பவுத்தம் ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 19

இந்தியாவை 137 ஆண்டுகள் மவுரியர்கள் ஆட்சி செய்தார்கள். இதில் 85 ஆண்டுகள் பவுத்தம் ஆட்சித் தலைமையில் இருந்தது. அசோகரின் மறைவுக்குப் பின்னர், மவுரியப் பேரரசராக முடிசூடிய அவரின் பேரர் தசரத மவுரியர் தொடக்கம், பிரிஹத்ரத மவுரியர் வரை 44 ஆண்டுகள் நடைபெற்ற மவுரிய பவுத்தப் பேரரசு படிப்படியாக வலிமை குன்றியதுடன், பேரரசின் எல்லைகளும் குறுகிப் போயின. கி.மு.188இல் புஷ்யமித்ர சுங்கன் உருவத்தில் பவுத்த மவுரியப் பேரரசு முடிவுக்கு வந்தது.

புஷ்யமித்ரன் ஓர் ஆரியன். இவன் சுங்க வம்சத்தைச் சேர்ந்தவன். சுங்கர்கள் சாமவேதி பிராமணர்கள் என்கிறார் ஹரிபிரசாத் சாஸ்திரி.

சாமவேதிச் சுங்கர்கள் விலங்குகளைப் பலியிட்டு நடத்தும், யாகம், சோமயாகம் போன்றவைகளை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செய்து வருபவர்கள். பேரரசர் அசோகரின் ஆணைப்படி உயிர்ப்பலி, யாக வேள்விகள், சடங்குகள், புரோகிதம் போன்றவை தடை செய்யப்பட்டதால், சுங்கர்கள் மட்டுமல்லாமல் மொத்த ஆரியமும் செய்வதறியாது குமுறிக் கொண்டு இருந்தது.

முக்கியமாக ஆரியர்களின் சதுர்வருணக் கோட்பாடு பவுத்த ஆட்சியில் நிலைகுலையத் தொடங்கி யிருந்தது. ஆரியர்களின் இலட்சிய சமுதாயக் கோட்பாடு இதன்மூலம் தகர்வதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் பவுத்தப் பேரரசின் கடைசி மன்னனான பிரிஹத்ரத மவுரியரின் படைத் தலைவனாய் இருந்த புஷ்யமித்திரன், திட்டமிட்ட சதியின் மூலம் மன்னரைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.

இது திட்டமிட்ட கொலைதான் என்பதை சாவர்கர் ஒப்புக் கொள்கிறார். இதோ அவரின் வாக்குமூலம், “வரலாற்றினால் விளக்கப்படாத யாதோ ஒரு காரணத்தினால் பிரிஹத்ரத மன்னன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் சிறு குழப்பம் நிகழ்ந்தது. பரபரப்பான இவ்வேளையில் பெயரளவில் அரசராகப் பதவியேற்றிருந்த பிரிஹத்ரத மவுரியனை நோக்கி அணிவகுத்துச் சென்று படைத்தலைவரான புஷ்யமித்ரர் அரசருடைய தலையைக் கொய்து கொன்றார்”.

வரலாற்றில் விளக்கப்படாத ஏதோ ஒரு சிறு குழப்பமாம், அதை அடக்குவதை விட்டுவிட்டுப் படைத் தலைவன் மன்னனைக் கொன்றானாம். திட்டமிட்ட சதி இதன் பின்புலத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதோ சாவர்கரின் இன்னொரு வாக்குமூலம், “அசோகரின் வழித்தோன்ற லான பிரிஹத்ரத மவுரியரைக் கொலை செய்ததன் மூலம் ஒரு தேசியக் கடமையைப் புஷ்யமித்ரர் நிறைவேற்றி இருந்தார்”... “பிராமணர்கள், சத்திரியர் கள் மற்றும் ஏனைய இந்து மக்கள் புத்த சமயக் கோட்பாடுகளின் மீது... அருவெறுப்பும் வெறுப்பும் கொண்ட தற்குத் தத்துவ விசாரணை அல்லது அறிவாற்றல் விவாதம் காரணம் அல்ல. மாறாக அதற்குக் காரணமாக அமைந்தது தேசியம் மற்றும் அரசியல் காரணங்களே ஆகும்”.

இந்தியா ஒரு மொழி பேசும், ஒரு இனமக்கள் வாழும் ஒரே நாடாக இருந்ததில்லை. பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு இனங்கள் வாழும் ஒரு நிலப்பரப்பு. அந்தந்த நிலப் பரப்புகளில் வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, இனம் சார்ந்துதான் தேசியம் அமையப் பெற்றிருக்கிறது.

