1) ‘ஏமாற்றும் சாமியார்கள்’

‘ஏமாற்றும் சாமியார்கள்’ எனும் தலைப்பில் ‘சுவடு’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை நூலாக வெளியிட்டுள்ளது ‘அறிவுச் சுடர்’ ஆசிரியர் இளநம்பி. 16 பக்கங்கள். விலை ரூ.5.

“ஏற்றத்தாழ்வான, அநீதியான இச்சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேர் எதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாய் இருக்கிறார்கள். அதனாலேயே தனிமனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வக்கற்றும் இருக்கிறார்கள்.

தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒரு வேளை, “நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்க மாட்டோம்” என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கனமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர் வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனிமனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?

பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும், கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்குச் சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “பங்குச் சந்தை என்பது சூதாட்டம்; அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “பேராசைப்படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள்; முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருங்கள்” என்று தானே உபதேசிக்கிறார்கள்?

 2) சுயமரியாதைத் திருமணம் ஏன்?

விலை ரூ.5.

பல ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சியில் இருந்து ஒரு தோழர் பெரியாருக்கு கடிதம் எழுதினார்.

“நான் சென்ற வாரம் திருமணம் செய்து கொண்டேன், மிகவும் எளிய முறையிலே செய்தேன். உங்களுக்கும் அழைப்பு அனுப்ப வில்லை. உங்களுக்கு அழைப்பு அனுப்பி சிரமப்படுத்தவும் விரும்ப வில்லை. எனினும் அங்கிருந்தே என்னை வாழ்த்துங்கள். நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதையும் இதன் மூலம் தோழர்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்” எனச் சென்னையில் இருந்து பெரியாருக்குக் கடிதம் வந்தது. அக்கடிதம் பார்த்த பெரியாரும் மகிழ்ந்து போனார்.

ஆக, உலகம் எவ்வளவோ மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றம் என்பது இயற்கை. காலத்திற்கேற்ப, மனிதர்களின் வளர்ச்சியையொட்டி மாறவேண்டும். காலம் காலமாகச் செய்தது, பெரியவர்கள் செய்தார்கள் என்கிற பிடிவாதத்தை, பழமைப் போக்கை அழித்தொழிக்க வேண்டும். ஒரு சூடானப் பாத்திரத்தைக் கையில் வைத்திருக்கிறோம். அது சுடுகிறது எனத் தெரிந்தவுடன் கீழே போட்டுவிட வேண்டும். அப்படி இலலாமல், நான் பாத்திரத்தைக் கீழே போட மாட்டேன், பலரும் தவறாக எண்ணுவார்கள், என்னை கேவலமாக நினைப்பார்கள் என அந்தப் பாத்திரத்தைக் கையிலே வைத்திருந்தால் கை பொசுங்கிவிடும். வேதனையும் வலியும் நமக்குத் தான்.

 3) தமிழா, உன் பெயர் தமிழா?

விலை ரூ.5.

பெண் - ஆண் குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு. தொகுப்பு : அரசெழியன்

மேற்காணும் மூன்று புத்தகங்களும் கிடைக்குமிடம் : ‘பி.இர.அரசெழியன்’ 7 ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோயில், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி - 620 013.

 4) சுஜாதாவின் கோணல் பார்வை

எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து’ நூலுக்கு பேராசிரியர் ந.வெற்றியழகன் எழுதிய மறுப்பு. பக்கங்கள்: 36; விலை : ரூ.12

ஓர் எல்லை கடந்தபின் விஞ்ஞானமும் வேதாந்தமும் ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்றனவாமே? அது என்ன இலக்கு? ஒரே இலக்கு? வெளிப்படையாகச் சொல்லக் கூடாதா? சொல்ல முடியாதா? விஞ்ஞானம் புறமுகப் பொருள் ஆய்வு பற்றியது. வேதாந்தம் என்பது அகமுக நோக்குடைய கருத்து பற்றியது. இவை இரண்டும் எவ்வாறு ஒரே இலக்கை நோக்கிச் செல்லும்? ‘விஞ்ஞானம்’ எதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில், சொற்களில் திட்டவட்டமாகக் கூறுவது. ஆள் ஆளுக்கு வேறுபட்ட - மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதற்கு உட்படுத்திக் கொள்ளாதது?

நீரியவளி இரு கூறுகளும், உயரியவளி ஒரு கூறும் இணைந்து உருவாவதே நீர், என்பது அறிவியல். இதனை H2O என்னும் குறியீட்டால் குறிப்பர். எவரும், எங்கும், என்றும் இது ‘நீர்’ என்றுதான் பொருள் கொள்ள முடியும். இதற்குப் படிப்பறிவு போதும்! மனப்பக்குவம் தேவையில்லை.

வேதாந்தமோ - ஆள் ஆளுக்கு விளக்கவுரை (வியாக்யானம்) கூறப்படும் தன்மையுடையது. ஆட்களின் மனப்பக்குவத்திற்கேற்ப விளங்கிக் கொள்ளக் கூடியது. ‘அஹம் பிரஹ்மாஸ்மி’, ‘தத்வம் அஸி’ - போன்ற வேதாந்த சூத்திரங்களுக்கு சங்கரர் ‘அத்வைதம்’ எனப்படும் ஒரு வகையிலும், இராமானுஜர் ‘விசிஷ்டாத்வைதம்’ எனப்படும் வேறொரு வகையிலும், மத்வர், ‘த்வைதம்’ எனப்படும் மற்றொரு வகையிலும் வெவ்வேறான, மாறுபாடான, முரண் பாடான விளக்கங்கள் கூறப்படும் நிலையை உடையது. அறிவியல் போல, தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்களில் கூற முடியாதது வேதாந்தம்.

கிடைக்குமிடம்: ந. வெற்றியழகன், 58/1 வி.பி.எஸ். தங்குமனை, மேல இரண்டாம் தெரு, மன்னார்குடி - 614001.

Pin It