எத்தனை நாள்கள்... எத்தனை மேடைகள்... அவரோடு என் நாள்கள் கழிந்திருக்கின்றன. திடிரென்று பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைந்து விட்டார் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.

லண்டனில் இருக்கும் என்னோடு தொடர்பு கொண்டு, நண்பர் பெரியார்தாசன் மருத்துவமனையில் இருக்கும் செய்தியை தோழர் உமா கூறியபோது, சென்னை சென்றவுடன் அவரைச் சென்று காண வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இனி அவரைப் படமாகத்தான் பார்க்க முடியும் என நினைத்தால் நெஞ்சம் கலங்குகிறது.

இறுதியாய் அவரை குவைத் அல்லது வாணியம்பாடிக் கூட்டத்தில் சந்தித்தேன். அப்போது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார். ஒரு பகுத்தறிவாளர், கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிட்டாரே என்ற எண்ணம் இருந்தாலும், அது அவர் விருப்பம் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. வழக்கம்போல் நட்போடும், அன்போடும் பழகினோம்..

கூட்டங்களில் வேடிக்கையாகப் பேசினாலும், ஆழ்ந்த தத்துவ அறிவு உடையவர். அவரைப் போல் மக்களைக் கவரும் பேச்சாளரை இனி நாம் எளிதில் பெறமுடியாது.ஒரு கூட்டத்தில் இடைவேளை விட்டுவிட்டு, பிறகு மீண்டும் பேசினார். அப்போதும் கூட்டம் கலையாமல் இருந்தது.

நல்ல பேச்சாளரை நாடு இழந்தது. நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன்.

செப்டம்பர்  5 - வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்

செப்டம்பர் 5ஆம் நாளை ஆசிரியர் தினம் என்று அழைப்பது மரபு. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அது என்பதால் அவ்வாறு அழைக்கிறோம். அதே நாளில்தான் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களும் பிறந்தார்.

மிகப்பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காக, அனைத்தையும் இழந்தவர் வ.உ.சி. இறுதியில், சென்னை, பெரம்பூரில் சிறிய அளவில் ஒரு மண்ணெண்ணெய்க் கடை நடத்தும் நிலையில்தான் அவர் வாழ்க்கை அமைந்தது. டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனோ, எந்த விடுதலைப் போராட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகக் கூட இருந்ததில்லை.

ஒருவர், நாட்டின் விடுதலைக்காகத் தன் சொத்து அனைத்தையும் இழந்தார். இன்னொருவர், விடுதலை பெற்ற நாட்டில் எல்லா உயர் பதவிகளையும் பெற்றார்.

செப்டம்பர் 5 & இந்தியாவிற்-கு வேண்டுமானால் ஆசிரியர் தினமாக இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாட்டில் மட்டுமாவது அது வ.உ.சி. தினமாகப் போற்றப்படட்டும்.

Pin It