பவுத்தம் - ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 8

இதுவரை...

இதுவரை பவுத்தம் 7 தொடர்களாக வெளிவந்துள்ளது. சிறிய இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் பவுத்தம் தொடர் தொடர்கிறது. 2500 ஆண்டுகளாகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் பவுத்தம் அத்வைதக் கோட்பாடுகளை முன்வைத்து ஆரிய பவுத்தமாக, மகாயாணம் தோன்றி பவுத்தத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. சமூகப் புரட்சியாளரான புத்தரை ஆரியம் சத்ரியர் என்றது. ஆனால் அவர் ஒரு சூத்திரர், திராவிடர். புத்தரின் துறவுக்கு, பிணம், முதியவர், நோயாளியைப் பார்த்தது காரணம் என்பது ஆரிய அடிப்படைவாதம். மக்களின் துன்பமும், ஆதிக்க அடிமைத்தனமும்தான் அவரின் துறவுக்குக் காரணமாயின. அதனால் சங்கம் அமைத்தார். பின் அவரின் கோட்பாடு தம்மம் (பவுத்தம்) உருவாகியது. சங்கத்தை நெறிப்படுத்தி, மக்களிடம் சென்று பேசி, தோழர்களுடன் பேசிய அவர் சமூகப் போராளியானார். காசியில் அவரின் முதல் பேருரை ஆரியத்திற்கு எதிராக அமைந்தது. புத்தரின் மரணத்திற்குப் பின் பவுத்தம் திராவிடத் தேரவாதமாகவும், ஆரிய மகாயானமாகவும் முதன்முதலாகப் பிளவுபட்டது. இதுவரை வந்த 7 தொடர்களின் சாரம் இவை. இனி பவுத்தம் தொடரும்...

புத்தரால் சொல்லப்பட்ட மூல பவுத்தம் தேரவாதம். நாகார்ஜுனரால் சொல்லப்பட்ட பிற்காலப்  பவுத்தம் மகாயானம் என்பதை முன்னர் பார்த்தோம்.

dashavtar_560தேரவாதம், பகுத்தறிவு - நாத்திகம்
மகாயானம், மூடநம்பிக்கை - ஆத்திகம்.

தேரவாத பவுத்தத் துறவிகள், புத்தரின் வழிகாட்டுதலின்படி, மக்களிடம் சென்றார்கள். மக்களுடன் பேசினார்கள். மக்களின் வாழ்வியலில் பங்கு கொண்டார்கள். அவர்களின் சமூகத் துன்பங்களுக்கு எதிராகப் போராடினார் கள், ஒரு சமூகப் பணியைச் செய்தார்கள்.

மகாயானப் பவுத்தர்கள் இதில் நேர் முரணாக வேறுபட்டார்கள். எடுத்துக்காட்டாக, நாலந்தாலப் பல்கலைக் கழகம் மிகப்பெரிய பவுத்த விகாரம். மகாயானப் பிரிவின் தத்து வார்த்த நடவடிக்கைகளின் கேந்திரம் இது.

இப்பல்கலைக் கழகம் கட்டுவதற்கான இடத்தை, அங்கு இருந்த சிறிய விகாரையுடன் 10 கோடித் தங்கக் காசுகள் கொடுத்து இரண்டு பெருவணிகர்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் கள். அக்காலத்திற்கு ஏற்ப இவ்விகாரை நவீனத்து டன் கூடிய அறைகள், கூடங்கள், கட்டிடங் களாகக் கட்ட 5 அரசர்கள் உதவியிருக்கிறார்கள். 200 கிராமங்களை அரசர்கள் மானியமாக வழங்கி இருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுத்தத் துறவிகள் இங்கு மாணவர்களாகப் பயின்றார்கள். 500 ஆசிரியர்கள் பயிற்றுவித்திருக்கிறார்கள்.

யுவான் சுவாங் தரும் தகவலின் அடிப்படை யில், அங்குப் பெரிய அளவில் சமையல் கூடங்கள் இருந்துள்ளன. எனவே உணவுக்குத் துறவிகள் மக்களிடம் போகாமல் விகாரையிலேயே உண்டு உறங்கியிருக்கிறார்கள்.

அப்பல்கலைக் கழகத்தில் பல நூறு உழைப்பாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்ததாக வும், அந்த உழைப்பாளர்களின், உபரி உழைப்பில் வாழ்ந்த மகாயானத் துறவிகள் மக்களிடம் செல்லாமல், மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாமல், உடல் உழைப்பு இல்லாமல், புதியதொரு தத்துவச் சிந்தனைகளில் ஈடுபட்டு இருந்ததாகச் சீனப் பவுத்தத் துறவி இட்சிங் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியது. இது புத்தர் சொன்ன துறவிகளின் வாழ்வியலுக்கு நேர் மாறானது.

மகாயானம் புத்தருக்கும், புத்தரின் பவுத்தத்திற்கும் நேர் மாறானது. குறிப்பாகச் சொன்னால், மகாயானம் ஆரியவாதத்தைக் கொண்டது, மகாயானத்தின் தலைவரே ஓர் ஆரியர், புத்தர் ஆரியத்திற்கு எதிரானவர்.

