சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை ஓரளவுக்குப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இன்று விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஆணாதிக்கவாதிகளின் கொடுமை களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ‘ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ என்று இதே தமிழ் நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களால் சாதி ஆதிக்கவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் பாதிக்கப்படுவதாகத் தற்பொழுது புலம்பத் தொடங்கியுள்ளனர். ஒரு சட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது என இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து பார்க்காமல், அந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பவர்களின் நிலையில் இருந்து அச்சட்டத்தை மதிப்பிடுவது அறிவுடை ஆகுமா?

தமிழினப் பாதுகாவலராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மருத்துவர் ராமதாஸ், இன்று தன் சாதிக்காரர்களை மட்டும் திரட்டி, சேரித்தமிழர் களுக்கு எதிராகப் ‘பேருரை’ ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையை மக்கள் தொலைக்காட்சி (தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் தொலைக்காட்சி என்று இதற்கொரு பெருமை உண்டு. அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரர்கள் தூய சாதியவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்பது செந்தமிழுக்குப் பெருமை சேர்க்குமா என்று தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது) நேரடியாக ஒளிபரப்புச் செய்ததைப் பார்த்தீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டனர்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்: ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’  நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன் என்று மார் தட்டிய கிருஷ்ணனின் பகவத் கீதையை ‘முட்டாளின் உளறல்’ என்று செவிட்டில் அறைந்தாற் போல் புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அந்த நான்கு வர்ணங்கள்தான் பிற்காலத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளாகப் பரிணாமம் பெற்றன. அந்தச் சாதிகளை ஆதரித்து, நியாயப்படுத்தி, பாதுகாத்து, அதன் மூலம் பிற சாதியினரை இழிவுபடுத்தி, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் எவனுக்கும் அம்பேத்கர் சொன்ன கருத்தையே பதிலாக வழிமொழிகிறேன் எனப் பதிலுரைத்தேன்.

பகுத்தறிவுக்கு எதிரான சாதிய மனம் எத்தகைய அறிவியல் ஆதாரங்களையும், சமூக உண்மைகளையும் ஏற்காது. எனவே, இத்தகைய உளறல்களைச் சாதியை முற்றாக மறுக்கும் எவரும் விவாதித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. ஆனால், இத்தகைய சமூகக் குற்றத்தை ஒரு மாநாட்டைத் திரட்டிச் செய்யும் சமூகக் குற்றவாளிகள் மீது அரசு எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதைவிடப் பெருங்குற்றம். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், முன்வைக்கப்பட்ட வன்கருத்தியல்களால்தான் தருமபுரியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன.

அவர்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டன. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி அதே இடத்தில் மீண்டும் தலித் மக்களுக்கெதிராக வன்மத்தை உமிழும் உரைகளைப் பேசவும் ஒளிபரப்பவும் தாராளமாக அனுமதி அளித்த நீதிமன்றத்தாலும் அரசாலும்தான் மாநாடு தொடங்கும் முன்பே, மரக்காணம் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகள் ஏவப்பட்டிருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான கருத்து வன்மங்களைத் தலித் மக்கள் மீது சுமத்தும் முன்னணித் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தால், மரக்காண வன்கொடுமைகள் அரங்கேறி இருக்காது.

வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டிய அரசு அலட்சியமாக நடந்துகொள்கிறது. இச்சட்டத்தை நடை முறைப்படுத்தாததுதான் குற்றமே தவிர, சட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அண்மையில் ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது என்பதற்காக, அதைத் திரையிடவிடாமல் தடுத்து நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடிய அ.தி.மு.க. அரசு, சாதியவாதிகளை மட்டும் தலித் மக்களுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதன் நோக்கம் என்ன?

