கடந்த ஏப்ரல் 26 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் பிறந்தநாளில் ஓமந்தூரார் மாளிகையில் அவருக்கு சிலை நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

karunanidhi 253கலைஞரின் கனவுத் திட்டமான பன்னாட்டுத் தொழில்நுட்பத்துடன் திராவிடக் கட்டிடக் கலையையும் இணைத்து, இயற்கையை வரவேற்று, பல சூழலியல் நுணுக்கங்களுடன் நிறைவேற்றப்பட்ட ஓமந்தூரார் மாளிகை புதிய சட்டமன்றத் திட்டம் கொடியவர்களின் ஆட்சியில் முடக்கப்பட்டது.

ஓராண்டுக் காலம் சட்டமன்றமாக இருந்த அந்த மாபெரும் கட்டிடம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் மருத்துவமனையானது. கலைஞரின் பெயரை அழித்துவிடும் நோக்கில் அவர்கள் எடுத்த முயற்சி பல திராவிட நெஞ்சங்களில் உதிரப் பெருக்கை வரவழைத்தது. காலம் மருந்திடும் வேளை வந்தது போல தளபதியின் அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் செயல்பட்டு வந்தது. பல்வேறு நிர்வாக அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களை வாடகைக்கு எடுத்துச் செயல்படுகின்றன. கோட்டை வளாகம் நூற்றாண்டு கண்ட கட்டிடம் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் வளாகமாகவும் இந்தியத் துணை இராணுவக் கேந்திரமாகவும் இருப்பதும் தமிழ்நாட்டு நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. 1982 முதல் மாற்று வளாகத்தைத் தேடி வந்தோம். இறுதியாக கலைஞர் அவர்கள் 2008இல் ஓமந்தூரார் தோட்டத்தைத் தேர்வு செய்தார்.

சற்றொப்ப 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அந்த வளாகம் தலைமைச் செயலகம், சட்டமன்றம், மற்றும் நிர்வாக அலுவலகங்களை உள்ளடக்கியதாகத் திட்டமிடப்பட்டது. ரூ.450 கோடி மதிப்பில் உயர்ந்த ஜெர்மானிய தொழில் நுட்ப வசதியுடன் இயற்கைக் காற்றோட்ட வெளிச்ச வசதிகளை உள்ளடக்கி, 20%- 30% மின்சாரச் சேமிப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட ஆசியாவின் அழகிய ஓங்குதாங்கான கட்டிடம் அது. 2010ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டு ஒரு ஆண்டுக் காலம் செயல்பட்டது.

அந்த வளாகத்தின் பிரமிப்புக்குக் கலைஞரின் பெயர் வந்துவிடக் கூடாதென எண்ணிய சிறுமதியோர், அடுத்து 2ஜி எனும் மாபெரும் சதி வழக்கால் 2011இல் நடந்த ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி அதை மருத்துவமனையாக மாற்றினர். சட்டமன்ற வளாகக் கல்வெட்டையும் அப்புறப்படுத்தி தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டனர். கேட்பாரற்ற அராஜகம். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என அப்போது நீதிமன்றமும் கைவிரித்தது.

அவ்வளவு அநீதிகளையும் கணக்கிலெடுத்தது போலவும், உதிரம் வடியும் இதயங்களுக்கு மருந்திடுவது போலவும் ஆட்சி அமைத்த பின் கடந்த செப்டம்பர் மாதமே சட்டமன்ற வளாகத் திறப்பு கல்வெட்டை மீண்டும் நிறுவியது தி.மு.க. அரசு. தற்போது அங்கு கலைஞரின் சிலை நிறுவப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர்.! காத்திருப்போம் மேலும் நற்செய்திக்காக!

- சாரதாதேவி

Pin It