சமீபத்தில் துனிஸியா,எகிப்து நாடுகளில் நடந்த அரசுக்கு எதிரான மக்கள்எழுச்சி மற்றும் அமெரிக்க பங்குச் சந்தை அலுவலகம் அமைந்திருக்கும் வால் ஸ்ட்ரீட்டை மக்கள் ஆக்கிரமித்த செய்திகளை இணையத்தளம் மிக வேகமாக உலகிற்கு எடுத்துச் சென்றது. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு (Occupy wall street) இயக்கம் மிக பிரபலமாகி, உலகின் பல நகரங்களிலும் அதே போல் போராட்டங்கள் தொடங்கி இன்னும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப் போராட்டங் களைப் பற்றிய செய்திகளைப் பரப்புவதற்கு இணையத்தளம் மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தன் கொள்கைகளுக்கு எதிரான வாதங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுவதை அரசும் பிற நிறுவனங்களும் எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொள்ளும்? உடனடியாக இணையத் தளத்தை ரத்து செய்தால் அது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்று பலர் பேசக்கூடும். அதனால், நேரடியாகத் தடை விதிக்காமல், பல விதமான வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க அரசு அண்மையில் இரண்டு சட்டங்களைக் கொண்டுவர முயன்றது. ஒன்று PIPA ( Protect Intellectual Property Act ), இரண்டு SOPA ( Stop Online Piracy Act ). அதாவது அறிவு சொத்தைக் காப்பாற்றும் சட்டம் மற்றும் இணையத் தளத்தில் தகவல் திருட்டைத் தடுக்கும் சட்டம் என்று எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே தகவல் திருட்டு சம்பந்தப்பட்டவைதான். இணையத்தளத்தின் மூலமே கண்டனம் தெரிவித்து மக்கள் இந்தச் சட்டங்களை வரவிடாமல் தடுத்திருக்கிறார்கள். இந்த வி­யத்தில் மக்கள் செய்தது சரியா?

இந்தக் கேள்விக்கு விடை காணும் முன் இன்னொரு கேள்வி. இந்த தகவல் திருட்டு Piracy ) சம்பந்தமாக மக்களிடம் நிலவி வரும் கருத்து என்ன?

திருட்டு வி.சி.டி.யில் படம் பார்த்திருக் கிறீர்களா என்று நான் பலரிடம் கேட்டிருக்கிறேன். தொன்னூறு சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறோம் என்று கூறுவார்கள். இது சரியா தப்பா என்று கேட்டால், என்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தவறு என்று ஒத்துக்கொள்வார்கள். அப்படின்னா உங்களை ஜெயில்ல போட்டுவிட லாமா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் திணறுவார்கள்.

இந்தக் குழப்பத்திற்குக் காரணம், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்குச் சட்டம் வளரவில்லை என்பதுதான். தகவல் தொழில் நுட்பம் வளரும் முன், ஒரு செய்தியை நகல் ( copy ) எடுப்பது என்றால், அதற்கு பெரும் இயந்திரங்கள் தேவை. உதாரணத்திற்குப் புத்தக அச்சகம் நிறுவதற்குப் பெரும் மூலதனம் தேவை. புத்தக அச்சகத்தில் எப்படிப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று நீங்கள் அருகில் உள்ள புத்தக அச்சகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இன்னொரு முதலாளி இதே போல் அச்சகத்தை நிறுவி, என்னுடைய நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடக் கூடாதல்லவா, அதனால் இந்த புத்தகத்தை நான் மட்டும்தான் அச்சடிப்பேன் என்று சட்டப்பூர்வமான ஒப்புதலை(காப்புரிமை) அச்சக நிறுவனர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கான சட்டம்தான் காப்புரிமைச் சட்டம்.

