பரவசம்

வானவில்லின் வர்ணங்களில்
திளைத்து சுழன்றெழும் காற்றில்
விரிந்து படரும் வெளி
வாசனை கமழும் பெருவனம்

பனித்துளியின் குளிர் ததும்பும்
தொடுதல்களின் இதம்
அன்பும் கருணையுமாய்
வருடுகையில்
இருப்பின் ஆவல் மிகுகிறது

வெகுதூரத்தில் துலங்கும் சுடர்
எதிர்பாரா கணத்தில்
இரவின் உள்புகுந்து
பிரகாசமாய் திரண்டு உயர்கிறது
அதிசயமென

உதிரும் நாளில்
தளிரின் திறம்
மினுங்கி மேலெழும்
ஒளிக் கோளங்களாக
உருக்கொள்கிறது

தூய்மையின் துளிர்ப்புடன்
இறக்கையை விசிறி
அலகுகொண்டு உடல் கோதி
சாவகாசமாய் வரும் நொடிகளை
உண்ணக்
காத்திருக்கிறது
உயிர்ப்பின் உறையாத தருணம்

 

ஆளில்லாத வீடு

ஆளில்லாத வீட்டுக்கு
தேடி வந்தது
இம்சையாயிருக்கிறது

உதாசீனமாய் பார்க்கிறது
அக்கம்பக்க
மின்விளக்குத் தூண்கள்

உறுத்தும்
சந்தேகப் பார்வையில்
உள்ளங்கால் முதல் தலைவரை
வாசற்கதவுகள் ஆராய்கின்றன

எதையும் விழுங்கி
ஜீரணிக்கும்
இருளும்
குற்றமாய்ப் பார்த்து உறுமியது

காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில்
ஜன்னல், மரம்
இன்னும் எவைஎவையோ
நெளிந்து குலுங்கினாலும்
எனக்குள் நடுக்கமெடுக்கிறது

அவமானத்தைக் கூட
சகித்து ஆற்றிக் கொள்ளலாம்
எதிர்கொள்ள முடியவில்லை
இந்த வெறுமையை.

Pin It