சமஸ்கிருதம் பேசும் ஆரிய இனம் சார்ந்த மக்கள் வாழும் நிலப்பகுதி (நாடு - மாநிலம்) இந்தியாவில் எங்கும் என்றும் இருந்ததில்லை. அதனால் அவர்களுக்குத் தனித் தேசியம் இல்லை. தமிழ் பிராமணர், மலையாள பிராமணர், கன்னட பிராமணர், தெலுங்கு பிராமணர் என்று அவர்களே தங்களை இன்னும் பிரித்து அழைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

அதனால்தான் இந்தியா முழுவதி லும் ஒரு தேசியத்தை உருவாக்கி, அதற்குத் தாமே சொந்தம் கொண்டாடி, பவுத்தத் தால் சரிந்துபோன சதுர்வருணத்தை மீண்டும் நிலைநிறுத்தி, அகண்ட பாரதீய இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் ஆரியத் தின் நோக்கம்தான், அன்றே பிரிஹத்ரத மவுரியனைக் கொலை செய்வதன் மூலம் புஷ்மித்ரனின் தேசியக் கடமையாக இருந்திருக்கிறது என்பதை சாவர்கரின் எழுத்துகள் உறுதிசெய்கின்றன.

பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித், கவி பாணாவை மேற்கோள் காட்டிப் புஷ்யமித்ர சுங்கன், அவனின் மன்னன் பிரிஹத்ரத மவு-ரியரைக் கொன்ற செயல் அநாகரிகமானது, ஆரியச் சட்டத்திற்கு முரணானது என்று சொல்கிறார்.

அப்போது இருந்த ஆரியச் சட்டம் என்ன சொல்கிறது? பதிவு செய்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

1. சத்திரியனுக்கு மட்டுமே மன்னனாகும் உரிமை உள்ளது. பிராமணன் ஒருபோதும் மன்னன் ஆக முடியாது.

2. மன்னனின் அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யக் கூடாது, அது பாவம்.

3. எந்த ஒரு பிராமணனும் ஆயுதம் ஏந்தக் கூடாது.

ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், “ஒரு பிராமணன் எந்த ஒரு ஆயுதத்தையும் சாதாரணமாகப் பார்ப்பதற்குக் கூட அதைக் கையில் எடுக்கக் கூடாது” என்று தெளிவாகக் கூறுகிறது.

பவுத்த மவுரிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவரை கொலைக் கருவியால் கொன்று, மன்னனாக முடிசூடியதன் மூலம் புஷ்ய மித்திரன் ஆரியச் சட்டத்தை முழுமையாக மீறிவிட்டான்.

இங்கு ஒரு செய்தியை கவனிக்க வேண்டும். பு-ஷ்யமித்திரன் மவுரிய மன்னனைத் திடீரெனக் கொல்லவில்லை.

படைத்தலைவனாகவோ, மன்னனாகவோ பிராமணன் உரிமை கோரக்கூடாது என்பதுடன், ஆயுதத்தைக் கையால் தொடவும் கூடாது என்று ஆரியச் சட்டம் சொல்லும்போது, அதை மீறி, அரசப் படையின் தலைவனாக புஷ்யமித்திரன் பதவி ஏற்றதும், ஆயுதம் ஏந்தியதும், பின்னர் மன்னனைக் கொலை செய்ததும், முன்கூட்டிய புஷ்யமித்ரனின் திட்டமிட்ட சதி என்பது வெளிப்படை யாகப் புலனாகிறது.

புஷ்யமித்ரனின் இச்செயலைக் குறிப்பிடும் கவிபாணா அவனை இழிபிறப்பாளன் என்று சொல்வது கவனிக்கத்தக்கது.

புஷ்யமித்ரன் ஆரியச் சட்டத்தை மீறினான். எதிர்காலத்தில் இந்தியாவை ஆரியத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வர புஷ்யமித்ரனின் செயலை நியாயப் படுத்தும் வேலையில் ஆரியம் இறங்கியது. அதாவது முந்தைய ஆரியச் சட்டம் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, பு-திய சட்டம் உருவாக்கப்பட்டது - அது மனுஸ்மிருதி.