வன்னியர் சங்கமாக உருவெடுத்து, பின்னர் எந்தவொரு சாதியாலும் தனியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட காரணத்தால், ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற முகமூடி அணிந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரிய சிந்தனையின் அடிப்படையில், கன்´ராம் அவர்கள் கால் நூற்றாண்டுகாலம் கடுமையாக உழைத்து, ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கினார். சாதிய சமூகத்தில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இழிநிலைக்குத் தள்ளப் பட்ட பெரும்பான்மை மக்களை (பகுஜன் சமாஜ்) பிற்படுத்தப் பட்டோர்  தாழ்த்தப்பட்டோர்  மதச்சிறுபான்மையினர் என நேர் மறையாக அணிதிரட்டி, தொண்ணூறுகளில் ஆட்சி அதிகாரத்தை அவர் கைப்பற்றினார். பின்னர், அது மாயாவதி தலைமையில் சீர் குலைந்து போய்விட்டது என்பது தனிக் கதை.

கன்´ராமின் தத்துவத்தை நகல் எடுத்து, ஆட்சி அதிகாரக் கனவில் திளைத்த ராமதாஸ், சில ‘தலித் ஒற்றுமை’ நாடகங்களை அரங்கேற்றினார். இதைத் தலித் மக்கள் தொடர்ந்து சந்தேகித்தும் எதிர்த்தும் வந்தனர். அதற்கான காரணத்தை இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். எவ்விதச் சமூக இணக்கத் தையும் உருவாக்காமல் அரசியல் தலைவர்கள் மட்டுமே ஒன்றிணைவதால் சமூக நல்லிணக் கத்தைப் பேணிவிட முடியாது. எந்தவொரு சாதியும் தன்னைச் சாதி நீக்கம் செய்து கொள்ளாமல், ஒன்றிணையவே முடியாது. அப்படி ஒன்றிணைந்தாலும், அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சாதி ஆதிக்கம் பதுங்கி நிற்கும்; அதிகாரக் கனவு கைகூடிய பிறகு, அது தன் கொடூர முகத்தை வெளிப்படுத்தும்.

ஆகவேதான் பிற்படுத்தப்பட்டோர்  தாழ்த்தப்பட்டோர்  மதச்சிறுபான்மையினர் என நேர்மறையான அடையாளங்களுடன் அரசியலில் மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டுத் தளத்திலும் அணிசேரும் போதுதான் அது நிலையான சமூக இணக்கத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும். ஆனால் ராமதாஸ் தற்பொழுது உருவாக்கி யிருப்பது அப்பட்டமான சாதிவெறிக்கூட்டணி. இது, காலங் காலமாக மநுதர்ம அடிப்படையில் ஊரையும் சேரியையும் நிரந்தரமாகப் பிரிக்கும் கூட்டணி. தன் சுயசாதி முன்னேற்றத்திற்கு (அதுகூட இன்று சுருங்கி, தன் குடும்ப முன்னேற்றமாகி விட்டது. அதற்கு வன்னியர் இரையாவதை அவர்களே உணரத் தொடங்கி விட்டனர்). சேரித் தமிழர்களை எதிரிகளாக அடையாளம் காட்டு கின்றனர். அதாவது தன் சாதியின் சூத்திரப் பிறவி இழிவு அடையா ளத்திற்குக் காரணமான சாதி அமைப்பையும், அந்த அமைப்பை இன்று வரை நியாயப்படுத்தும் பார்ப்பனர்களையும், பிற இடை நிலைச் சாதி வெறியர்களையும் பங்குதாரர்களாகக் கொண்ட கூட்டணி இது. அந்த வகையில், சாதி அமைப்பைத் தகர்ப்பதையே தங்களின் பண்பாடாகக் கொண்டுள்ள தலித்துகளுக்கு எதிரான கூட்டணி இது. அதனால்தான் அதற்குத் ‘தலித் அல்லாதோர்’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

