இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைப்பாவையாகப் பல்வேறு காரியங்களைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் ஏறத்தாழ 6.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். காரணம் அவர்கள் வெளியூரில் வேலை பார்க்கிறார்களாம்.
அந்த 6.5 லட்சம் வாக்காளர்களும் தமிழகத்தில்தான் புலம்பெயர்ந்த பணியாளர்களாக, கடைநிலை ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் வாக்குரிமை பீகாரில் பறிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொழிலாளர்களின் வாக்கை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இங்கே குழப்பம் விளைவிப்பதற்கு ஒன்றிய மோடிஅரசு தயாராகிவிட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்நாடு மக்களின் நலனைக் காக்கின்ற திராவிட மாடல் அரசு சிறப்பாக நடைபெற்று வருவது ஒன்றிய அரசுக்கு உடன்பாடு இல்லாததாகத் தோன்றுகிறது. வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பணியாளர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய வாக்குரிமை பீகாரில் இருக்கிறது, உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது, உத்தரகாண்டில் இருக்கிறது, ராஜஸ்தானில் இருக்கிறது, குஜராத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த பெரும்பான்மையான வட மாநிலத்தவர்கள் இங்கே வேலைக்காக வந்தவர்களின் வாக்குரிமைகள் அங்கே பறிக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அவர்களை எங்கே சேர்ப்பீர்கள் என்கின்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணியை சேர்ந்த 22 கட்சிகளும் இதேகேள்வியை முன்வைக்கின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லும் பொழுது அரசியல் சாசனத்தின் படி இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், வசிக்கவும் உரிமை இருக்கிறது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 19 இன் படி அவர்கள் வாழும் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள உரிமையும் இருக்கிறது என்று என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறது. சட்டத்தின் உதவியை வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் விளையாட்டைத் தொடங்கி இருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இந்த ஒன்றிய அரசின் இது போன்ற விளையாட்டுகளைத் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு எவ்வாறு முறியடிக்கப் போகிறது என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பணியாற்றி ஜிடிபி என்று சொல்லக்கூடிய வளர்ச்சி விகிதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரேமாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவானவர்கள் என்ற நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எந்தெந்த வகையில் இடையூறு செய்ய முடியுமோ, அந்த வகையில் எல்லாம் கொடுக்கும் இடையூறில் இதுவும் சேர்கிறது. தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியின் ஒரு பிரிவாகவே மாறிவிட்டதோ என்கின்ற சந்தேகம் பெருகி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆறு லட்சம் பீகார் வாக்காளர்கள் இணைக்கப் படுவார்களோ, இதன் மூலம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமோ என்கிற அச்சம் எழுகிறது. அதனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழரின் நலன் காக்கின்ற முறையில் அனைத்து அரசியல் கட்சி கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராடத் தயாராக முன்வர வேண்டும்.
இது தனிப்பட்ட கட்சி பிரச்சனையல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின், தமிழ்நாட்டின் மான, உரிமைப் பிரச்சனை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசின் 'புறவழி அரசியலை' முடிவுக்குக் கொண்டு வருவார், அவர் பின்னால் அணிவகுப்போம், தேர்தல் ஆணையச் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிப்போம்!
- சிற்பி செல்வராசு