6.11.2011 நாளிட்ட தினமணி நாளிதழில்...

பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றைத் தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. எதிர்காலத்தில் தமிழகம் பொருளாதார நிலையில் உயர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது....ஆட்சியாளர்களை எதிர்ப்பது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என செய்தியில் வரவேண்டும் என்பதற்காகவே அரசியல் நடத்துவது ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. மேலும் இதனால் அரசியல் தீர்வும் ஏற்படாது.

- சரத்குமார், தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

***

கோமாளிகளைக் கோட்டைக்கு அனுப்பினால்...

கீற்று நந்தன், ஊடகவியலாளர்

உப்பரிகையில் நின்று உலகைப் பார்ப்பவர்கள் மக்களின் துயரத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத்தான் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையும், நடிகர் சரத்குமாரின் பேச்சும் காட்டுகின்றன. தங்களது அபிமான நடிகர்/நடிகையரைப் பார்க்கும் உற்சாகத்தில் முண்டியடிக்கும் அல்லது ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களின் முகத்தைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு, எல்லோரும் நம் படத்தைப் பார்த்து எந்தவித கஷ்முமின்றி மகிழ்ச்சியாக வாழ்வதாகத்தான் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல...

வெளிநாட்டுப் படங்களைச் ' சுட்டு '   சரத்குமார் எடுக்கும் ஜக்குபாய் ரகப் படங்களைப் பார்க்கும் அவரது ரசிகர்கள் எல்லாம், அவரைப் போன்றே வெளிநாட்டுக் கார்களில் திரையரங்குகளுக்குச் செல்பவர்கள் அல்ல... தினக்கூலியாகப் பெற்ற 100 ரூபாயில், சினிமா பார்த்துவிட்டு, பேருந்தில் செல்வதற்கு மட்டுமே அவர்களால் முடியும். அவர்களின் பேருந்துப் பயணத்தில் முள் அள்ளிப் போட்டிருப்பதுதான் முதல்வரின் பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பு.

தனக்கு ஒரு கார், தன் மனைவிக்கு ஒரு கார், குழந்தைகளுக்கு ஒரு கார் வைத்துக்கொண்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர வேறெங்கும் சாப்பிடாத ஆடம்பர வாழ்க்கை வாழும், தேர்தலின்போத மட்டுமே குடிசைப் பகுதிகளுக்கு வரம் சரத்குமார் போன்றவர்களுக்கு பால்விலை, பேருந்து கட்டண உயர்வு எந்த பாதிப்பையும் தராததுதான். ஆனால் சென்னை மாநகரத்தில் வாழமுடியாமல் புறநகரில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் சென்னைக்கு வரும் அவரது ரசிகர்கள், திரைத்துறையில் இருக்கும் லைட்மேன்கள் போன்ற எண்ணற்ற தொழிலாளர்களிடம் சரத்குமார் ஒரு நாளேனும் பேசிப் பார்த்திருந்தால் தெரியும்...இந்தக் கட்டண உயர்வு அவர்களுக்கு எவ்வளவு ' மகிழ்ச்சி '  யைத் தந்திருக்கிறது என்று! அவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...தமிழகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று...அடுத்த முறை வாக்கு சேகரிக்க அவர்கள் பகுதிக்கு போக முடியாது.

பொதுத்துறை நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்டுவது பொதுமக்களின் பொறுப்பு என்றால், திரைப்படத்துறை போன்ற தனியார் துறைகளின் நட்டத்தை ஈடுகட்டுவது அந்தந்தத் துறையினரின் பொறுப்புதானே? பிறகு ஏன், யார் முதல்வராக வந்தாலும், அவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தி, சலுகைகளை வாங்கிக் குவிக்கிறீர்கள் சரத்குமார் அவர்களே? கடந்த இருபது ஆண்டுகளில் மாறி மாறி சலுகைகள் வாங்கி, மக்கள் வரிப்பணத்தில் திரைத்துறையினர் அடித்த கொள்ளை எத்தனை கோடி என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா? சரி இனியாவது, தமிழகத்தின் பொருளாதார நிலையை உத்தேசித்து திரைத்துறையினர் அனுபவிக்கும் அத்தனை சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைப்பீர்களா?

