சென்ற வாரம் நம்மை அழைத்து, நம்முடைய திராவிடத் தமிழர் அறக்கட்டளைக்காக ரூ.20000/- நன்கொடை அளித்த, அய்யா நீடாமங்கலம் பி.வி. ராஜகோபால் அவர்கள், இந்த வாரம் உயிருடன் இல்லை. 17.10.17 இரவு, தன் 85 ஆவது அகவையில் அவர் மறைந்துவிட்டார்.
தன் வாழ்வை மட்டுமின்றித் தன் மரணத்தையும் அவர் திட்டமிட்டுள்ளார் என்பது வியப்பான செய்தி. இரண்டு மாதங்களுக்கு முன்பே, தன் துணைவியார் சுலோச்சனா அம்மையாரிடமும், தன் மைத்துனர் பேராசிரியர் மாணிக்கவாசகத்திடமும், தன் இறுதி நிகழ்வுகள் எப்படி நடக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.
“நான் காலமெல்லாம் சுயமரியாதைக்காரனாக வாழ்ந்தவன். என் இறுதி நிகழ்வும் எந்த சாதி, மதச் சடங்கும் இல்லாமல் நடத்தப்பட்டு, ஒரு சுயமரியாதைக்காரனாகவே என்னை நீங்கள் வழியனுப்ப வேண்டும்“ என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன் படத்திறப்புக்கு மட்டும் ஒப்புதல் அளித்த அவர், அந்தப் படத்தையும் தானே சரிபார்த்து ‘இந்தப் படத்தைத் திறந்திடுக’ என்று கூறியதோடு, தம்பி சுபவீயை வைத்து படத் திறப்பு நிகழ்வை நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.
எனவே அவர் விருப்பப்படி, அவர் தேர்ந்தெடுத்த படத்தை, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் அக்டோபர் 20 காலை, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திறந்து வைத்தேன். நான் நெகிழ்ந்து போன நிமிடம் அது!
அவர்கள் இல்லத்திற்கு விருந்தினனாகச் சென்ற நான், ஓர் உறவினனாகத் திரும்பினேன். “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?”