கருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 28, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை, அரசியலில் வன்முறைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வரவேற்க வேண்டிய அறிவிப்பு!

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? எந்தச் சூழலில் தமிழிசை இப்படிக் கூறியுள்ளார்?

கடந்த 26 ஆம் தேதி, நாகையில் நடைபெற்ற பாஜக பொறுப்பாளர் ஒருவர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள அவர் திருச்சியிலிருந்து, பல கார்கள் பின்தொடரச் சென்றுள்ளார். அந்த வண்டிகள் மயிலாடுதுறை வழியாகச் செல்லும்போது, அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஐவர் தமிழிசைக்குக் கறுப்புக்கொடி காட்டியுள்ளனர்.

காவலுக்கு நின்றிருந்த காவலர்கள் ஓடிவந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதற்குள்ளாக, தமிழிசையுடன் வந்தவர்கள் கார்களை விட்டு இறங்கி வந்து, சிறுத்தைகள் கட்சித் தோழர்களை அடிக்கத் தொடங்கியுள்ளனர். காவல்துறையினர் சிறுத்தைகளைத் தங்கள் ஊர்தியில் ஏற்றியுள்ளனர்.

அதற்குப் பிறகும், பாஜகவினர், காவல்துறை ஊர்தியைத் தாக்கி, கண்ணாடிகளையெல்லாம் உடைக்கும் காட்சியை எல்லா ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது. காவல் ஊர்திக்குள், பெரிய பெரிய கற்களை வீசி, உள்ளேயிருந்த சிறுத்தைத் தோழர்களைத் தாக்கினர். இறுதியில், ஒருவழியாக அங்கிருந்து ஊர்தி புறப்பட்டது. இதுதான் அங்கு நடந்தது.

இந்தச் சூழலில்தான் “வன்முறை கூடாது” என்று தமிழிசை அறிவுரை சொல்லியுள்ளார். யாருக்கு? தாக்குதலுக்கு உள்ளான விடுதலைச் சிறுத்தைகளுக்கு! கறுப்புக்கொடி காட்டுவது வன்முறையாகவும், கல்லெறிதல் நன்முறையாகவும் அவருக்குப் படுகிறது போலும்!

கறுப்புக்கொடி காட்டுவதென்பது ஜனநாயக வழிமுறைகளில் ஒன்று. எல்லாக் கட்சிகளும் அதனைச் செய்துள்ளன. பாஜகவும் அதற்கு விதிவிலக்கில்லை.  அதற்கு அனுமதி கொடுப்பதும், மறுப்பதும் காவல்துறையின் வேலை. காவல்துறை மறுத்தாலும், நீதிமன்றம் சென்று வாதிட முடியும். ஆனால் காவல் ஊர்தியைத் தாக்குவதும், கல்லெறிவதும் முழுக்க முழுக்க வன்முறை.

வன்முறையில் ஈடுபட்டவர்களே, வன்முறை கூடாது என்று அறிவுரை சொல்வது காலத்தின் கோலம்!

Pin It

கந்துவட்டி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உழைக்கும் மக்கள் அக்கொடுமையிலிருந்து மீள முடியாத சூழலை வட்டி வசூலிப்போர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

ஒரு இலட்சம் ரூபாய் வாங்குகிறவர்கள் ஒரே முறையில் திருப்பித் தர இயலாத நிலையில் தவணை முறையில் தரும்போது நான்கைந்து இலட்சம் வரை வசூலிப்பதும் தர மறுப்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதும், உதைப்பதும் பகிரங்கமாகவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

கொள்ளை நோயால் உயிரிழப்பு, வேலையின்மை, விவசாயம் செய்ய இயலாத நிலை, பணமதிப்பு இழப்பால் தொழில் நலிவு, பண இறுக்கம் அதனால் ஏற்படும் மன இறுக்கம், விலைவாசி உயர்வு, கிராம்புறங்களில் நூறுநாள் வேலைத் திட்டம் தொய்வு, தமிழக அ.தி.மு.க அரசின் தான் தோன்றித்தனமான போக்கு, மோடியின் மக்கள் விரோத அரசின் முட்டாள்தனமான திட்டங்களால் மேலும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், துன்பங்களும் சொல்லி மாளாதவை.

பொதுவாகவே இப்படிக் கந்து வட்டி தொடர்பாக அடிதடி, கட்ட பஞ்சாயத்து, நில மோசடி, கள்ளக் காதல் கொலைகள், குண்டு வீச்சு, மதக் கலவரம், மிரட்டல் போன்றவற்றைப் பெயரெடுத்த இந்துத்வா குண்டர்களே நடத்துவதால் அரசும், அதிகாரமும் தாராளமாய் அவர்களுக்குத் துணை போகின்றன.