கடந்த ஆட்சியின் போது, பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பதற்காக கேளிக்கை வரியை, திரையரங்குக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டது மட்டும் யோக்கியமான கோரிக்கையா? பதிலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள், முதலில் நட்சத்திர நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்கட்டும் என்று சொன்னவுடன் வாய் மூடிக்கொண்டீர்களே, அது சரியா?

உங்களைப் போன்ற நடிகர்கள் என்றாவது நாங்கள் வாங்குகிற சம்பளம் இவ்வளவு என்று அறிவித்து, அதற்கு உண்டான வரியைக் கட்டியது உண்டா? எல்லாம் கருப்புப் பணம்...வரி ஏய்ப்பு... இதில் சலுகைகள் வேறு...பிறகு ஏன் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை வராது? நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றிக் கவலைப்படும் சரத்குமார் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால், நடிகர், நடிகையர் வாங்கும் சம்பளப் பணம் எவ்வளவு என்பதை அறிக்கையாக உடனே வெளியிடட்டும்...அனைவரையும் ஒழுங்காக வரி கட்டச் சொல்லட்டும்...

இன்னொன்று சரத்குமார் அவர்களே ! பொதுமக்கள் உங்களுக்கு வாக்களித்து, சட்டசபை உறுப்பினராக்கியது மக்கள் பணியாற்றத்தான்...மக்கள் பணியினால், உங்களுக்கு எந்த பொருளாதார கஷ்டமும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ‡ பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் 30,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளத்திற்கு என்றாவது ஒழுங்காக வேலை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பணம் போதாது என்று, சினிமாவில் நடிப்பது, சக நடிகர்களை அழைத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சுரண்டுவது என சொந்த வேலைகளைத்தானே பார்க்கிறீர்கள்? பிறகு நாட்டைப்பற்றிக் கவலைப்பட உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகமான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டியதுதானே என்று அற்புதமான ஒரு பொருளாதார ஆலோசனையை ஒரு முறை வழங்கினார் நடிகர் விஜயகாந்த். நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த வறிய மக்களின் வயிற்றிலே அடிக்கலாம் என்கிறார் நடிகர் சரத்குமார். கோமாளிகளைக் கோட்டைக்கு அனுப்பினால், இப்படித்தான் கோமாளித்தனங்கள் நடக்கும் என்பதை, மக்கள் இனியாவது உணர்வார்களா?