டாக்டர் அம்பேத்கரின் ஆய்வின் அடிப்படையில் சுமதி பார்கவா என்பவனின் புனைப்பெயரே மனு. அம்பேத்கர் சொல்வதைக் கேட்போம்,

“இந்த சுமதி பார்கவா இந்தச் சட்டத்தொகுப்பை எப்போது இயற்றினார்? இது இயற்றப்பட்டக் காலத்தைத் துல்லியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்றாலும், நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு கால அளவைக் குறிப்பிட முடியும். தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி சுமதி பார்கவா திட்ட மிட்டே மனுஸ்மிருதி என்று பெயர் சூட்டிய இந்நூலை கி.மு.170க்கும் கி.மு.150க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றியிருக்க வேண்டும். புஷ்யமித்ரனின் பிராமணியப் புரட்சி கி.மு.185இல் நடந்தது என்பதை நினைவில் கொண்டால், மனுஸ்மிருதி என்ற தொகுப்பு மவு-ரியர்களின் பவுத்த அரசுக்கு எதிரான பிராமணியப் புரட்சியின் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதற் காகப் புஷ்யமித்ரனால் பிரகடனம் செய்யப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது...மனுஸ்மிருதி ஒரு புதிய சட்டத் தொகுப்பாகும், அது, முதன் முதலாகப் புஷ்யமித்ரனின் ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது”.

இம்மனுஸ்மிருதி சொல்கிறது, “அரசின் படைத்தலைவராக இருப்பதற்கும், அரசாங்கத்திற்கே தலைவராக இருப்பதற்கும், அனைவரின் மீதும் பேராதிக்கம் செலுத்துவதற்கும் பிராமணனுக்குத் தகுதி உண்டு” (12-100).

“அரசன் பிராமணர்களுக்கு எதிராக இரும்புக் கரத்தைப் பிரயோகித்தால், பிராமணனே அவனை(மன்னனை)த் தண்டிக்கலாம்”(9-320).

“இருபிறப்பாளர்(ஆரியர்) வகுப்புக்குப் பேரிடர் ஏற்பட்டால் அவர்கள் ஆயுதம் ஏந்தலாம்”(8-348).

ஆயுதத்தைக் கையால் தொடவே கூடாது என்ற பழைய ஆரியச்சட்டம், புஷ்யமித்ரனின் செயலை நியாயப்படுத்தும் பொருட்டு, மறைக்கப்பட்டு, புதிய மனுஸ்மிருதி உருவானது. இது பவுத்தத்திற்கும் பவுத்தர்களுக்கும் எதிரான கருத்துகளைப் பகிரங்கமாகச் சொன்னது.

மன்னனைக் கொல்லும் செயலைப் புஷ்யமித்திரன் செய்ததன் நோக்கம், புத்தமதம் அரசு மதமாக இருப்பதை ஒழித்துக்கட்டுவதும், பிராமணர்களை இந்தியாவின் இறையாண்மை பெற்ற ஆட்சியாளராக ஆக்குவதும்தான் என்ற அம்பேத்கரின் பார்வையை, மேற்சொன்ன மனுஸ்மிருதி உறுதி செய்கிறது. விளைவு?

புஷ்யமித்திரன் ஒவ்வொரு புத்தத் துறவியின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான்.

“வைதீக வெறியும், பிறமத வெறுப்பும் கொண்ட சுங்கப் பேரரசர்களின் ஆட்சியில் பவுத்தர்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. பல பவுத்தர்கள் இப்போதும்கூட புஷ்யமித்ரன் பெயரை மிகவு-ம் வெறுப்போடு, சாபமிடும் முறையில்தான் உச்சரிக்கிறார்கள் என்று சீன ஆதாரங்களில் இருந்து தெரிகிறது” என்கிறார் ஹரிபிரசாத் சாஸ்திரி.

1. ஆட்சி செய்வதற்கும், மன்னனைக் கொல்வதற்கும் பிராமணனுக்கு உரிமை உண்டு என்பதை அது நிலைநிறுத்தியது. 2. பிராமணர்களைத் தனிச் சலுகை பெற்றவர்களின் ஒரு வகுப்பாக ஆக்கியது. 3. வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4. வெவ்வேறு சாதிகளிடையே போராட்டங்களையும், சமூக விரோத உணர்வையும் உருவாக்கியது. 5. சூத்திரர்களையும் பெண்களையும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது. 6. படிப்படியான ஏற்றத்தாழ்வு முறையைத் தோற்றுவித்தது என்று பட்டியலிடும் டாக்டர் அம்பேத்கர், புஷ்யமித்ரனின் நோக்கம் பழைய சமூக முறையான சதுர்வருணத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே ஆகும் என்கிறார் மிக அழுத்தமாக.

பவுத்தம் சூழ்ச்சியால் சுங்கனிடம் சரிந்தாலும், இன்றுவரை அது ஆரியத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் நிற்கிறது.

                                                - அடுத்த இதழில் நிறைவடையும்.

Pin It