ஒடுக்கப்பட்டச் சூத்திரர்களின் இயக்க மானப் பகுத்தறிவுப் பவுத்தத்தை ஒழிக்க வேண்டும் அல்லது அதை வேறாக மாற்றித் திருத்திவிட வேண்டும். இது மகாயானர்களின் இலக்கு.

அது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். அதனால் பவுத்தத்தின் மூலவரான புத்தரின் வரலாற்றை, புத்தரின் வரலாற்றுச் நினைவுகளை மாற்றித் திருத்திப் புதுக் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள் - ஏறத்தாழ ஆரியப் புராணங்களைப் போல.

மகாயானர்கள் வரலாற்றுப் புத்தரின் உண்மை வரலாறை மறைக்கப் பல புத்தாவதாரங்களை உருவாக்கினார்கள். நம்முடைய வரலாற்றுப் புத்தருக்கு முன்னர் பல புத்தர்கள் பிறந்ததாகவும், அவருக்குப் பின்னர் பல புத்தர்கள் பிறக்கப் போவதாகவும், அவர்கள் இருக்கும் திசைகளையும் கூட அள்ளிவிட்டார்கள் கதைகதையாக. அதற்கான எந்த ஒரு சான்றையும் அவர்கள் தரவில்லை என்பது கவனிக்கத்தக்க செய்தி.

கி.பி.6ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த மகாநாம(ன்) என்பவரால் எழுதப்பட்ட நூல் “மகாவம்ச(ம்)”. இந்நூல் பாலி மொழியில் இருந்து டோனர் என்பவரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 1837ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் இந்நூலைச் செப்பம் செய்து 1912இல் வெளியிட்டார்.

இந்நூலின் பல பகுதிகளை வின்சன்ட் ஏ. ஸ்மித் நிராகரித்துள்ளார். இந்நூலைச் “சிங்களர் கதை” என்கிறார் எஸ்.பொ(பொன்னுத்துரை) தன் தமிழ் மொழி பெயர்ப்பு நூலில். சுருக்கமாகச் சொன்னால், இந்நூல் ஒரு பவுத்தப் புராணம். இந்நூலில்தான் புத்தரின் பல்வேறு பிறப்புகளை நாம் பார்க்கிறோம்.

1. சம்புத்த 2.கொண்டஞ்ஞ 3. ஞானிமங்கள 4.சுமண 5.புத்தரேவத 6.சோபித 7.சம்புத்த அனோமதசி 8. பதும 9. விஜயநாரத 10.சம்புத்த பதுமுத்தர 11.ததாகத சுமேத 12. சுஜாத 13.பிரியதசி 14.அத்ததசி 15.தம்மதசி 16.சித்தார்த்த 17.தீஸ 18.விஜயபுஸ்ஸ 19.விபாசி 20.சம்புத்த ஸிக்ஹி 21.சம்புத்த வேசபு 22.சம்புத்த ககுசந்த 23.கோணாகமன 24.காஸப்ப

மேற்கண்ட 24 புத்தர்களும், நம்முடைய கவுதம புத்தருக்கு முன்னால் பிறந்த புத்தாவதாரங்கள். இவர்களுக்குப் பின் இறுதியாக (அவதாரம் எடுத்து)ப் பிறந்தவர்தான் கவுதம புத்தர் என்கிறது மகாவம்சம்.

1910ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அபிதானசிந்தாமணி, தண்ணாகரர் - சரணங்கரர் - தீபங்கரர் - சுமங்களர் இவர்கள் நான்கு பேரையும் கூடுதலாகப் புத்தாவதாரமாகச் சொல்கிறது.

“பத்மசாம்பவ” என்ற புத்தர் இந்தியாவில் இருந்து திபெத்திற்குச் சென்றுள்ளார். கிழக்குத் திசையில் “ஆக்சோபய புத்தர்”, மேற்கில் “அபிதாப புத்தர்”, வடக்கில் “அமோகசித்தி புத்தர்”, தெற்கில் “ரத்னசாம்பவ புத்தர்” - நான்கு திசைகளிலும் இந்த நான்கு புத்தர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

“பைசாஜ்யகுருப் புத்தரின்” ஆளுமையில், கிழக்கு மண்டலம் முழுவதும் இருக்கிறது. பில்லி, சூனியம், பிசாசுகளை அடக்குவதற்காகக் “குகாய் புத்தர்” இந்தியாவில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார்.

திரிபிடகத்தில் ஒன்றான புத்தவம்ச நூலில் து´தலோகத்தில் இருக்கும் மைத்ரிய புத்தர் மீண்டும் பிறப்பதற்குக் காத்திருக்கிறார் என்கிறது. மகாவதன என்ற பவுத்த நூல் இன்னும் சில பல புத்தர்களைச் சொல்கிறது.

