புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு 2010 பிப்ரவரி 6, 7 இருநாட்கள் கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் திரளானோர் கலந்து கொண்டனர்.

        தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி, மத, கட்சி உணர்வுகளைத் துறந்து “தமிழர்” என்ற ஒரே அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற பிரகடனத்தை புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி முன்மொழிய கூடியிருந்தோர் கையொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஏற்றனர்.

        ஆனால் இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி மறுத்தது காவல் துறை. உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினார். ஆனால் அந்த அனுமதியில் திரு. பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட சிலரை அழைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.

        அதன் பிறகு, அம்மாநாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் உருவப்படங்கள், குறுந்தகடுகள், ஈழம் குறித்த நூல்கள் விற்கப்பட்டன என்று வழக்கறிஞர் கலையரசு, மருத்துவர் கிருட்டிணசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூவர் சிறைப்படுத்தப்பட்டனர்.

        எல்லாக் கொடுமைகளையும் விஞ்சக்கூடிய இன்னொரு கொடுமை, முன் அனுமதி பெறாமல் துண்டறிக்கைகள் வழங்கினார் என்று மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.

        “எலும்புக்கூடுகள் மீதும் நடைப்பிணங்கள் மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு” என்று தலைப்பிட்ட படைப்பாளிகள் முன்னணியின் துண்டறிக்கை வழங்கப்பட்டதற்குத் தான் மேற்படி வழக்கு.

        துண்டறிக்கை கொடுப்பதற்குக் கூட முன் அனுமதி பெற வேண்டுமெனில் இங்கு என்ன சனநாயகம் வாழ்கிறது? அப்படியே முன் அனுமதி கோரினால் கலைஞர் புகழும் பாரதமாதா பசனையும் பாடும் துண்டறிக்கைகளுக்கு மட்டும் தானே அனுமதி கொடுப்பார்கள்!

        எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இதெல்லாம் முன் அறிகுறிகள்! இப்பொழுதே எழுந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

- தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு

Pin It