புத்தகம் வந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டம் இப்பொழுது செல்லுபடியாகுமா? இன்று நகல் எடுப்பது எவ்வளவு எளிதாகிவிட்டது! ஒரு கணினி இருந்தால் ஒரு குறுந்தகட்டைப் பத்து நகல் எடுத்துவிடலாமே! கணினி - நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். குறுந்தகடு - நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். நம் வீட்டு மின்சாரத்தில்தான் கணினி ஓடுகிறது. இதில் திருட்டு எங்கே இருந்து வருகிறது? தகவல் திருட்டு என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெரு முதலாளிகள் தொடுக்கும் குற்றச்சாட்டில் உள்ள முரண்பாடு புரிகிறதா? கணினி, குறுந்தகடு ஆகியவற்றை எல்லாம் தயாரிப்பது இந்நிறு வனங்களே. ஆனால் அதைப் பயன்படுத்தினால் தவறு என்று சொல்கிறது. இதற்கு அரசும் துணை நிற்கிறது.

பத்திரிகைகளும், தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களும் செய்ய முடியாததைத் தகவல் தொழில் நுட்பம் இணையத் தளத்துடன் சேர்ந்து செய்து காட்டி இருக்கிறது. அதாவது, யார் வேண்டுமானாலும் தான் சொல்ல நினைத்ததை உலகத்துக்குச் சொல்லலாம் என்ற சுதந்திரத்தை இணையத்தளம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சுதந்திரத்தை எப்படி அரசும் பெரு நிறுவனங்களும் பொறுத்துக் கொள்ளும்? பத்திரிகை களில் எளிதாக இப்படி வரவைத்துவிட முடியாது. தொலைக்காட்சியிலும் அதே நிலைதான்.

அதற்காகத்தான் இணையத்தளத்தில் மத வெறியைத் தூண்டுகிறார்கள், அறிவுச் சொத்தை அபகரிக்கிறார்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட் டுகளின் மூலம் இணையத்தளத்தில் உள்ள தகவல் களைத் தணிக்கை செய்யவோ அல்லது முற்றிலும் தடை செய்யவோ அரசு முனைகிறது. இந்தியாவில் மதவெறி தொடர்ந்து இருந்து வருகிறது. பரவிக்கொண்டும் இருக்கிறது. இணையத்தளத்தின் மூலம்தான் பரவிவிட்டது என்பது போல் பாவிப்பது மக்களை முக்கியமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகும்.

net_620

இதனால் கூகில் ( google ), ஃபேஸ் புக் ( facebook ) போன்ற நிறுவனங்கள் செய்வது எல்லாம் சரி என்று அர்த்தமாகிவிடாது. இப்படிப்பட்ட நிறுவனங்கள் நம்மைப் பற்றித் தகவல்கள் சேகரித்துக் கொண்டே வருகின்றன. இந்தத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லப் படுகிறது. இணையத்தளத்தில் சுதந்திரம் வேண்டும். இசை, பாடம், படம் மற்றும் மென்பொருள் நகலெடுக்கவும் சுதந்திரம் வேண்டும். ஆனால் உங்களை உளவு பார்க்க அனுமதிக்காத வகையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் கூகில் மற்றும் ஃபேஸ் புக் வலைத்தளங்களில் உள்ள சில படங்கள் மற்றும் சில வரிகள் இந்தியர்களிடையே மத வெறியைத் தூண்டுவதாய் உள்ளன என்று இந்த இரு நிறுவனங்களின் மேல் வழக்குத் தொடுக்கப்பட் டுள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசு இந்தக் நிறுவனங்களிடம் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன் அதை மறு ஆய்வு செய்து, மத வெறியைத் தூண்டுவதாய் இருந்தால் அதை தணிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால், இது சாத்திய மில்லை என்பது இந்த நிறுவனங்களின் வாதம்.

இது போன்ற வலைத்தளங்களில் ஒரு நிமிடத்திற்கு 48 மணி நேர காணொளி காட்சி களும், ஒரு நாளுக்குக் கிட்டத்தட்ட 25 கோடி நிழற்படங்களும் ஏற்றப்படுகின்றன. இதில் எது மத வெறியைத் தூண்டும், எது தூண்டாது என்று பார்ப்பது மிகவும் கடினம் என்பதே இந்த நிறுவனங்களின் வாதம். அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்தால் இந்த நிறுவனங்களின் வலைத்தளங்களை இந்தியாவில் தடைசெய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகில் மற்றும் ஃபேஸ்புக் இந்தியாவில் தடை செய்யப்படுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். நமக்கு முன் இருக்கும் முக்கியமான கேள்வி, இணையத்தளத்தில் ஏற்றப்படும் தகவல்களைத் தணிக்கை செய்ய வேண்டுமா, வேண்டாமா?

