மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும். - சுப்பிரமணியன் சுவாமி

***

வஞ்சம் நிறைந்தவொரு குரூரமான கோரிக்கை

யாக்கன்
பொதுச்செயலாளர்,
மாற்றுப் பத்திரிகையாளர்/எழுத்தாளர் பேரவை

இந்தியாவின் மிக உயரிய  ‘பாரத ரத்னா’ விருதை, இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படு கொலையை நம் கண்னெதிரிலேயே நடத்திக் காட்டிய இலங்கைத் தீவின் அதிபர் ராஜபக்சேவிற்கு வழங்க வேண்டும் என்று,  இந்திய நாட்டின் மிகப் பெரிய அரசியல் தரகர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த 11.02.2012 அன்று நாளேடு ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். விருதை வழங்குவதற்கான முதன்மைக் காரணமாக அவர் குறிப்பிடுவது, ‘இந்தியாவிற்கு விரோதமாகச் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகளை அழித்தொழித்தார்’ என்பதாகும். 

subra_250மேலும், ஏற்கனவே வெளிநாடுகளைச் சார்ந்த கான் அப்துல் கபார்கான் மற்றும்  நெல்சன் மண்டேலா, ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இத்தகையத் தீவிர முரண்பட்ட விவாதங்களை உருவாக்கும் கருத்துகளை எழுப்புவதன் முலமாக மட்டுமே கடந்த கால் நூற்றாண்டு காலமாக அவரது பிழைப்பு நடந்து வருகிறது. ஆனால், எந்தப் பிழைப்பு நடத்துவதற்காக, தமிழ்த் தேசிய அமைப்புகள்,  சுவாமியின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் , போராடாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றன எனத்தெரியவில்லை.

இதே சுப்பிரமணியன் சுவாமி, 1995ல், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகனை ‘பன்னாட்டுப் பறையன்’ என்று குறிப்பிட்டுப் பேசியபோது, தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை. சுவாமியின் கொடிய அக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்த் தேசியத் தலைவர்கள் சிலர், பிரபாகரனை பறையனோடு ஒப்பிட்டுப் பேசுவதா எனத் தங்களின் சாதித் தமிழ்த்தேசிய உணர்வை வெட்கமின்றி வெளிப்படுத்தினர். ஆனால், ‘பறையன்’ என்ற சொல்லை இழிவுபடுத்தும் சொல்லாகப் பயன்படுத்தியதற்காக, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் சுவாமியின் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. பல தலித் கட்சிகள், சுவாமியை தமிழகத்திற்குள் நுழையவிடக்கூடாது என்று பல போராட்டங்களை நடத்தின. ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எந்த கேடும் நேரவில்லை. மத்திய மாநில ஆளும் வர்க்கப் பார்ப்பனக் கும்பல் அவரை இன்றுவரை காப்பாற்றி வருகின்றது.

1990களின் மத்தியில், தனது கூட்டாளியான மர்மச் சாமியார் சந்திராசாமி மற்றும் அப்பல்லோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கிய அறக் கட்டளையின் வங்கிக் கணக்கில், வெளிநாட்டுப் பணத்தை  முறைகேடாக வைத்திருந்ததாலும், கள்ளத்தனமான கணக்குகளை கையாண்டதாலும், மத்திய அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலர்களால், சுற்றி வளைக்கப்பட்டபோது, மிக எளிதாகத் தப்பித்து வந்தார் இந்த சுப்ரமணி யன் சுவாமி. நீதிதித்துறையில் உள்ள பார்ப்பனர்கள் அவரைத் தந்திரமாகக் காப்பாற்றினர். அத்தகையப் பாதுகாப்பு இருப்பதினால்தான், சுப்பிரமணியன் சுவாமி துணிச்சலாகத் தமிழ் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட முடிகிறது; தமிழர்களுக்குத் தீங்கிழைக்கும் கருத்துகளைக் கூறமுடிகிறது.

மேலும் சுப்பிரமணியன் சுவாமியைக் காப்பாற்றி ஊடகங்களில் உலாவ விடுவதன் மூலம், பார்ப்பன  ஆளும் வர்க்கம் தங்களின் கருத்தையும், செயல்திட்டத்தையும் வெளிப்படையாகவே அறிவிக்கின்றது. பார்ப்பன அறிவு ஜீவிகள் சுப்பிரமணியன் சுவாமியின் ஒவ்வொரு அசைவிற் கும் விதவிதமான விளக்கங்களைச் சொல்லி,  அவரை மிகப்பெரிய நாட்டுப்பற்றாளராகச் உருவகப்படுத்து வதும் அதிகரித்து வருதுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக,  2ஜி ஊழல் வழக்கின் அனைத்து நகர்வும் சுப்பிரமணியன் சுவாமியின் விரல் சொடுக்கில் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. சுப்பிரமணியன் சுவாமியின் வலிந்த தலை யீட்டால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கலில் உயர் அதிகார வர்க்கம் மிகத் தந்திராமகத் தப்பித்திருப்பதை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மேலும், 2ஜி வழக்கிலும் சரி, வேறு எதுவாயினும் சரி, சிறு வயது முதலே, தனது தயார் கற்றுத் தந்த ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளின் அடிப்படையில்தான் தனது ஒவ்வொரு அசைவையும் சுப்பிரமணியன் சுவாமி நகர்த்துகிறார் என்ற செய்தியும் பெரிதாகப் பேசப்படவில்லை.      

