பெண்ணியம், பெண் விடுதலை அல்லது பெண்கள் பெற வேண்டிய உரிமைகள் என்ற பெயரில் எவரொருவர் வலையுலகிலும், எழுத்துலகிலும் சில கருத்துக்களை முன் வைக்கும்போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ,அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன .

எது பெண்ணியம்? பெண்கள் பெற வேண்டிய உரிமைகளின் வரையறை என்ன? என்ன செய்தால் தான் உங்களது இந்த கோரிக்கைகள் அடங்கும்? உண்மையிலேயே பெண்ணடிமைத்தனம் என்ற ஒன்று இருக்கிறதா? பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டதற்கு ஆண்கள்தான் காரணமா? நீங்கள் எல்லாம் எந்த காலத்தில் இருக்கின்றீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்கள் நசுக்கப் படுகிறார்கள், அடிமைப் படுத்தப்படுகிறார்கள் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருப்பீர்கள்? நீங்கள் எல்லாம் சத்யம் தியேட்டர் வாசலிலும் ஸ்பென்சரிலும், IT கம்பெனிகளிலும் போய்ப் பார்த்ததில்லையா? அங்கே ஜீன்ஸ்-டீ ஷர்ட் அணிந்த எத்தனை பெண்கள் கார் , டூவிலரில் வந்த் இறங்குகிறார்கள் என்று பாருங்கள். உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றது. நீங்கள் கிணற்றுத் தவளையாய் இருக்கிறீர்கள்.

இவை ஒரு சாம்பிள்தான். இன்னும் இது போன்று எக்கச்சக்க கேள்விக் கணைகள் உடைப்பெடுத்த வாய்க்காலாய் பாய்ந்து வந்து விழுந்து கொண்டுதான் இருந்தன. இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் ஏற்கனவே பதில் சொல்லி மாய்ந்து போனவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் இங்கு நமது குடும்ப அமைப்புகளில் நாம் காலம் காலமாய் கேள்விகள் ஏதும் கேட்காமல் பின்பற்றிக் கொண்டு வரும் சில பல பழக்கங்களைப் பெண்ணியத்தினடிப்படையிலும், உடலியல் சார்ந்தும் கேள்விகளுக்குட்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம். சென்னை, பேங்களூரைத் தவிர்த்து , தாம்பரம் தாண்டியும், ஓசூருக்கு இந்தப் பக்கமும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முன் வராதவர்கள் சத்தம் போட்டுச் சொல்லிக் கொள்ளலாம் இவை யாவும் குப்பைகள் என்று.

ஏற்கனவே சொல்லி இருந்தது போல் நாம் காலம் காலமாய் சில விஷயங்களைக் கேள்விகள் கேட்காமல் செய்தே பழக்கப் பட்டு விட்டோம். ஆகையால் ஒரு சில விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டியோ, அல்லது எதிர்க்கும் பொருட்டோ கேள்விகள் எழுப்பும் பொழுது பதில் சொல்லத் தெரியா நம் இயலாமை எதிர் கேள்வி கேட்டவரை திமிர் பிடித்து, வீம்புக்கு கேட்பவராகவே பார்க்க பழக்கப்படுத்தி இருக்கின்றது. காலம் காலமாய் பெண்ணியம் சார்ந்து பேசுபவர்களுக்கு இந்தப் பட்டம் தாமதமில்லாமல் கிடைத்துக் கொண்டும் இருக்கின்றது. சரி ஒவ்வொன்றாய் வருவோம்.

நம் திருமண அமைப்பு முறையை சாதியக் கூறைத் தவிர்த்து பெண்ணியம் சார்ந்த பார்வையில் பார்க்கும் போது சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்தத் திருமண அமைப்புகள் பெண்களுக்கு மட்டும் அடையாளங்கள் வழங்குவது ஏன்? கழுத்தில் தாலி, நெற்றி வகிட்டில் குங்குமம், காலில் மெட்டி. கட்டியம் கட்டிக் கூறிடலாம், இவையாவும் கல்யாணம் ஆன ஒரு குடும்பப் பெண்ணின் அடையாளங்கள் என்று. சரி இத்தகு அடையாளங்கள் காலம் காலமாய் பெண்களுக்கென்று, பெண்களுக்கு மட்டுமேயென்று ஏற்படுத்தி வைக்கப்பட்டு இருப்பதேன்?