இணையத்தளத்தில் ஏற்றப்படும் செய்திகளைத் தணிக்கை செய்யத் தொடங்கிவிட்டால், மக்களின் முக்கியமான பிரச்சினைகள் பற்றிய செய்திகளை அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் எளிதாக பரவ விடாமல் தடுத்துவிட முடியும். ஆகையால், இணையத்தளத்தின் முழுச்சுதந்திரத்தைக் காப்பது நமது கடமை.

அப்படியானால், மத வெறியைத் தூண்டும் வகையில் இணையத்தளத்தில் உள்ள படங்கள் மற்றும் வரிகளை அப்படியே விட்டுவிடுவதா?

இந்த கேள்விக்கு விடை காணும் முன் இந்த மாதிரி செய்திகள் எப்படிப்பட்ட வலைத்தளங் களிலிருந்து வெளியாகிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இப்படிப்பட்ட செய்திகள் முக்கியமாக சமூகவலை ( Social network ) வலைத்தளங் களிலேயே வெளியாகிறது. வலைப்பூ எழுதுபவர்கள், மின்னஞ்சல் மூலம் கருத்து பரிமாறிக்கொள் பவர்களால் இந்தப் பிரச்சினை இல்லை. ஏனெனில், ஏதாவது பிரச்சினை என்றால், சம்பந்தப்பட்ட நபரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவருடைய பிரசுரத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்ளலாம். ஆனால், சமூகவலை போன்ற வலைத்தளங்களில், தொழில் நுட்ப ரீதியிலேயே தகவல்களை மறுஆய்வு செய்வது மிகக் கடினம் என்று ஏற்கனவே பார்த்தோம்.

மேலும், சமூகவலை வலைத்தளங்கள், அதிலுள்ள பல குழுக்களைப் பற்றிய தகவல்களை உளவு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தகவல்களும், படங்களும் ஒரு இடத்தில் ஒரு நிறுவனத்திடம் குவிவதால், இந்த நிறுவனம் மிக சக்தி வாய்ந்ததாக ஆகிவிடுகிறது. மேலும், ஒரே இடத்திலிருந்து கொண்டு பலரைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆகையால், இணையத்தள சுதந்திரம் முழுமையாக வேண்டும். அதைத் தணிக்கை செய்யக் கூடாது. ஆனால் ஃபேஸ்புக் போன்ற சமூகவலை வலைத்தளங்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்டால் நாம் எதையும் இழப்பதற்கில்லை.

***

முடக்கப்படும் கருத்துரிமை
- சாக்ரடீஸ், சென்னை

இந்த மாதம் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இணையம் தொடர்பாக இரு மசோதாக்கள் விவாதிக்கப்பட இருந்தன. ஒன்று சோபா ( SOPA ), அறிவுசார் சொத்துடைமை காப்புரிமைச் சட்டம், மற்றொன்று பிபா (PIPA) தகவல் திருட்டைத் தடுக்கும் சட்டம்.

முகநூல், கூகுள், டிவிட்டர் எனப் புகழ்பெற்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் தங்கள் வலைத் தளங்களை ஒருநாள் மூடி, மக்கள் ஆதரவுடன் போராடினார்கள். இப்பொழுது மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் துவக்கம் தான். கட்டற்ற சுதந்திர இணையத்தை முழுவதையும் முடக்குவதுதான் அமெரிக்காவின் உள் நோக்கம் என்று எதிர்ப் பாளர்கள் தெரிவிக் கின்றனர்.

