தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தியுள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தால் சாதிச் சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்தல் போன்றவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக மக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குகின்றனர் என்பது மக்களுக்கு மிகவும் பயன் தருகின்ற திட்டம்.
இதைப் பொறுக்க முடியாமல் அரசு திட்டங்களுக்கு உங்களுடன் 'ஸ்டாலின்' என்று முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிதிமன்றம் போய்விட்டார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அரசியல் கட்சிகளின் சண்டைகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டாம் என்று காட்டமாகச் சொல்லி, சண்முகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் அவருக்குப் பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்து விட்டார்.
அதிமுக ஆட்சியின்போது அம்மா உணவகம் - அம்மா சிமென்ட்- அம்மா உப்பு - அம்மா மருந்தகம் - அம்மா குடிநீர்-அம்மா மகப்பேறு சஞ்சீவித்திட்டம் -அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம் என்று முன்னாள் முதல்வரின் பெயரில் திட்டங்களை நிறைவேற்றியதை மறந்துவிட்டாரா சி.வி.சண்முகம்?
கலைஞரால் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவ மனையாக்கிய ஜெயலலிதாவின் சிஷ்யர்தானே சண்முகம்.
எதிர்கட்சியை எதிரிக்கட்சியாகப் பார்க்கிறார் எடப்பாடி. சி.வி.சண்முகம் அதற்கு விதிவிலக்கல்ல.
பெயரில் என்ன இருக்கிறது? திட்டங்கள் மக்களுக்குப் பயன் தருகிறதா என்பதைக்கூட அறியாமல் சி.வி.சண்முகம் அவர்கள், தமிழ்நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்திருக்கிறார், என்பது வியப்பாக இருக்கிறது.
- கருஞ்சட்டைத் தமிழர்