின் வேதனையைப் பன்மடங்கு அதிகரிப்பதாகச் சொல்கிறார். அதிலும் உடன்பிறந்த ஆண்களும், தந்தையும்தான் மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கிறார். தன்னுடைய அண்ணன்கள் இன்றுவரை தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அக்காவும், அவருடைய வீட்டினரும் நல்ல தொடர்பில் இருப்பதாகவும் வேதனையோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய அம்மா எப்போதும் தனக்கு ஆதரவாகத் தன்னுடனே இருப்பதால்தான், தன்னால் போராடி வெற்றி பெற முடிந்தது. இதுபோன்ற ஆதரவு கிடைத்தால், ஒவ்வொரு திருநங்கையும் வெற்றியாளராக முடியும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரியாபாபு தனக்கு ஆன்மிக நம்பிக்கை உண்டென்றாலும், பெரியாரின் மனித நேயக் கொள்கைகள் தன்னை மிகவும் ஈர்த்திருக்கின்றன என்று சொல்கிறார். தன்னுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், விடியலுக்காகவும் தன் வாழ்நாளை செலவழித்துக் கொண்டிருக்கும் பிரியாவின் படைப்புகள், திருநங்கைகளின் வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன.
2008இல் அரவாணிகள் சமூக வரைவியல், 2009இல் மூன்றாம் பாலின் முகம், 2012இல் தமிழகத்தில் திருநங்கையரின் சமூக வரலாறு என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். மேலும், ‘தமிழகத்தில் திருநங்கையர் வழக்காறுகள்’, ‘திருநங்கைகள் வாழ்க்கையும் அவர்களின் வழிபாடும்’ ஆகிய தலைப்புகளில் ஆவணப் படங்களையும் எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், ‘க.சமுத்திரம் விளிம்புநிலை மக்கள் இலக்கிய விருது’ உள்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரின் தன்னலமற்ற சமூக சிந்தனைக்குச் சிகரம் வைத்ததுபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. பெரியார் விருது பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர் இவர்.
அவருக்கு வாழ்த்துகளையும், என்றென் றைக்குமான நம்முடைய ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுப் புறப் படும்போது, அவரும், அவருடைய பெருமைக் குரிய அம்மாவும், மானு உள்ளிட்ட இன்னும் சில திருநங்கையர் தோழிகளும் அன்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
நம்புங்கள் மனிதர்களே அவர்களும் மனிதர்கள்தான்!