அன்பார்ந்த வாசகர்களே!

"தலித் முரசு' ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரத் தொடங்கியுள்ள நிலையிலும் காலதாமதமாகவே வெளிவருகிறது எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர். மேலும், விடுபட்ட இதழ்களைப் பற்றி கவலைப்படாமல் தற்போதைய நாளிலிருந்தே இதழைக் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர். உண்மைதான். விடுபட்ட இதழிலிருந்தே கொண்டு வரவேண்டும் என்ற பிடிவாதம் ஒரு லட்சிய நோக்கத்தை அடைவதற்காகவே என்பதால் வாசகர்களும், நண்பர்களும் இந்த இடைக்காலப் பின்னடைவை சகித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதைத் தவிர, எமக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

தலித் இதழியல் வரலாறு ஒரு நூற்றாண்டைக் கடந்து நின்றாலும், பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இதழ் வெளிவந்த வரலாறு இதுவரை இல்லை. அதை தலித் முரசாவது நிறைவு செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையாகிவிடாது. இப்பின்னடைவை இரண்டு ஆண்டுகளில் சீர்செய்துவிட முடியும் என நம்புகிறோம். ஆனால், உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் அது சாத்திய மில்லை. இப்பின்னடைவைக் கண்டு வருந்துவதைவிட, அதை நேர் செய்வதற்கு தோள் கொடுங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இன்றைய தேதியிட்டு இதழைக் கொண்டுவந்தால் கூட அது தாமதமாகவேதான் வெளிவரும். ஆக, இச்சரிவை சீர்செய்வதற்குப் போதிய நிதி ஆதாரம் வேண்டும். அப்போதுதான் இதழை உரிய நேரத்தில் கொண்டுவர இயலும்.

"தலித் முரசு பாதுகாப்பு நிதியத்திற்கு' வாய்ப்பு, வசதி உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் அளித்து உதவுங்கள் என்ற திட்டத்தை அறிவித்து ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் 15 பேருக்கு மேல் கூட இத்திட்டத்தில் இணைந்திடவில்லை; இத்துணை ஆண்டுகள் இதழ் அனுப்பி, தொடர்ச்சியாக வலியுறுத்திய பிறகும் தோழமைமிக்க முகவர்களிடமிருந்து நமக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,33,153 இன்றுவரை வரவில்லை. எனவே, நிதி ஆதாரத்திற்கான பங்களிப்பை விரைந்து நல்க வேண்டும் என தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

– ஆசிரியர்

பின்குறிப்பு : "தலித் முரசு' தொடங்கியது முதல் 15 ஆண்டுகள் வரை கடைசி சில ஆண்டுகளில் அது சற்றுத் தாமதமாக வெளிவந்தது எனினும் ஓர் இதழ்கூட வெளிவராமல் இருந்ததில்லை. ஆனால், 16 ஆவது ஆண்டில்தான் ஒரு பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. தற்பொழுது விடுபட்ட இதழ்களையும் கொண்டு வரும்போது, தற்போதைய செய்திகள் முன் தேதியிட்ட இதழ்களில் பதிவாவதால் பிற்காலத்தில் குழப்பம் ஏற்படும். இத்தகைய சிக்கல்கள் நேர்வதைத் தவிர்க்க இயலாது. எனவே, இதழை வாசிக்கும்போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Pin It