கொடுத்தோரின் கொடுமை தாளாமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஆறுமுறை மனு அளித்தும் நியாயம் கிடைக்காத நிலையில் மனம் நொந்து தன் ஒன்றரை வயதும், அய்ந்து வயதுமான பிள்ளைகள் மனைவி ஆகியோரோடு தீக்குளித்து இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிலை என்ன என்பதை உலகுக்குப் பறை சாற்றினார் இசக்கிமுத்து.

இப்படி நாளும், பொழுதுமாய் கந்துவட்டியினரால் சப்தமின்றி பலருடைய மரணம் இந்த மண்ணில் தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது.

கந்து வட்டி தடுப்புச் சட்டங்களோ வெறும் ஏட்டுச் சுரைக்காயாய்ப் பயனற்று கிடக்கின்றன.

இதுவரை இப்பிரச்சினையில் விளக்கமோ, நடவடிக்கை குறித்த செய்திகளையோ வெளியிடாமல் அமைதி காக்கும் தமிழக அ.தி.மு.க அரசின் ஆணவத்தை என்னவென்று சொல்வது?

தான் வாங்கிய 1.45 இலட்சம் கடனுக்காக 2.50 இலட்சம் ரூபாய் கொடுத்தும் கொடுமைப்படுத்திய கந்துவட்டியினரை மட்டுமா கைது செய்வது?

வட்டி வசூலிக்க காவல்துறையே இசக்கி முத்துவின் வீட்டிற்க்கு சென்றதும், வட்டி கேட்டு மிரட்டியதும் சட்ட விரோத செயல் அல்லவா?

ஆறு முறை மனு அளித்தும் முறையாக பரிசீலிக்காத ஆட்சியரின் அலட்சியத்தை என்ன சொல்வது.

இவைகளை மூடி மறைக்க முயற்சிக்கும் பா.ஜ.கவின் பினாமி தமிழக அரசின் செயல் ஆணவப் போக்கு அல்லவா?

கந்துவட்டிக்காரர்களிடம் நத்திப் பிழைக்கும் அரசியல்வாதி, அரசு அதிகாரி எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும்.

இன்று நான்குபேரின் நிலையைப் போல், நாளை எத்தனை பேர்களோ என அச்சம் ஏற்படுகிறது. நடுவண் இந்துத்வா அரசும், மாநில அடிமை அரசும் மக்களைப் பற்றிச் சிறிதும் கவலையின்றித் தான்தோன்றித் தனமாக இருக்கின்றன.

மக்களோ ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்ப, உறவுகளின் செலவு, அடிப்படைத் தேவைகளுக்கே மனதளவில் தீக்குளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது போதாதென்று..,

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் இச்சம்பவத்தில் பகுத்தறிவை இணைத்து முடிச்சு போடுகிறார் “ஹரிஹர இராஜ ஷர்மா!”

பக்தி குறைந்ததும், பகுத்தறிவு வளர்ந்ததும் தான் தீக்குளிப்புக்கான காரணமென மனநோயாளி போல் உளறிக் கொட்டியிருக்கிறார் எச்.இராஜ சர்மா.

ஒரு கொடூரமான மரணத்திலும் அரசியல் செய்யும் இப்படிப்பட்ட இந்து வெறியர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

நந்தனாரையும், வள்ளளாரையும் தீயில் பொசுக்கிய பார்ப்பனக் கூட்டம் -

தமிழர்களின் வரலாற்றை யாகக்குண்டத் தீயில் எரித்த வர்ணாசிரமக் கூட்டம் -

கணவன் இறந்தவுடன் மனைவியை சேர்த்துத் தீயில் தள்ளிய ஆரிய ஹரிஹர ராஜ ஷர்மாக்கள் -

சீதையின் கற்பைச் சோதிக்கத் தீக்குளிக்க வைத்த இராமனின் தொண்டர் கூட்டம் -

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் குழு பரிந்துரைக்கு எதிராக டெல்லியில் அப்பாவியை நெருப்பைப் பற்றவைத்துக் கொன்ற இந்துத்வா கூட்டம் -

குஜராத்தில் முசுலீம் பெண்களையும், குழந்தைகளையும் எரியும் நெருப்பில் போட்டு “பாரத் மாதா கீ ஜே” எனக் கொக்கரித்த கூட்டம் -

மூவாயிரம் ஆண்டுகளாய் சூத்திர மக்களுக்கெதிராய் அக்கினி பகவானையே ஆயுதமாய் பயன்படுத்தியது இப்போது வாய் கிழிய நாடகமாடும் பார்ப்பன

எச்.ராஜ ஷர்மா இந்துத்வா கூட்டமன்றோ!