முதலில் சட்டத்தின் சாரமான "காப்புரிமை'யே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவானது. மக்கள் விரோதமானது. உதாரணமாக, இரத்தப் புற்று நோயைக் கட்டுப்படுத்தத் தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் 4. இந்திய நிறுவனங்களின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ.90. ஒரு நாளைக்கு ரூ.360, மாதம் ரூ.11,000. ஸ்வீடன் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனம் இந்த மருந்திற்கான காப்புரிமை வாங்க முயன்று கொண்டிருக்கிறது. காப்புரிமையை வாங்கி விட்டால், அந்த மருந்தின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ.1000, ஒரு நாளைக்கு ரூ.4000, ஒரு மாதத்திற்கு ஒன்னேகால் இலட்சம். இந்தியாவில் ஆண்டுதோறும் இரத்தப்புற்று நோயால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 24,000. காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிட்டால், மக்கள் செத்துமடிய வேண்டியதுதான்.

இதையே இணையத்திற்குப் பொருத்தினால், ஒரு படத்தின் பாடல்களின் விலை ரூ.100, டி.வி.டி.யில் ஒரு புதுப்படத்தை ரூ.400லிருந்து ரூ.500 வரை விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படம் பார்த்தோமென்றால், நுழைவுச்சீட்டின் விலையே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.500 ஆகிவிடுகிறது. மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் ரூ.700 ஐ நெருங்கிவிடும். நடுத்தர வர்க்கமே 4 மாதத்திற்கு ஒரு படம்தான் பார்க்க முடியும். காப்புரிமை இல்லாதபொழுதே கோடிகளில் கொழிக்கிறார்கள். கருப்புப்பணத்தில் திளைக்கிறார்கள். 

மற்றொரு தளத்தில் இந்த விசயத்தைப் பார்த்தால், சமகாலத்தில் செய்திகளை வழங்கும் ஊடகங்களில் பெரும்பான்மையானவை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொண்டவை. போராடுகிற மக்களின் போராட்டங்களை மறைக்கிறார்கள். திரிக்கிறார்கள். இந்த இடத்தை இணையம் எடுத்துக் கொள்கிறது. உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இப்படித்தான், கடந்த ஆண்டில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளில் நிலவுகிற பிற்போக்கு, ஒடுக்குமுறை அரசுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சியோடு போராடினார்கள். இந்தப் போராட்டத்தின் வெற்றியை ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது தனிக்கதை. இந்தப் போராட்டங்களில் எல்லாம் இந்த சமூக தளங்கள் மக்களிடையே தகவல் தொடர்பில் நிறையப் பங்காற்றின.

இந்த சமூகத் தளங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்போ, முற்போக்குக் கருத்தோ எல்லாம் பொங்கி வரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, இணையத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக, பொதுவுடை மைக்கு எதிரான கட்டுரைகள்தான் மலிந்துகிடக் கின்றன. திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் நிறையத் தேடப்படுகின்றன. பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. படிக்கப்படுகின்றன. 2008 இல் கூகிளில் 3 கோடிபேர் தேடிப்பார்த்த நடிகை நம்மூர் நமீதா. சமூகத்தில் எத்தனை சதவிகிதம் முற்போக்கு கருத்துகள் இருக்கிறதோ, அவ்வளவு தான் இணையத்திலும் இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிற தளங்களை முடக்குவதும் இவர்களின் நோக்கம். உதாரணமாக, தமிழில் வெளிவரும் வினவு தளத்தில், மதங்களின் பிற்போக்குத் தன்மைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினால், அடிப்படைவாதிகள் உடனே வினவு தளத்தை முடக்க வேண்டும் எனக் கோபமாகக் கருத்து சொல்கிறார்கள். சமீபத்தில், 10,000க்கும் மேலான தனிநபர் வலைத்தளங்களை ஒன்றிணைக்கும் தமிழ்மணம் வலைத்திரட்டி அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது. அதன் தளநிர்வாகிகளில் ஒருவர், ஒரு விவாதத்தில் "இஸ்லாத்தின் ஒரு அம்சத்தை விமர்சித்தார்' என்பதுதான் காரணம்.

Pin It