“இந்தியாவின் (2500 ஆண்டுகால) ஒட்டுமொத்த வரலாறே பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போராட்டமே” என்றார் அம்பேத்கர். இதைத்தான் ஆரியர்  திராவிடர் போராட்டம் என்று பெரியார் அடையாளப்படுத்தினார். பார்ப்பனியம் என்பது ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கும் கொள்கை. பவுத்தம் சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கை. படிநிலைப்படுத்தப்பட்ட சாதிய சமூக அமைப்பையும் அதற்கு ஆதாரமான (இந்து) மதத்தையும் எதிர்த்து, ஏற்க மறுத்த தொல்குடி மக்கள் சமத்துவமான பவுத்த பகுத்தறிவு நெறியைப் போற்றியதால், சேரிக்குத் தள்ளப்பட்டனர். சாதிய அமைப்பை ஆதரித்தவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டு, இவ்வமைப்பை எதிர்க்கும் சேரி மக்களைத் தாக்கும் ஏவலாட்களாக, அதே நேரத்தில் உரிமை அற்றவர்களாக இன்றளவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து தர்மத்தைப் போற்றியவர்கள் ‘தர்மகர்த்தா’க்களாக ஆக்கப்பட்டனரே தவிர, அவர்களுக்குக் கோயில் கருவறையில் நுழையும் உரிமையை  அவர்கள் சூத்திரர்கள் என்ற ஒரே காரணத் திற்காக  இன்றுவரை பார்ப்பனியம் மறுத்து வருகிறது. சூத்திரர்கள் எவ்வளவுதான் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக இருந்தாலும், அவர்கள் ‘சற்சூத்திரர்’களாக ஆகலாமே தவிர, ஒரு போதும் பிராமணர்களாக ஆக முடியாது என்பதுதான் இந்து தர்மம்.

இரண்டாயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் சேரிக்குள் தள்ளப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், சமத்துவத்தை வலியுறுத்தி, ஊரையும் சேரியையும் இணைக்கவே போராடுகின்றனர்.இவை இரண்டையும் இணைத்துக் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதல்ல தலித் மக்களின் நோக்கம். மாறாக, சாதிகளற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை தலித் மக்கள் தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வேளை இந்த அமைப்பின் பெயர் தடையாக இருக்குமென்றால், இந்த அமைப்பின் பெயரையே மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தியதும்; தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்க தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பெரியார் அறிவித்ததும்  சாதியயாழிந்த சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான உயரிய நோக்கத்தைக் கொண்டதாகும்.

உழைக்கும் மக்களைப் பார்ப்பனியம் பிளவுபடுத்தும்; அம்பேத்கரியமும் பெரியாரியமும் இம்மக்களை ஒன்றிணைக்கும். தலித் மக்களின் லட்சிய நோக்கத்தை ராமதாஸ் போன்ற சமூகக் குற்றவாளிகளால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், அவர்களின் சாதி வெறிக் கூட்டணியும் எந்த அளவுக்கு சாதிப்பித்து தலைக்கேறி ஆடினாலும், சமத்துவத்தின் குறியீடாகிய சாதி மறுப்புக் காதல் திருமணங்களை தலித் மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் இருப்பார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களில் எந்தக் குறைபாட்டையும் காண  காஷ்மீர் முதல் குமரி வரை திரண்டிருக்கும் தலித் மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அதில் இருக்கும் ஒரே குறைபாடு, அது சாதி இந்து அரசு நிர்வாகத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத் தவிர வேறு அல்ல. அதைத் திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை. ராமதாஸ் கூட்டாளிகளின் சவடால் பேச்சுக்களால் அதில் எந்தத் திருத்தத்தையும் செய்ய முடியாது. எனவே, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ள தலித் மக்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை அலட்சியப்படுத்தி, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவர் ராமதாசின் சாதிவெறி போக்குக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால், அம்பேத்கர் இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு; தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும் சாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் திருமணங்களையும் நூற்றுக்கணக்கில் மாநாடுகள் போல அறிவித்து, தொடர்ச்சியாக நடத்துவதையே முக்கிய செயல்திட்டமாக விரைந்து அறிவித்திட வேண்டும்.

Pin It