கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பழனி முருகன் கோயில் படிக்கட்டில் விழி ஒளி இழந்த பிச்சைக்காரர் ஒரு முறை சொன்னார்.

“என்னய்யா நிதி அமைச்சகம், ஒரு ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் வித்தியாசமே இல்லாம, ஒரே அளவுல அடிச்சி வச்சிருக்கானுங்க.. , எனக்குத்தான் கண்ணு தெரியலன்னு பார்த்தேன் அவிங்களுக்குமா?” என எகத்தாளமாக கேட்டார். அவர் சொல்வதில் சற்றும் பிழையில்லை. பொருளாதாரத்தில் அரசு எடுக்கும் முடிவுகள் எல்லாம் உண்மையிலே யாரைத் திருப்திப் படுத்துவதற்கு என்று நமக்குத் தெரியவில்லை.

கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டி ஆளாளுக்கு மக்களுக்குப் பங்குபிரித்து ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் போடுகிறேன் என்றுதான் வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள். ஏதேதோ வித்தைகள் செய்து பலிக்காமல் கடைசியாய் நம்மை “ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை” செய்யுங்கள் என்று சொல்லி இணையதளச் சேவையினை நம்மீது திணித்தார்கள். ஒரு புறம் நாம் பொருளாதாரச் சுரண்டல்களைக் கண்டித்தாலும் நாம் புதிய தொழில் நுட்பங்களுக்கு எதிரிகள் அல்லர் என்ற புரிதல் நமக்கு நன்றாகவே இருக்கிறது.  இந்தப் பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு எண்ணற்ற தனியார் இணையதளச் சேவைகள் களத்தில் குதித்துவிட்டனர். அவற்றை எப்போதும் நாம் ஊக்கப்படுத்துவதற்கு மனம் வருவதில்லை.

செல்லுமிடமெல்லாம் கடனட்டை தூக்கிக்கொண்டும் செல்ல முடியவில்லை.  தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திர அறை எப்போதும் நமக்கு திகிலூட்டுவதாகவே இருக்கிறது. இதையெல்லாம் எளிதில் கடந்து போக நமக்கு உதவுகிறது ஒரு அற்புதமான செயலி. இனி, போகுமிடமெல்லாம் கடன் அட்டையினைத் தூக்கிக் கொண்டு திரியத் தேவையில்லை.

பிளே ஸ்டோருக்கு சென்று BHIM  என தட்டச்சு செய்யுங்கள். இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் செயலியை நீங்கள் காணலாம். இது National Payments Corporation of India (NPCI)Finance என்ற நிதி அமைச்சகத்தால் ஒப்பளிக்கப்பட்ட செயலியாகும்.

இதனைத் தரவிறக்கம் செய்து உள்ளே சென்ற உடன்  உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப் பெற்ற சிம் எண்களை இது சரிபார்க்கும்.  ஒரு வேளை உங்களுக்கு போனில் இரண்டு சிம் இருக்குமானால் சரியான சிம் எண்ணைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதனைச் சரிபார்க்க SMS  கட்டணம் மட்டும்  பிடித்துக்கொள்வார்கள். இக் கட்டணக் கழிவு முதல் முறை மட்டுமே. அடுத்த முறை பிடிக்க மாட்டார்கள். இந்தச் செயலி தமிழ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மொழியில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

இப்போது உங்கள் வங்கிப் பண அட்டையை (Debit Card) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள கடைசி ஆறு இலக்க எண்களை அதில் உள்ளீடு  செய்யுங்கள். அட்டையில் உள்ள  காலாவதியாகும் நாளையும் பதிவு செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு நான்கு இலக்க OTP எண் வரும். இதனை உள்ளீடு செய்தால் போதுமானது. உங்கள் வங்கிக் கணக்குடன் இந்த செயலி அடுத்த நொடியே இணைக்கப்பட்டுவிடும்.

இரண்டு மூன்று வங்கிகளில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், எந்த வங்கி உங்களுக்கு தோது படுமோ அதற்கு  மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இந்தச் செயலியினை நீங்கள் திறக்க ஒரு நான்கு இலக்க எண்ணை உருவாக்கிக்  கொள்ளுங்கள். 

செயலியினுள் Send, Request, என பிரிவிற்குள் சென்று நாம் யாருக்கு வேண்டுமானும் பணத்தினை அடுத்த நொடிப்பொழுதே அனுப்பலாம். அவர்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண், மொபைல் எண் இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட போதுமானது. ஒரு ரூபாயில் இருந்து பத்தாயிரம் வரையில் ஒரு தவணையில் அனுப்பலாம். நாளொன்றுக்கு இருபதாயிரம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

Upi address என்று சொல்லக்கூடிய முகவரியினை நாமே வடிவமைத்துக் கொள்ளலாம். யாரேனும் நமக்குப் பணம் அனுப்ப வேண்டியிருப்பின் அவர்களுக்கு நம் கணக்கு எண் கூட வழங்கத்தேவையில்லை, UPI  முகவரி மட்டும் வழங்கினாலே போதும். பணப்பரிவர்த்தனைக்கு

Passcode  நாம் நிர்ணயிக்க வேண்டும். அது ஆறு இலக்கம்  கொண்டதாக இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் நாம் பணம் அனுப்ப வேண்டும்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் UPI code என்பது செயலியை திறக்கவும், Pass Code  என்பது பணப் பரிவர்த்தனை செய்யவும் உதவுகிறது. ஒரு முறை பயன்படுத்தினால் போதும் மிக எளிமையாக எப்படிப் பணம் அனுப்புவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் நண்பர்களுக்கு, வெளியூரில் உள்ள உங்கள் உறவினருக்கு, அங்காடிகளில் பொருட்கள் வாங்குவதற்கு, உங்கள் கடன் தவணைகளைக் கட்டுவதற்கு என உட்கார்ந்த இடத்திலேயே மிக எளிமையாக உங்கள் வங்கிக் கணக்கினை நீங்கள் கையாள முடியும். தேவைக்கேற்ப இதில் பார் கோடு என்று சொல்லக்கூடிய கணினிக் குறியீட்டைத் தரவிறக்கம் செய்தால் நொடிப்பொழுதில் மிகச்சரியாக பணப் பரிவர்த்தனை செய்ய இயலும். நாம் அனுப்பிய பணம் போய்ச் சேரவில்லை என்றாலோ, இணைய இணைப்பில் ஏதேனும் கோளாறு என்றாலோ Pending  என்ற கலத்தில் நிற்கும்.

நீங்கள் அடிக்கடி தொடர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கினை சேமித்து வைத்துக்கொண்டால் ஒரே சொடுக்கில் பணம் அனுப்பிவிடலாம். UPI code‹,ம், Pass Codeம் இருந்தால்தான் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதால் நமது செல்பேசி தொலைந்து போனால்கூட வேறு யாரும் எடுத்து இதனைப் பயன்படுத்திவிட முடியது. எனவே இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

இந்தச் செயலியினைத் தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினைச் சொடுக்கவும். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp&hl=en