ஆனால் இவைகளை எல்லாம் முழுச் சோற்றில் பூசனிக்காய் மறைப்பதைப் போல் பேசுவதை என்னவென்று சொல்ல!

“எம் மக்களின் பணமும், நேரமும் வீண் சடங்குகளுக்காகவும், சம்பிரதாயத்திற்காகவுமே அழிக்கப்பட்டு வருகிறதே” என வேதனைப்பட்டு, பார்ப்பன இந்து மத அயோக்கியச் செயல்களைத் தோலுரித்து, சிக்கனத்தையும், சேமிப்பையும் எமக்கு கற்றுத்தந்த அறிவு ஆசான் தந்தை பெரியாரையும், பகுத்தறிவையும் சாடுகிற பார்ப்பன இராஜாக்களின் சதிப் பேச்சுக்கள் இனி இங்கே எடுபடாது.

ஏனெனில் “பெரியார்” என்பது ஓர் மனிதரைக் குறிப்பதன்று; பெரியாரென்பது அடக்குமுறைக்கெதிரான கருத்தியல்.

கடவுளோ, கந்து வட்டியோ எதுவாயினும் சுரண்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், அடிமை முறைக்கும் எதிராய்ப் பெரியார் என்றென்றும் எழுவார்.

இது பெரியார் மண். இங்கே பார்ப்பன பசப்பு வார்த்தைகள் இனி மனநோயாளிகளின் உளறல்களாகவே கொள்ளப்படும்.

தீக்குளிப்பினால் ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் இழப்பை மனிதாபிமானத்தோடு அணுகாமல் மதவெறியோடு அணுகும் மனித வடிவில் உலவும் மிருகங்களை இனி நாட்டில் அதிகம் பேச வைப்பதே சமூக நீதிக்குப் பேராபத்து.

நீட் தேர்வின் நெருக்கடியால் தூக்கிலிடப்பட்ட அனிதா, சாதிய வெறிக்குப் பலியான இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், பார்ப்பன வெறிக்கு பலியான இராம் குமார், கந்து வட்டிக் கொலைகள் என இக் கொடுமைகளை மக்கள் பார்த்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

ஒரிருநாள் வருத்தம், அஞ்சலி, கண்டனம் என்பதோடு கடந்து போய்விடாமல் அத்துனை அரச பயங்கரவாதப் பச்சைப் படுகொலைகளும் பட்டியலிட்டு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் எச்.இராஜாக்களின் கருத்தியலை ஒழிக்க வேண்டியது கருஞ்சட்டைகளின் தொடர் பணியாக்குவோம்.

இசக்கிமுத்துவின் குடும்ப இழப்பின் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காதவாறு சட்டங்கள் நேர்மையாய் அமல்படுத்திட வேண்டும்.

இல்லையேல்..,

இதேநிலை நீடிக்குமானால் மக்களின் மனங்களில் உள்ளே சிவந்துக் கொண்டிருக்கும் நெருப்புக் கங்குகள் ஆட்சியாளர்களையும், குறிப்பாக எம் மக்களின் இழப்பை கேலிக் கூத்தாக்கும் எச்.இராஜாக்களின் இந்துத்வா, பா.ஜ.கவையும் நோக்கிப் பாயும்!

Pin It

குஜராத்தைச் சேர்ந்த மோடி - அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகப் படுகொலைச் சித்துவிளையாட்டுகளில் ஒன்றாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குஜராத் தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய தேர்தல் ஆனையம், அம்மாநிலத்தில் சலுகைகள் எல்லாம் அறிவித்த பின்னர் டிசம்பரில் தேர்தல் என்று அறிவிக்கிறது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

குஜராத் தேர்தல் தேதி அறிவித்த போதே, சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவித்திருக்க வேண்டும். அறிவிக்கவில்லை தேர்தல் ஆணையம்.

இன்றைய சூழலில் மக்களின் மனமாற்றத்தால் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னத்தின் மூலமாவது தற்காத்துக்கொள்ள நினைக்கிறது.

தன் கைப்பாவைக்கு இலையை ஒதுக்கித் தேர்தலை நடத்த மத்திய அரசு நினைக்கிறது. அதனால் தேர்தலைத் தள்ளிப்போடுகிறது தேர்தல் ஆணையம் என்பது மக்களின் எண்ணம்.

இது ஒரு புறம் இருக்க, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களில் 6ல் ஒரு பகுதியினர் போலி வாக்காளர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது தி.மு.க.

ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 192, 193, 195, 198, 201 பகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன என்றும் -

அதில் 1,700 வாக்காளர்கள் பெயர்கள், இணையத்தில் பதிவாகியுள்ள பெயர்களுக்கு முரணாக உள்ளன என்றும் -

இல்லாத ஆள்களின் பெயர்கள், இடம் மாறியுள்ளவர்கள் பெயர்கள், இறந்தவர்களின் பெயர்கள் என்று 43,861 பெயர்கள் போலி வாக்காளர்களாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றும்  தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டியது தி.மு.க.

ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் நீதி மன்றத்தை தி.மு.க. நாடியுள்ளது.

போலி வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தக் கூடாது. தேர்தல் தேதி அறிவித்தால் அதற்குப் பின் இப்போலி வாக்காளர் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவது சாத்தியமற்றுப் போய்விடும் என்பது தி.மு.க.வின் நியாயமான வாதம்.

இன்னொரு புறம்...

ஏற்கனவே நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு அப்பட்டமாகப் பணம் கொடுத்துத் தொப்பி போட்டவர் டி.டி.வி.தினகரன்.

அதுமட்டுமன்று!

இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக இலஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது எழுந்த குற்றச்சாட்டும் அப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இ.பி.எஸ். அணியினர் கையில் அதிகாரம் இருந்தது. பணப்பட்டுவாடாவில் அவர்கள் பங்கும் வெளிச்சம் ஆனது.

அதனால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலை இப்பொழுது எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த தொகுதி மக்கள்.

பணம், அதிகாரம், மத்திய அரசின் பின்பலம், தேர்தல் ஆணையத்தின் தள்ளாட்டம் இப்படித்தான் தொகுதி மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இடைத்தேர்தலை.

நேர்மை என்றும் வீழாது. அநியாயம் என்றும் வெல்லாது.

சூரியனின் வெப்பத்தை; இனி, இலையோடு இருக்கும் தாமரைத் தாங்காது என்பதை உறுதி செய்ய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

Pin It

பழனி முருகன் கோயில் படிக்கட்டில் விழி ஒளி இழந்த பிச்சைக்காரர் ஒரு முறை சொன்னார்.

“என்னய்யா நிதி அமைச்சகம், ஒரு ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் வித்தியாசமே இல்லாம, ஒரே அளவுல அடிச்சி வச்சிருக்கானுங்க.. , எனக்குத்தான் கண்ணு தெரியலன்னு பார்த்தேன் அவிங்களுக்குமா?” என எகத்தாளமாக கேட்டார். அவர் சொல்வதில் சற்றும் பிழையில்லை. பொருளாதாரத்தில் அரசு எடுக்கும் முடிவுகள் எல்லாம் உண்மையிலே யாரைத் திருப்திப் படுத்துவதற்கு என்று நமக்குத் தெரியவில்லை.

கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டி ஆளாளுக்கு மக்களுக்குப் பங்குபிரித்து ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் போடுகிறேன் என்றுதான் வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். ஏதேதோ வித்தைகள் செய்து பலிக்காமல் கடைசியாய் நம்மை “ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை” செய்யுங்கள் என்று சொல்லி இணையதளச் சேவையினை நம்மீது திணித்தார்கள். ஒரு புறம் நாம் பொருளாதாரச் சுரண்டல்களைக் கண்டித்தாலும் நாம் புதிய தொழில் நுட்பங்களுக்கு எதிரிகள் அல்லர் என்ற புரிதல் நமக்கு நன்றாகவே இருக்கிறது.  இந்தப் பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு எண்ணற்ற தனியார் இணையதளச் சேவைகள் களத்தில் குதித்துவிட்டனர். அவற்றை எப்போதும் நாம் ஊக்கப்படுத்துவதற்கு மனம் வருவதில்லை.

செல்லுமிடமெல்லாம் கடனட்டை தூக்கிக்கொண்டும் செல்ல முடியவில்லை.  தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திர அறை எப்போதும் நமக்கு திகிலூட்டுவதாகவே இருக்கிறது. இதையெல்லாம் எளிதில் கடந்து போக நமக்கு உதவுகிறது ஒரு அற்புதமான செயலி. இனி, போகுமிடமெல்லாம் கடன் அட்டையினைத் தூக்கிக் கொண்டு திரியத் தேவையில்லை.

பிளே ஸ்டோருக்கு சென்று BHIM  என தட்டச்சு செய்யுங்கள். இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் செயலியை நீங்கள் காணலாம். இது National Payments Corporation of India (NPCI)Finance என்ற நிதி அமைச்சகத்தால் ஒப்பளிக்கப்பட்ட செயலியாகும்.

