சட்டம் மக்களுக்காக. அதை இயற்றும் இடம் சட்டப்பேரவை. பேரவைத் தலைவர் ஆளுங்கட்சியில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவர் பேரவைத் தலைவர் பொறுப்பேற்றவுடன் கட்சி சிந்தனைக்கு அப்பாற்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானவர் ஆகிவிட வேண்டும்.  இது மரபு.

சட்டப்பேரவையில் இருந்து உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டிய நிலைஏற்பட்டால், அதற்கானகாரணம் சரியாக இருக்க வேண்டும்.

உரிமைக்குழு எடுக்கும் நடவடிக்கையின் போது, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்கப்பட வேண்டும்.

இப்படி எதுவும் இல்லாமல் எடுத்ததே சட்டம் சொன்னதே தீர்ப்பு என ‘வானளவிய’ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் நீதிமன்றம் தலையிட முடியும் என்பது கூடத் தெரியவில்லை, பேரவைத் தலைவருக்கு.

2015 பிப்ரவரி 19ம் நாள்சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்.

அப்பொழுது அதிமுக உறுப்பினர் கடம்பூர்ராஜு, எதிர்கட்சித் தலைவரை விமர்சித்தார்.

பேரவையில் தேமுதிக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவையின் முன் சூழ்ந்து நின்றனர்.

எதிர்ப்பு தெரிவிப்பது இயல்புதான். ஆனால் அதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை பேரவைத் தலைவரால்.

இதுதான் பிரச்சனை. இதற்குத்தான் 6 தேமுதிக உறுப்பினர்கள் இடைநீக்கம். ஒருவேளை இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூட, பிறகு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.

மாறாக எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கேட்டும் இடைநீக்கத்தை ரத்து செய்யாமல் அடாவடித் தனமாக இருந்ததன் விளைவு, உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து விட்டது.

தமிழக அரசுக்கு நீதிமன்றத்தின் தண்டனைகளும், கண்டனங்களும் ஒன்றும் புதியது அல்ல.  எல்லாம் பழகிப்போன விசயம்தான். மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்கள்.

ஆனால் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்களே! அவர்களுக்குத்தான் இது அவமானம்!

Pin It