ஈழச் சிக்கலில் இந்திய அரசு நடந்து கொள்ளும் விதம் மேலும் மேலும் தமிழர் நெஞ்சங்களைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் நம் வேதனையை மிகுதிப்படுத்தி உள்ளன.

நம் தமிழ் உறவுகளைக் கொன்றுகுவித்த ஈரம் கூட அந்த மண்ணில் இருந்தும், நம் நெஞ்சில் இருந்தும் இன்னும் காயவில்லை. இலங்கையின் நாடாளுமன்ற அவைத் தலைவரும், அமைச்சரும், உறுப்பினர்கள் சிலரும் இந்திய நாடாளுமன்றத்திற்குச் சிறப்புப் பார்வையாளர்களாக அழைக்கப்படுகின்றனர். உலக நாடுகள் எல்லாம் இலங்கை அரசினரைக் கொலைக்குற்றவாளிகளாகப் பார்க்கத் தொடங்கி இருக்கும் இந்நேரத்தில், இந்திய அரசு மட்டும் அவர்களை விருந்தினர்களாக அழைத்துச் சிறப்பிக்கிறது. எவ்வளவு எதிர்ப்பு அலைகள் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் ஏற்பட்டாலும் அது குறித்து எந்தக் கவலையும் கொள்ளாமல், இலங்கை அரசின் அவைத்தலைவர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது.

இலங்கை அரசைச் சிறப்பிப்பதும், தமிழக மக்களை அவமதிப்பதுமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை இந்தியா அடித்திருக்கிறது. நல்ல வாய்ப்பாக அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த  அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ம.தி.மு.க.வைச் சார்ந்த திரு கணேசமூர்த்தி மிகக் கடுமையாகவே தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல, அன்று மாலை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேநீர் விருந்திலிருந்து, தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வெளிநடப்புச் செய்திருக்கிறார். தமிழ் ஈழ மக்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை அரசுடன் எந்த நட்பு உணர்வையும் பேணி வளர்த்திட நாங்கள் விரும்பவில்லை என்று வெளிநடப்புச் செய்வதற்கு முன் தி.மு.கழகத்தின் சார்பில் அழுத்தமான எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டே சிவா வெளியேறி இருக்கிறார்.

தமிழக மக்களின் மான உணர்வைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டிற்குரியது. செம்மையாக அப்பணியைச் செய்து முடித்த உறுப்பினர்கள் அனைவருக்கும், கட்சிகளின் எல்லைகளைத் தாண்டித் தமிழகம் தலைவணங்குகிறது. ஆனால் தான் செய்த குற்றத்தை உணர்ந்து தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய இந்திய அரசு, நாடாளுமன்ற அவைத் தலைவர் மீராகுமார் மூலமாக இலங்கைக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்பதற்கு இதைவிடப் பொருத்தமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

அண்மையில் இன்னொரு அவமதிப்பும் நமக்கு நேர்ந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவோடும், அவர் அரசின் போக்குகளோடும் பல இடங்களில் நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பது உண்மைதான். எனினும் நம் முதலமைச்சரையோ, நம் சட்டமன்றத்தையோ விமர்சிக்கும் உரிமை அயலார்க்கு இல்லை. சட்டமன்றத் தீர்மானத்தை அவமதிப்பதென்பது, ஒட்டுமொத்தத் தமிழகத்தையே அவமதிப்பதாகும். எங்கள் இனத்தை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று முயன்ற, இன்றும் முயல்கின்ற, தமிழினப் பகைவன் ஒருவன், நம்மைக் கேலி செய்வதும், நம் தீர்மானத்தைக் கண்டிப்பதும், அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் மத்திய அரசு மவுனம் சாதிப்பதும், தமிழ் இனத்தின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

மத்திய அரசுக்கு ஒன்றை நாம் உரத்துச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஈழ ரத்தம் எங்கள் ரத்தம், ஈழ யுத்தம் எங்கள் யுத்தம் என்னும் உணர்வு பெற்றிருக்கிற பலகோடித் தமிழர்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டே இருந்தால், எதிர்கால விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரிக்க வேண்டிய நேரம் இது.

Pin It