Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருஞ்சட்டைத் தமிழர்

balachchandran_630

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு படமும், ஓர் அறிக்கையும், தமிழக மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மகன், 12 அகவைப் பாலச்சந்திரன், தன் கடைசி நிமிடங்களில், ஏதோ ஓர் உணவு உண்ணும் படமும், அருகிலேயே அவன் கொலையுண்டு கிடக்கின்ற படமும், 19.02.13 காலை ‘இந்து’ நாளேட்டில் வெளியாகியிருந்தது. பிபிசி - யின் 4ஆவது அலைவரிசை வெளியிட் டிருந்த அப்படங்களைத் தமிழ்நாட்டில் ‘இந்து’ ஏடுதான் முதன்முதலில் கொண்டு வந்து சேர்த்தது. அந்த ஆங்கில ஏடு, கடந்த காலங்களில் நமக்கு எதிரான செய்திகள் பலவற்றை வெளியிட்டிருந்த போதிலும், இப்படங்களின் மூலம், அறம்கூறு உலகிற்கு நேர்மை மிகுந்த ஒரு செயலைச் செய்துள்ளது. இலங்கை அரசு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்பது, இப்படங்களின் மூலம், ஐயமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பதுங்கு குழியில், பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும்போது எடுக்கப்பட்ட படத்திற்கும், அவனைத் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருக்கும் படத்திற்கும் இடையில் வெறும் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே இருக்க முடியும் என்று, உலகப் புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெர்லிக் பவுண்டர் கூறியுள்ளார்.

தான் கொல்லப்படவிருக்கும் கொடு மையை அறியாமல், உடம்பில் சட்டை யின்றி, ஒரு கைலியை மேலே போட்டுக் கொண்டு, எங்கோ, எதையோ பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பிள்ளையின் படம், அழ வைத்துள்ளது ஆயிரக்கணக்கானோரை! எப்படி மனம் வந்தது இந்தப் பிள்ளையைச் சுடுவதற்கு என்று எண்ணியவர்களின் நெஞ்சமெல்லாம் எரிந்தது தீப்பிடித்து!

பாலச்சந்திரனின் கண் எதிரே ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்ததாக அந்தப் பிள்ளையின் மார்பை ஐந்து தோட்டாக்கள் துளைத்துச் சென்றிருக்கின் றன. 'இனிப் பொறுப்பதில்லை' என்னும் மனநிலையைத் தமிழக மக்களிடம் அந்தப் படங்கள் உருவாக்கியுள்ளன. இதற்குப் பிறகும் இலங்கையை நட்பு நாடென்று கூறுவாரோடு, நட்புக் கொள்ள நமக்கு ஏதும் இல்லை என்ற நிலை நாட்டில் ஏற்பட் டுள்ளது. கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் ஏற்றித் தண்டிக்கப்பட வேண்டும் என்னும் குரல் எல்லோரது நெஞ்சங்களிலும் உரத்து ஒலிக்கிறது.

ஆனாலும் என்ன செய்வது? நம் நாடு ஒரு விசித்திரமான நாடு. இங்கே தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர். விடுவிக்கப்பட வேண்டியவர்களோ, தூக்கு மேடையில் ஏற்றித் தண்டிக்கப்படுகின்றனர்.

கே.ஆர்.நாராயணன், அப்துல்கலாம் ஆகியோர் இந்தியக் குடியரசுத் தலைவர்க ளாக இருந்த ஆண்டுகளில் ஒருவர் கூடத் தூக்கில் ஏற்றப்படவில்லை. ஆனால் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் ஆனதும், மரண தண்டனைகள் மளமளவென்று நிறைவேற் றப்படுகின்றன.

கசாப், அப்சல் குரு ஆகியோரைத் தொடர்ந்து, வீரப்பனின் நண்பர்கள் நால்வரது கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.

வீரப்பன் நண்பர்களின் வழக்கு வினோதமானது. மைசூர் தடா நீதிமன்றம், 2001 செப்டம்பரில் அவர்களுக்கு (மொத்தம் 7 பேர்) வாழ்நாள் தண்டனைதான் வழங்கி யது. அதனைக் குறைக்கக் கோரி, தில்லி உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். ஆனால் அந்நீதிமன்றமோ, 2002 ஜனவரியில் அவர்களில் மூவரை விடுவித்து விட்டு, நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கிவிட்டது.

பொதுவாக, ஏழை, எளிய மக்கள் தொடுக்கும் வழக்குகள் 20,25 ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும். ஆனால், வீரப்பன் நண்பர்களின் மேல் முறையீட்டு வழக்கை, மூன்றே மாதங்களில் விசாரணை செய்து, உச்சநீதி மன்றம் மரணதண்டனை வழங்கி உள்ளது.

