vikram_deiyvatirumagal

மக்களிடையே மிக எளிமையாக ஊடுருவிக் கருத்துகளை விதைக்கும் வலிமையான ஊடகங்க ளுள் ஒன்று திரைப்படம். அறிஞர் அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு போன்றவர்களின் சமூகம் கருத்துகளை வேலைக்காரி, ஓரிரவு, பராசக்தி,மனோகரா, இரத்தக்கண்ணீர் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றன. இன்றைய காலகட்டத்தில் உள்ளம் கூசுகின்ற அளவுக்கு வன்முறைகள், ஆபாசங்கள், இடம் பெற்ற திரைப்படங்கள் தொடர்ச்சியாக வருகின்ற போதிலும், இவை களையும் மீறி சமூகம் சார்ந்த நல்ல திரைப்படங்களும் வருகின்றன. அண்மையில் வெளிவந்துள்ள 'தெய்வத் திருமகள்' திரைப்படம் இதற்கு ஒரு சான்று.

தெய்வத் திருமகள் என்ற பெயரைக் கேட்டவுடன், இத்திரைப்படம் ஏதோ ஒரு பக்திப் படம் அல்லது தெய்வாம்சம் கொண்ட திரைப்படம் என்றே நினைக்கத் தோன்றும். உண்மை அதுவன்று. தெய்வாம்சத்தைப் புறம் தள்ளிவிட்டு முன்வந்து நிற்கும் மனிதநேயமே இக்கதையின் கரு. மனநலம் குன்றிய ஒருவர், இக்கதையின் மையப்புள்ளி. அவர் வாழ்க்கையின் ஒரு பகுதி இக்கதையின் ஓட்டம். பிதாமகன், சேது போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட வேடங் களில் தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ள நடிகர் விக்ரம், இத்திரைப்படத்தின் நாயகன்.

விகரமிடம் இருந்து அவரின் குழந்தை உறவினர்களால் பறிக்கப்படுகிறது. அக்குழந்தையை மனிதநேயம் கொண்ட சிலரின் உதவியால் போராடி மீட்கிறார். முடிவில் யாரிடம் இருந்து குழந்தையை மீட்டாரோ, அவர்களிடமே குழந்தையைக் கொடுத்துவிடுகிறன்றார் ‡ இதுதான் கதை.

இக்கதையில் மூன்று இடங்கள் சிந்தனைக்குரிய காட்சிகளாக அமைந்திருக்கின்றன. முதல் செய்தியைப் பார்ப்போம். மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தையின் தாய், அதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரின் துணைவி இப்படத் தில் காட்டப்படவில்லை. ஏனெனில் அவர் குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார்.

அந்தத் தாய் வசதி மிக்க பணக்காரரின் மகள். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மனநலம் குன்றியவரையே மணமுடிக்கவும் செய்கிறாள். மனநலம் குன்றிய ஒருவரையே கரம்பிடிக்கும் அளவுக்கு மனிதநேயம் கொண்டவராக அந்தப் பெண் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது செய்தி, குழந்தையைப் பறி கொடுத்த நாயகன், குழந்தையைத் தேடி ஊட்டியில் இருந்து சென்னைக்கு வருகிறார். அவரிடம் பணம் கத்தையாக இருப்பதைப் பார்த்த ஒரு வழிப்பறித் திருடன், அந்தப் பணத்தைக் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அப்படி ஓடும்போது ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறான். உடனே நாயகன் ஓடிச்சென்று அவனைக் காப்பாற்றுகிறான். பிறகுதான் காப்பாற் றப்பட்ட திருடனுக்கு அவனால் பணம் பறிக்கப் பட்டவர் மனநலம் குன்றியவர் என்பது தெரிய வருகிறது. நெஞ்சம் நெகிழ்ந்த திருடன், சில நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறான்.

மூன்றாவது செய்தி, நாயகனுக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞரின்(நாசர்) குழந்தை உடல்நலமில்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அப்போது எதேச்சையாக அங்குவரும் நாயகன், குழந்தையைத் தொட்டுப் பார்த்துவிட்டுப் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடுகிறார்.  வழக்கறிஞரின் ஆட்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. வெளியே ஓடியவர் சிறிது நேரத்தில் சில மருந்துகளை வாங்கிக் கொண்டு மீண்டும் அங்கே ஓடி வருகிறார். அங்குள்ளவர்கள் தடுக்கிறார்கள். மருத்துவர் இது மிகச் சரியான மருந்து என்று சொல்லிக் குழந்தைக்குக் கொடுக்கிறார். வழக்கறிஞர் தன் வழக்கை வலி மைப்படுத்த எந்த மனநலம் குன்றியவரைக் கொண்டுவரச் சொன்னாரோ, அந்த மனிதர் தனக்கு ஏற்படக் கூடிய பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையிடம் ஓடிவரும் அந்தக் காட்சியின் சிறப்பை, அப்போதே நாசரின் முகபாவம் எடுத்துச் சொல்லிவிட்டது. பிறகு நாம் என்ன சொல்ல?

இந்தக் காட்சியில், மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு, தன் குழந்தையாகத்தான், வழக்கறிஞரின் மகளும் தென்பட்டு இருக் கிறாள். சிந்தனைகளைக் கடந்த மனிதநேயத்தை இங்கே பார்க்க முடிகிறது. படத்தின் நிறைவுக் காட்சியை எட்டும்போது, நீதிமன்றக் கூண்டு களில் மனநலம் பாதிக்கப்பட்டவரும், அவரின் மகள் நிலாவும் எதிரெதிரே நிற்கிறார்கள் ‡ நிற்கும் இடமோ நீதிமன்றம். ஆனாலும் நீதிபதி, வழக்கறிஞர்கள், புறச்சூழல்கள் இவைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டு, எதைப்பற்றியும் கவலைப்படாமல், தந்தையும், மகளும் முகபாவனைகளாலும், கை அசைவுகளாலும் பேசிக் கொள்கிறார்களே, அதை நீதிபதியும், வழக்கறிஞர்களும் மெய்மறந்து பார்க்கிறார்கள்.

இப்படி அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம். அருந்ததி படத்தில் அருமையாக நடித்த அனுஷ்கா, தொடக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கிண்டலடிப்பது போல துடுக்குத்தனமாக நடித்தாலும், உண்மை தெரிந்த பின் அவருக்காக நீதிமன்றத்தில் போராடும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பை நிறைவு செய்கிறார்.

என்னதான் வழக்கில் வெற்றி பெற்றாலும், குழந்தையை மீட்டு எடுத்தாலும், அக்குழந்தையை  தன் மகளை தன்னால் இனியும் வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்த தந்தை விக்ரம் தன் குழந்தை நிலாவை அவள் சிற்றன்னையிடமே இறுதியில் கொடுத்து விட்டுப் போவது நெஞ்சை கணக்கச் செய்கிறது.

யார் வேண்டுமானாலும் திரைப்படத்தை இயக்கலாம். இயக்கம் என்பது படத்தை எடுப்பது அன்று, நெறிப்படுத்துவது. அத்தோடு காட்சிகள் சிதைவுபெறாமல், நடிப்பை நெறிப்படுத்தி, கதையின் ஓட்டத்தில் ஒரு சமூக சிந்தனையைக் கொண்டு வர வேண்டும். இவை அனைத்தையும் திறம்படச் செய்து இயக்கிய இயக்குநர் விஜயைப் பாராட்ட வேண்டும்.

Pin It