ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று இரட்டை இலைக்கு வாக்களித்தவர்களுள், மக்கள் நலப்பணியாளர்களும் இருப்பார்கள்.

மாற்றம் ஆட்சியில் ஏற்பட்டது. ஏமாற்றம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையில் ஏறிவிட்டது.

ஏமாற்றம் அவர்களுக்கு மட்டுமன்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும்.

மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட எழிலோவியமான புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றது புதிய ஜெயா அரசு. இன்று வழக்கு நீதிமன்றத்தில்.

உலகச் சிறப்புடைய அறிஞர் அண்ணா நூலகம் டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றது அரசு. இதுவும் வழக்கானது நீதிமன்றத்தில்.

சமச்சீர் கல்வியே கூடாது என ஓர் அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதுவும் நீதிமன்றத்தில் போய் நின்றது.

இவற்றுக்கென்ன காரணம்? இவை எல்லாம் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நாடும் மக்களும் பயன்பெறக் கூடியவை.

என்னதான் மக்கள் பயன் அடைந்தாலும், அதனால் முன்னேற்றம் கண்டாலும், அவை பற்றி எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் அவை கலைஞரால் கொண்டுவரப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக அவைகளை மாற்றுவதும், தூக்கி எறிவதும்தான் ஜெயலலிதாவின் குணம்.

சமச்சீர்க் கல்வியானாலும் சரி,

புதிய தலைமைச் செயலகமானாலும் சரி,

அறிஞர் அண்ணா நூலகமானாலும் சரி

எல்லாமே நீதிமன்றக் கண்டனங்களுக்கு ஆட்பட்டு, நீதிமன்ற வழிகாட்டு தலின் பேரில் நடக்க வேண்டிய அளவுக்கு இந்த அரசு அமைந்து விட்டது.

அதுவேதான் மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்க்கையிலும் நடந்தது. தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்பதனால், 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வேலை இழந்தார்கள் அ.தி.மு.க. ஆட்சியில்.

பணியிழந்த அந்தப் பெருமக்கள் போராடினார்கள். பயன் இல்லை. நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார்கள். மக்கள்  நலப்பணியாளர்களைப் பந்தாடுவதா? அவர்களைப் பணியில் இருந்து நீக்கியது தவறு. உடனே அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் இதுவரை ஒருவருக்குக்கூட பணி மீண்டும் கிடைக்கவில்லை.

அரசுத் தரப்பில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் சாக்குபோக்கு சொல்வதிலும், வாய்தா வாங்குவதிலும் காட்டுகின்ற அக்கறையில் ஒரு துளிகூட பணியிழந்து வாடும் இந்த மக்களின் வாழ்க்கையில் காட்டவில்லை.

மக்கள் நலப்பணியாளர்களுக்குப் பணிவழங்க ¼வ்ணடும் என்ற நீதிமன்ற உத்தரவை இந்த அரசு புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

அது மட்டுமன்று, இது ஒரு சமூக அவமதிப்பும் கூட.

திருச்சியில் மறியல்,

கடலூரில் கஞ்சித் தொட்டி,

சேலத்தில் ஆர்ப்பாட்டம்

இப்படி இன்னமும் இந்த மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வறுமையின் கோரம். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் அதற்கு முயன்றனர். சிலர் மாரடைப்பால் மரணம் எய்தினர்.

கொடுமை கொடுமை என்று "கோயிலுக்கு'ச் சென்றவர்கள் அங்கேயும் கொடுமையைத்தான் காண்கிறார்கள்.

யாருடைய திட்டம் இவை என்று பார்ப்பதும், மாற்றாந் தாயாக நடப்பதும் நல்ல அரசுக்கு அழகன்று.

நீதிமன்றக் கட்டளையைச் செயல்படுத்தாமல் இருப்பது நல்ல அரசுக்கு அறமன்று.

மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் அமர்த்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்ய வேண்டும்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் வலிமையை அரசு உணரவில்லை. இனியாவது உணரவேண்டும்!

Pin It