முன்பு ஒரு காலத்தில், பெண்கள் குனிந்த தலை நிமிராமல் நடப்பவர்கள். ஆண்கள் நெஞ்சை நிமிர்த்தி நடப்பவர்கள். அதனால்தான் ஆண்களுக்கு காலில் மெட்டியும், பெண்களுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம், மற்றும் கழுத்தில் தாலி ஆகியவை அடையாளங்களாக வழங்கப்பட்டது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மெட்டியும் பெண்ணிற்குரிய அடையாளங்களாகவே மாறிப்போனது.

இதற்கு முன்பு வேறு தளங்களில் இது குறித்து நடந்த விவாதங்களில் எல்லாம், இதற்கு பதிலாக, பெண்கள் வெளியிடங்களிற்குச் செல்லும் போது இந்த அடையாளங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஏனெனில் தவறு செய்ய நினைக்கும் ஆண்கள் கூட இந்த அடையாளங்களின் மூலம் திருமணமான பெண் என்று இனம் கண்டு கொண்டு ஒழுங்காக நடந்து கொள்வார்கள். ஆகையால் இவை பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆண்களிடம் சலனத்தை ஏற்படுத்தாமல் இருக்க பெண்கள் பர்தா அணிந்து இருப்பது அவசியம் என்று வலியுறுத்தப் படும் போதெல்லாம், என் மனதில் தோன்றிய கேள்விகள் திருமண அடையாளங்களைக் குறித்தும் இதே சாக்கு சொல்லும் போதும் மீண்டும் ஒரு முறை தோன்றும். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஆண்கள் தன்னைத் திருத்திக் கொள்ளாமல் இப்படியே இருந்துக் கொண்டிருக்க, அதை மாற்ற கையாலாகாமல் நாம் இப்படி பெண்களுக்கு மட்டுமே கடிவாளங்கள் இட்டுக் கொண்டிருப்போம்?

இதற்கு மாற்றாக நீங்களும் சில கேள்விகள் கேட்கலாம். பெண்கள் கலர் கலரா, டிசைன் டிசைனா ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் வெச்சுக்குவாங்க. நெக்லஸ், இரட்டை வட செயின், கல்மாலை, வெரைட்டி வெரைட்டியா மோதிரம் கொலுசுன்னெல்லாம் போட்டுக்குவாங்க. ஆனா உன் பாதுகாப்புக்காகத்தான்மான்னு குங்குமம், மெட்டி , தாலி போட்டுக்கோன்னா மட்டும் அடிமைப் புத்தின்னு பேசுவாங்க. இது எல்லாம் சும்மா பரபரப்புக்காக பண்றது என்று சொல்லலாம்.

கேள்வி கேட்பவர்களில் எவரேனும் ஒரு பெண்ணிற்கு கணவனை இழந்தவுடன், அதே தாலி, குங்குமத்தை வைத்து நடைபெறும் ஒப்பாரி சடங்குகளை பார்த்திருக்கிறீர்களா??? தோளில் துண்டுடன், மெலிதாய் கலங்கிய கண்களுடன், "ஆம்பிளை அழக்கூடாது" என்று ஆழ் மனதில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் வீறாப்புடன், வீட்டு வாசற்படியில் கை கட்டி நின்றுக் கொண்டிருக்கும் நமக்கு அதன் கொடூரம் ஒருவேளை உறைக்காமலே போகலாம். அந்த சடங்கு நடக்கும் போது முடிந்தால் ஒரு பத்து நிமிடம் போய் நின்று விட்டு அழாமல் வெளில வாங்க. அப்புறம் ஒத்துக்கறேன் ஆம்பளைங்க வீறாப்பான ஆளுங்கத்தான்னு.