இதனைத் தரவிறக்கம் செய்து உள்ளே சென்ற உடன்  உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப் பெற்ற சிம் எண்களை இது சரிபார்க்கும்.  ஒரு வேளை உங்களுக்கு போனில் இரண்டு சிம் இருக்குமானால் சரியான சிம் எண்ணைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதனைச் சரிபார்க்க SMS  கட்டணம் மட்டும்  பிடித்துக்கொள்வார்கள். இக் கட்டணக் கழிவு முதல் முறை மட்டுமே. அடுத்த முறை பிடிக்க மாட்டார்கள். இந்தச் செயலி தமிழ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மொழியில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

இப்போது உங்கள் வங்கிப் பண அட்டையை (Debit Card) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள கடைசி ஆறு இலக்க எண்களை அதில் உள்ளீடு  செய்யுங்கள். அட்டையில் உள்ள  காலாவதியாகும் நாளையும் பதிவு செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு நான்கு இலக்க OTP எண் வரும். இதனை உள்ளீடு செய்தால் போதுமானது. உங்கள் வங்கிக் கணக்குடன் இந்த செயலி அடுத்த நொடியே இணைக்கப்பட்டுவிடும்.

இரண்டு மூன்று வங்கிகளில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், எந்த வங்கி உங்களுக்கு தோது படுமோ அதற்கு  மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இந்தச் செயலியினை நீங்கள் திறக்க ஒரு நான்கு இலக்க எண்ணை உருவாக்கிக்  கொள்ளுங்கள். 

செயலியினுள் Send, Request, என பிரிவிற்குள் சென்று நாம் யாருக்கு வேண்டுமானும் பணத்தினை அடுத்த நொடிப்பொழுதே அனுப்பலாம். அவர்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண், மொபைல் எண் இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட போதுமானது. ஒரு ரூபாயில் இருந்து பத்தாயிரம் வரையில் ஒரு தவணையில் அனுப்பலாம். நாளொன்றுக்கு இருபதாயிரம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

Upi address என்று சொல்லக்கூடிய முகவரியினை நாமே வடிவமைத்துக் கொள்ளலாம். யாரேனும் நமக்குப் பணம் அனுப்ப வேண்டியிருப்பின் அவர்களுக்கு நம் கணக்கு எண் கூட வழங்கத்தேவையில்லை, UPI  முகவரி மட்டும் வழங்கினாலே போதும். பணப்பரிவர்த்தனைக்கு

Passcode  நாம் நிர்ணயிக்க வேண்டும். அது ஆறு இலக்கம்  கொண்டதாக இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் நாம் பணம் அனுப்ப வேண்டும்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் UPI code என்பது செயலியை திறக்கவும், Pass Code  என்பது பணப் பரிவர்த்தனை செய்யவும் உதவுகிறது. ஒரு முறை பயன்படுத்தினால் போதும் மிக எளிமையாக எப்படிப் பணம் அனுப்புவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் நண்பர்களுக்கு, வெளியூரில் உள்ள உங்கள் உறவினருக்கு, அங்காடிகளில் பொருட்கள் வாங்குவதற்கு, உங்கள் கடன் தவணைகளைக் கட்டுவதற்கு என உட்கார்ந்த இடத்திலேயே மிக எளிமையாக உங்கள் வங்கிக் கணக்கினை நீங்கள் கையாள முடியும். தேவைக்கேற்ப இதில் பார் கோடு என்று சொல்லக்கூடிய கணினிக் குறியீட்டைத் தரவிறக்கம் செய்தால் நொடிப்பொழுதில் மிகச்சரியாக பணப் பரிவர்த்தனை செய்ய இயலும். நாம் அனுப்பிய பணம் போய்ச் சேரவில்லை என்றாலோ, இணைய இணைப்பில் ஏதேனும் கோளாறு என்றாலோ Pending  என்ற கலத்தில் நிற்கும்.

நீங்கள் அடிக்கடி தொடர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கினை சேமித்து வைத்துக்கொண்டால் ஒரே சொடுக்கில் பணம் அனுப்பிவிடலாம். UPI code‹,ம், Pass Codeம் இருந்தால்தான் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதால் நமது செல்பேசி தொலைந்து போனால்கூட வேறு யாரும் எடுத்து இதனைப் பயன்படுத்திவிட முடியது. எனவே இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

இந்தச் செயலியினைத் தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினைச் சொடுக்கவும். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp&hl=en   

Pin It