மகாராஜிகலோகம், திரியத்திரிம்சத்லோகம், யமலோகம், து´தலோகம், நிருமாணரிதிலோகம், பரநிருமிவதசவிருத்திலோகம் ஆகிய ஆறு தெய்வலோகங்களில், து´தலோகத்தில் இருந்து 1616 ஆண்டுகளில் பிரபாபாலன் என்ற ஒரு புத்தர் பிறக்கப் போவதாக மணிமேகலை சொல்கிறது. இதில் சொன்ன 1616ஆம் ஆண்டு குறித்து ஒன்றும் விளங்கவில்லை என்கிறார் உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

இனிமேல் அவதரிக்கப் போகும் புத்தரை “ஆழ்வாரான புத்தர்” என்கிறார் தக்கையாப்பரணி உரையாசிரியர் சதுராணனன். நீலகேசியின் உரையாசிரியர் புத்தத் துறவியை தாது ஆழ்வார், தாடை ஆழ்வார் என்கிறார்.

வைணவ சமயக் குரவர்கள் ஆழ்வார்கள். கி.பி.825க்குப் பிறகு இவர்கள் ஆச்சாரியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களின் கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகப் புத்தரைக் கொண்டுபோய் வைத்துப் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கிவிட்டார்கள்.

கி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்ட மச்சபுராண ஸ்லோகம் இது:-

“மத்சய குர்மோ வராஹஸ்க நரசிம்ஹோ த வாமஹ! ராமோ ரமசோ கிருஸ்னங்கா ‘புத்தா’ கல்கி இதிகா க்ரம்திஹ்!”

1.மச்சாவதாரம் 2.கூர்மாவதாரம் 3.வராகவதாரம் 4.நரசிம்மவதாரம் 5. வாமணவதாரம் 6.ராமாவதாரம் 7.பலராமவதாரம் 8.கிருஷ்ணாவதாரம் 9.புத்தாவதாரம் 10.கல்கி அவதாரம் - இவை மேலே கண்ட மச்சாவதார ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள 10 அவதாரங்கள். அதாவது விஷ்ணுவின் 10 அவதாரங்கள். இதில் 9ஆம் அவதாரமாக வைக்கப்பட்டு இருக்கிறார் புத்தர், புத்தாவதாரமாக.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. ஆரியர்கள் பெரிதும் பேசப்படும் “பரசுராமன் அவதாரம்” இந்த ஸ்லோகத்தில் எங்கே காணோம்? ஏன் இடம் பெறவில்லை? விடை மிக மிக எளிது.

பரசுராமன் அவதாரமாக இருந்த இடத்தில் இருந்து அவனைத் தூக்கிவீசிவிட்டுச் சத்தம் போடாமல் புத்தரை வைத்துப் புத்தாவதாரம் என்று சொல்லிப் புத்தரைக் கடவுளாக்கிவிட்டார்கள். புத்தரை அவ்விடத்தில் இருந்து நீக்கிவிட்டால், அந்த இடம் பரசுராமனுக்குச் சொந்தமாகிவிடும்.

கி.மு.6ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒரு பகுத்தறிவுவாதியான சூத்திரத் தலைவர் புத்தரையும் அவரின் பவுதத்தையும் எதிர்த்து வெற்றி பெற முடியாத ஆரியர்கள், 1200 ஆண்டுகளில் புத்தரை வைணவக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக்கிப் புத்தரைக் கடவுளாக்கிவிட்டார்கள்.

இதற்கு வித்திட்டவர் நாகர்ஜுனர், வித்திட்டு வளர்த்தது மகாயானப் பவுத்தப் பிரிவு. புத்தரைப் புத்தபகவான் என்றார் நாகர்ஜுனர். கடவுளுக்கு நிகராகப் போதி சத்துவர் என்றார்.

இறுதி முடிவான சத்தியம் பரிபூரணமாகும். அது இருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். ஆனால் அது இல்லை, அதாவது சூன்யமானது. அது அறிவுக்கு எட்டாதது. எந்த மொழியாலும் விவரிக்க முடியாதது. சதையும் இரத்தமுமான உடல் இருப்பதாக ஊனக்கண்ணுக்குத் தெரியும். உண்மையில் அத்தோற்றம் மாயை, சூன்யம். அதுதான் புத்தரின் ரூபகாயமான தோற்றம், அவரின் பூத உடல். இதுவே தர்மகாயம் அல்லது “ததாதா” என்று மகாயானம் கூறுகிறது.

இந்த சூன்ய “ததாதா” என்ற பெயரைத்தான் “ததாகர்” என்று புத்தரின் பெயராக மாற்றித் திரிபிடகத்தில் நுழைந்துவிட்டார்கள் மகாயானர்கள். ததாகர் என்றால் தெய்வீகம். புத்தர் தெய்வீகமானவர் என்பதே இதன்பொருள்.

“மகாயானம் புத்தரை ஒரு தெய்வமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உடையவராக மாற்றியது. அவரை வழிபடுவதன் மூலம் எல்லோரும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறுகிறது. புத்தர் மறுத்த கடவுள், பவுத்தத்தைத் திருப்பித் தாக்கியுள்ளது. மகாயான பவுத்தம் மூடநம்பிக்கைகள் கொண்ட கழிவுப் பொருள்களுக்கு ஒரு வாகனமாக மாறிவிட்டது” என்கிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா.

        - தொடரும்

Pin It