 ****

சரத்குமாரின் சந்தர்ப்பவாதம்

ஜீவசகாப்தன், ஊடகவியலாளர்

பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையேற்றத்தைக் கண்டித்துத் தமிழக மக்கள் ஆர்ப்பட்டங்களோ, போராட்டங்களோ செய்யக் கூடாது என்று திருவாளர் சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்) கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றுவற்காக அ.தி.மு.க. அரசு எடுத்திருக்கும் இந்த தொலைநோக்கு நடவடிக்கையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்குப் பொருளாதார வகுப்பு எடுக்கிறார். அ.தி.மு.க. விசுவாசிகளே விழிபிதுங்கி நிற்கும் அளவிற்கு எதேச்சதிகாரமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது செயலலிதா அரசு. இந்நிலையில் அரசிற்கு வலிய வந்து ஆதரவு தரும் சரத்குமார் எப்போதுமே மக்கள் விரோத சிந்தனைக்குச் சொந்தக்காரர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்னே, ஓதுவார் ஆறுமுகம் என்கிற சிவபக்தரை தமிழில் தேவாரம் பாட விடாமல்  பார்ப்பன முரடர்கள் தடுத்த நிறுத்திய சம்பவம் அனைவரும் அறிந்ததே. அப்போது திருவாளர் சரத்குமார், " ஆண்டாண்டு காலமாக இந்து மதம் பின்பற்றி வரும் மரவை மாற்றக் கூடாது. எனவே, சமஸ்கிருதத்தில்தான் வேதம் ஓதப்பட வேண்டும் " என்கிற சீர்திருத்தக் கருத்தை(?) பதிவு செய்தார். அதே போல், தமிழ்ச் சமூகத்தைப் பாலியல் வேட்கை மிகுந்த நுகர்வு சமூகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ' பாய்ஸ் ' படக்குழுவினர்க்கு (சுங்கர், சுஜாதா கூட்டணி) வலிந்து தன்னுடைய ஆதரவினை தந்தவர் சரத்குமார். ' பாய்ஸ் ' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் உணர்வாளர்களை வார பத்திரிகை ஒன்றில் கடுமையாகச் சாடியவர் சரத்குமார். தன்னுடைய ' ரேடான் ' நிறுவனம் வெளியிடும் நெடுந்தொடரின் மூலம் மக்களின் இந்துத்துவ மனநிலையைச் சந்தையாக்கி வருகின்றார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களை விட வேள்விகளையும், யாகங்களையும் சரத்குமார் ‡ ராதிகா தம்பதியினர் பெருமளவு நம்பியிருந்தனர். பொதுத்துறை நிறுவனங்கள் நட்டப்படக்கூடாது எ;னறு கருதும் சரத்குமார், விலைவாசி ஏற்றத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் தமிழக மக்களை மகிழ்ச்சிப்படுத்த தனியார் விளம்பரங்களின் உதவியுடன், தன்னுடைய திரை நட்சத்திரங்களை வைத்து இலண்டனில் மாபெரும் கலைநிகழ்ச்சி ஒன்றினை சமீபத்தில் நடத்தியது அனைவரும் அறிந்ததே. (எப்பேர்ப்பட்ட சமூக உணர்வு கொண்டவர் அவர் என்பதற்கு இந்நிகழ்வு சிறு உதாரணம்) பார்ப்பன அம்மையாரின் இந்த மனுநீதி ஆட்சியை அங்கீகரிக்கும் மக்கள் விரோத மனநிலையை இயல்பாகவே சரத்குமார் பெற்றுள்ளார் என்கிற செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமச்சீர்க் கல்விக்குத் தடை, அண்ணா நூலக இடமாற்றம், விலைவாசி உயர்வு என அ.தி.மு.க. அரசின் அனைத்து எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கும் வக்காலத்து வாங்கி அன்றாடம் தோற்றுப்போகும் அரசு தலைமை வழக்கறிஞர் (A.G) நவநீதகிருஷ்ணன் என் நினைவுக்கு வருகிறார். நீதிமன்றம் என்பதால் அவருக்கு உடனடி தோல்வி கிடைத்து விடுகிறது. சரத்குமார் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு வரப்போகும் தேர்தலில் மக்கள் மன்றம் பதில் சொல்ல ஆயத்தமாகி வருகிறது என்பதே உண்மை. தற்போதைய நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வரப்போகும் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கப் போகின்றன என்பதை இவர்கள் உணர வேண்டும். சரத்குமார் போன்றவர்களை கொள்கைரீதியாக ஆராயும் அளவிற்கு அவரிடம் ஒன்றும் இல்லை. ஒரு வார்டு உறுப்பினர் பதவி கூட தனித்து நின்று வெற்றி பெற முடியாத தனது கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவி கொடுத்த ஜெயலலிதாவின் அரச பயங்கரவாத செயல்கள் அனைத்திற்கும் சரத்குமார் ' ஊதுகுழலாக ' இருப்பது என்பது ' அரசியல் வியாபாரி' என்கிற முறையில் சரிதான் !

Pin It