இப்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி, மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இச்சூழலில், 24.02.2013 அன்று, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையும் பெரியதொரு விவாதத்தைத் தொடக்கி வைத்துள்ளது.

நீதிபதி கே.டி.தாமஸ், ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்து, இறுதித் தீர்ப்பையளித்த நீதிபதிகள் மூவரில் ஒருவர். மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவிற்குத் தலைமை வகித்தவரும் அவரே. 1999ஆம் ஆண்டு, ராஜீவ் கொலை வழக்கில், தானும், மற்றவர்களும் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இப்போது அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தங்களின் தீர்ப்பு ஏன் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளார். அவை,

1. வாழ்நாள் தண்டனையை விடக் கூடுதலான தண்டனையை அனுபவித்துவிட்ட அவர்களைத் தூக்கில் ஏற்றுவது, ஒரே குற்றத் திற்கு இரண்டு முறை தண்டிப்பதாகும்.

2. தீர்ப்பு வழங்கியபோது, கவனிக்கப்பட வேண்டிய சில உண்மைகளை நாங்கள் கவனிக்கத் தவறி விட்டோம்.

இரண்டு காரணங்களையும் நீதிபதி தன் அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளார்.

வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியச் சட்டம் 433(ஏ) பிரிவின்படி, அவர்களின் தண்டனைக் குறைப்பு பற்றி ஆராயக் குழு அமைக்கப் பட்டிருக்கும். பரோல் விடுப்பும் அவர்களுக்கு இடையிடையே வழங்கப்பட்டிருக்கும். ஆனால் 22 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் அதுபோன்ற எந்த வாய்ப்பும் இல்லை. எனவே வாழ்நாள் தண்டனையை விடக் கூடுதலான துன்பங்களை அவர்கள் அனுபவித்துவிட்டனர். எனவே, இன்னொரு முறை அவர்களைத் தண்டிப்பது, சட்டத்திற்கே புறம்பானது என்கிறார் நீதிபதி.

தீர்ப்பு வழங்கும்போது, குற்றம் சாற்றப்பெற்றவர்களின் பழைய வரலாறு, அன்றைய சூழ்நிலை ஆகியன குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அதனைச் சரியாகச் செய்திட அன்று தவறிவிட்டோம் என்றும் நீதிபதி கூறுகின்றனர்.

நீதிமன்ற வரலாற்றிலேயே இது ஒரு புதிய முன்மாதிரியாக உள்ளது. தன் மனச் சாட்சியின் உறுத்தல் காரணமாக, மூன்று உயிர்களைக் காப்பாற்ற முன்வந்துள்ள நீதிபதியை நாம் பாராட்டுகின்றோம். அதே வேளையில், தீர்ப்பு வழங்கிப் பல ஆண்டுகள் சென்ற பிறகு, இவை போன்ற உண்மைகளை நீதிபதிகள் வெளிப்படுத்தும் போது, குற்றம் சாற்றப்பெற்றவர்களுக்கான தண்டனை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால், நீதி என்ன ஆகும் என்ற கவலையும் நம்மைச் சூழ்கிறது.

எவ்வாறாயினும், புலி பெற்ற புலிக்குட்டியின் மரணமும், நீதிபதியின் அறிக்கையும் இன்றைய சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

கொலைகாரன் ராஜபக்சே தண்டிக்கப் பட வேண்டும் என்ற முழக்கமும், மரண தண்டனை சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்ற முழக்கமும் நாடெங்கும் பரவியுள்ளன.

வாருங்கள் தமிழர்களே... முழக்கங்களை இயக்கங்களாக்குவோம்!

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 மீ.த.பாண்டியன் 2013-03-07 16:45
தலைப்பு மிக அருமை. தலைவர்களுக்கும் , இயக்கங்களுக்கும ் பொருந்தக் கூடியது.
Report to administrator
0 #2 raghava raj 2013-03-17 05:00
சரியான கருத்துக்கள் தான்.ஆனால் இதைச் சொல்வதற்கு திருவாளர் சுப.வீரபாண்டியன ் ஐயா அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
Report to administrator
0 #3 raghava raj 2013-03-17 05:24
வாருங்கள் தமிழர்களே...முழ க்கங்களை இயக்கங்களாக்குவ ோம்.முதலில் "துரோகிகளைத் துரத்தியடிப்போம ் என்னும் முழக்கத்தை இயக்கமாக்குவோம் .
Report to administrator
0 #4 gopi 2017-06-03 11:06
raghava raj சுப.வீ அவர்களின் தகுதியை பரிசோதிக்க உமக்கு என்ன தகுதி இருக்கிறது.
Report to administrator

Add comment


Security code
Refresh