பாதுகாப்புக்காகத்தான் என்றும், காஸ்மெடிக்காகத்தான் என்றும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இந்த சமூகம் குங்கும இத்யாதிகளை வைத்து மிக கொடூரமான சில சடங்குகளை பெண்களுக்காக பெண்களுக்கு மட்டுமே என்று கட்டமைத்துள்ளது. இதிலிருந்து வெளிபடவேண்டும் என்று நினைக்கும் பெண்களை திமிர் பிடித்தவர்களாக நாம் கற்பனை செய்து கொண்டால், அது யார் தவறு???( இந்த அடையாளங்களிற்கு வேறு ஏதேனும் நியாயமான காரணங்களை எவரேனும் விளக்கினால் இந்த நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொள்ள தயாராயிருக்கிறேன். ஆகையால் முன் முடிவுடன் இவன் பேசுகிறான். இவனிடம் பேசுவது வீண் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.)

கடந்த தலைமுறை வரை எடுத்துக் கொண்டால், திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கும், ஆணிற்கும் இடையே குறைந்தது 7 வருடங்களாவது வித்தியாசம் இருக்கும் .(7 என்பது சராசரிதான். 10 முதல் 15 வயது வரை வித்தியாசம் சர்வசாதாரணமாய் இருக்கும் தம்பதிகளை பார்த்திருக்கிறேன்). இந்த தலைமுறையில் இந்த வித்தியாசம் இரண்டு அல்லது மூன்றாகக் குறைந்திருக்கிறது.

IT ஃபீல்டைப் பற்றி ஆயிரத்தெட்டு குறை சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கேள்வி. அதில் இருக்கும் கார்ப்பரேட் கல்ச்சர் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் கம்பெனி C.E.O ஆகவே இருந்தாலும் அவர் பெயர் சொல்லிக் கூப்பிடலாம். இதன் மூலம் நம்மில் உயர்வு தாழ்வு இல்லை என்ற ஒரு தோழமை உணர்வு வளர்த்தெடுக்கப் படுகிறது.

இங்கே IT ஃபீல்டில் வேலை பார்த்துக் கொண்டு, தன்னைவிட பல வருடங்கள் வயதில் மூத்தவரும், தான் சார்ந்திருக்கும் ஒரு துறையில் ஒரு பெரிய புள்ளியுமான தன் உயரதிகாரியையே அலுவலகத்தில் சர்வசாதாரணமாய் பெயர் சொல்லி அழைக்கும் பெண்கள் கூட விட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் மட்டுமே மூத்தவராயிருந்தாலும், கணவன் எனும் காரணத்தினால் வாங்க போங்க என்று அழைக்கும் நாடகத்தன்மை யார் உருவாக்கி வைத்தது?

இதில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலபேரைப் பார்க்கும் போது என்னுள் இந்த கேள்வி வலுப்பெறுகிறது. கல்யாணத்திற்கு முன்பு வரை பெயர் சொல்லி என்ன வாடா, போடா என்று அழைத்துக் கொண்டிருக்கும் காதலிகள் கூட மனைவியானதும், "ரமேஷ் அப்பா" என்றோ, மாமா என்றோ, அத்தான் என்றோதான் விளித்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையாலுமே நாடகத் தன்மையாய், ஒரு பொய் பிம்பமாய் தெரியவில்லையா?

எனக்குத் தெரிந்த எல்லா பகுத்தறிவுவாதிகள் வீட்டிகளிலும், பெரும்பாலான கம்யூனிஸ்ட் வீட்களிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. வர்க்கப் புரட்சி செய்பவர்களும், சாதிய புரட்சி செய்பவர்களும் கூட இந்த நடைமுறைக்கு பழக்கப்பட்டுதான் இருக்கிறார்கள். எந்த வித தடங்கலும் இல்லாமல், நாம் ஆளுமை செலுத்த ஒரு ஜீவன் இருக்கிறது என்ற எண்ணம் எல்லார் மனதிலும் அழுத்தம் திருத்தமாய் பதிந்திருப்பதுதான் இதற்குக் காரணமோ?