பன்னாட்டுப் போர் உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள், குழந்தைகள் உரிமை ஆவணங்கள் என அனைத்து மனித மரபுகளையும் மீறி, லட்சக்கணக்கிலான தமிழீழ மக்களைப் படு கொலை செய்து, அவர்களின் அரசியல் இறையாண்மையையே கேள்விக்குறியாக்கிவிட்ட ஒரு பன்னாட்டுக் கொலைக் குற்றவாளிக்கு பாரதரத்னா விருதை வழங்க வேண்டும் என்று சொல்லும் சுவாமியை இந்திய அரசு கண்டித்திருக்க வேண்டாமா, இந்திய மனித உரிமை அமைப்புகள் கண்டித்திருக்க வேண்டாமா, கல்வியாளர்கள், ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்துக் குரல் எழுப்பி இருக்க வேண்டாமா. ஆனால், சுவாமியின் கருத்து முற்றிலும் வஞ்சம் நிறைந்தவொரு குரூரமான கோரிக்கை எனத் தெரிந்தும்,  எல்லோரும் வாளாவிருக்கிறார்கள். காரணம், சுவாமி மிகப்பெரும் அரசியல் சக்தி என்பதற்காக அல்ல. அவர் அற்பமான ஒரு நாலாந்தர அரசியல் தரகர் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

வேறொரு காரணமிருக்கிறது.  தனி நாட்டிற்கான கோரிக்கையை கடந்த முக்கால் நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிவருகிறார்கள் என்பதே அது. மத்திய அரசும் - பார்ப்பன ஆளும் வர்க்கமும், தமிழர்களின் மீதான எத்தகைய தாக்குதல்களுக்கும் வெறுப்புணர்வுடன் பாராமுகம் காட்டி வருகிறார்கள் என்பதற்கு அந்தக் கோரிக்கையே காரணமாகும். இலங்கை அரசின் மீது  போர்க்குற்ற நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை, பன்னாட்டு அவையின் மனித உரிமைகள் அவையில், அமெரிக்க அரசு கொண்டுவரும்போது, இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உயர்ந்து வரும் இவ்வேளையில், சுவாமியின் இந்தக் கோரிக்கை எத்தகைய ஆபத்தானது, உள்நோக்கம் கொண்டது என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பன்னாட்டு அவையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை, சுவாமி எவ்வளவு இலைமறைகாயாகத் தெரிவிக்கிறார் என்பதைத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.                                                 

ஆரியக் கூத்து

- அறிவுக்கரசு 

ஆரியர்கள் எந்தக் கூத்தாடினாலும் தம் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள். விருதுக்குப் பரிந்துரை செய்தவரும், ஜு.வி. இல் பதில் எழுதியவரும் அவாளே! மகிந்த ராஜபக்சேவும் அதே இனமே! புறநானூறு (175) அகநானூறு (69,251,281) பாடல்களில் விதந்து பாடப்பட்ட மோரியர் (மவுரியர்) எனும் ‡ உலகின் முதல் சூத்திர ஜாதிப் பேரரசைச் சார்ந்த பெருமன்னன் அசோகன்! அவனிடம் கலிங்கப் போரில் தோற்றுப் புறமுதுகிட்டு ஓடிப்போய் இலங்கையில் தஞ்சம் புகுந்தவர் ‡ இன்றைய சிங்களர். ஆரியர்களுக்கு மிக நீண்ட மூக்கு உண்டாம். இந்திராகாந்திக்கும் தனக்கும் இருப்பது நீண்ட மூக்காம். நாம் இருவரும் ஓரினமென(மறைந்த) ஜெயவர்தனே எழுதியது வரலாற்றுப் பதிவு.

arivu_250இந்திய உயர் விருதினை இலங்கை அதிபருக்கு வழங்க வேண்டும் என்று சு.சாமி பேசியிருப்பது இன அடிப்படையில்தான். வழக்கமான சோனியா எதிர்ப்புடன் தொடர்புபடுத்திப் பதில் எழுதியிருப்பதும் அதே இன ஏடு, வழமையாகக் கடைப்பிடிக்கும் ""பத்திரிகா தர்மம்'' என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அதர்வ வேதத்தில் அவாளுக்குச் சொல்லித் தரப்பட்ட, மந்த்ரம், தந்த்ரம், எந்த்ரம் ஆகியவற்றின் அடிப்படையில் அவாள் கடைப்பிடிக்கும் தந்திரோபாயம் அன்றி வேறில்லை.

"இந்து' பத்திரிகையாளருக்கு "சிங்கள ரத்னா' எப்படிக் கொடுத்தார்கள்? அப்படியே, ராஜபக்சேவுக்கு "பாரத ரத்னா' தரலாமே என்கிறாரோ சு.சாமி! விபீடணன் தானே, ஆழ்வாரானான்! சிரஞ்சீவி ஆனான்! பார்த்துக்கொண்டிருந்த "பார்ட்  டைம்' வாத்தியார் வேலையும் போய்விட்ட நிலையில் ஜாதித் தொழிலான தரகுத் தொழிலில் இறங்கிவிட்டார் போலும்!

நாம் திராவிடன் என்று சொன்னால், நாவெல்லாம் தேன் என்ற புரட்சிக்கவிஞர்,

ஆரியன் அல்லேன் எனும் போதில்

எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி

என்றும் பாடி வைத்தார்.

அயல் என்று கொட்டுக முரசே உறவான திராவிடர் அல்லார்

என்றும் வேண்டினார்.

அதனை ஏற்று, திராவிட இன உணர்வை வளர்ப்போம்! துரோகம் ஒழித்துப் பகை  அழிப்போம்!

Pin It