பெண்ணியவாதிகள் கிணற்றுத் தவளைகள் என்று சொல்லும் எத்தனை பேர் வீட்டில் மனைவிகள் கணவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது என்றோ, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆகும் போது வெகு நிச்சயம் என் மனைவிக்கு விட்டுக் கொடுப்பேன் என்று கூறும் நண்பர்களே, உங்களுக்கு ஒன்று. இதை நீங்கள் விட்டுக் கொடுத்து உங்களை நீங்களே தியாகியாக நினைத்திக் கொள்ள வேண்டாம். இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இது தாமதமாகவேனும் நடந்தாக வேண்டும்.

மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாய் கேட்கிறேன். நம்மில் எத்தனை பேர் இந்த மாற்றம் நமது வீட்டில் நடக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்?

எனக்கு வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு மெகா சீரியல் பார்க்கும் பெண்கள் வேண்டாம். வேலைக்குப் போகக் கூடிய, வெளியுலக அனுபவம் இருக்கக் கூடிய பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் ஆண்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள்.

அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும் சிலர், தான் தனது மனைவியின் சமையல் வேலைகளில் உதவிகள் செய்வதை பெருமைடன் சொல்லிக் கொள்கின்றனர்(றோம்). ஆனால் ஒரு சிலர் காலை 10 மணிக்கு போயிட்டு, அதிகம் கஷ்டப்படாமல் வேலை செய்து 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடும் வேலை செய்யும் பெண்களாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கும் வசதி, எனக்கும் வசதி என்று தன் எதிர்பார்ப்புகளை முன் வைக்கின்றனர். ஏன்னா, வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. வீட்டு வேலையையும் அந்த பெண்ணே செஞ்சுக்கலாம் இல்லையா?

நம்மில் எத்தனை பேர், சமைப்பது பெண்கள் வேலை என்று சொல்லிக் கொண்டு கூட மாட ஒத்தாசை செய்வதை பெருமையாகவோ, தியாகமாகவோ நினைக்காமல், இருவருமே வேலைக்குப் போகும் குடும்பத்தில், சமைப்பது என்பதும் கூட இருவரின் வேலையும்தான், என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம்? "இன்னிக்கு நீ என்ன சமைக்கப் போற? வேணும்னா நான் காய் நறுக்கித் தரேன்" என்பதற்கும், "இன்னிக்கு நாம என்ன சமைக்கலாம்?" என்பதற்கும் இடையேயான, முகமூடியற்ற, போலித் தியாகங்களில்லா வித்தியாசங்களை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக் கொள்ள தயாராக உள்ளோம்.

இன்னும் இது போன்று பல கேள்விகளும், கோரிக்கைகளும் எழத்தான் செய்கின்றன? இவற்றிற்கு எல்லாம் தீர்வுதான் என்ன?

குடும்பம் எனும் சமூக அமைப்பில் த்ன்னையும், தனது உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு பெண் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்க வேண்டும். அவர்களை நாடகங்களின் மூலமே தான் பெற நினைப்பவைகளை பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டு, சாவகாசமாய் உட்கார்ந்துக் கொண்டு "பெண்களின் முக்கிய ஆயுதம் இரண்டு. ஒன்று அழுகை. இன்னொன்று கண்ணீர்" என்று வசனம் எழுதிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் ஒரு உண்மையான புரிதலுக்குத் தயாராயிருக்கிறோம்?

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களைப் பொறுத்த வரை "ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி"யாக இருந்து வருகிறது. மணப்பெண்கள் மகளுக்கு ஒப்பானவர்கள் என்று சொல்லி மாமியார்கள் உரிமை எடுத்துக் கொள்ளும் அதே வேளைகளில், மாப்பிள்ளைகள் இன்னும் மனைவியின் வீட்டின் கேள்விகளுக்கப்பாற்பட்ட எஜமானர்களாக வளைய வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்னும் நம் குடும்ப அமைப்புகளில் நடைபெறும் இது போன்ற பல போலித்தனங்களை பெண்ணியத்தினடிப்படையிலும், உடலியலினடிப்படையிலும் கேள்விப்படுத்தித்தான் ஆக வேண்டும். 

- நந்தா

Pin It