ஒற்றை முலையைத் திருகி எறிந்து
அறம் பிழைத்த நிலமெரித்து
இரு முலைகளை அரிந்து
வாழையிலையில் பரிமாறி
தோள்ச்சீலை யுத்தம் நிகழ்த்தி
மனித நாகரீகத்தை நினைவூட்டி
புகைந்து போனவர்கள்
புனைவாய்.. வரலாறாய்..
பரிணமித்துப் போனார்கள்
பாலற்றவர்களின் சிசுக்களைக் காக்க
முலையூட்டியவர்கள்
பசி நீக்கி உயிர் பேணிய
தாவரங்களாய்
காலத்துள் கரைந்து போனார்கள்.

***

மலர்களைக் கொய்தபடி போவதை
கொலை எனக் கூறுவதில்லை
பேச்சற்று நிற்கும்
அந்த செடிகள்
ஈன்று தந்து கொண்டிருக்கும்
அந்த ஆடு
குட்டிகளின் கணக்கை
ஞாபகம் வைப்பதில்லை
கணத்தில் ஆவியாகும் அவன்
அன்றாடம்
நினைவுக் குறிப்புகள்
எழுதிக் கொண்டிருக்கிறான்.

***

எதிர்படுபவர்களைப் பார்க்கிறேன்
யாரிடமும் எதுவும் பேசுவதில்லை
அவர்களும் அப்படியே...
தெரிந்தவர்கள்
நண்பர்கள்
பிரசித்தி பெற்றவர்கள்
உறவினர்கள்
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்
யாராயிருந்தாலும் அணுகுவதில்லை
ஒற்றையாய்
போய்க் கொண்டிருக்கிறேன்
பொய்ப் புகழுரைகள்
போலி நட்புகள்
விளம்பர வேஷங்கள்
பண டாம்பிகங்கள்
நிறைசூழ் உலகில்
கனவுகளில் வாழ்ந்து
கனவாய்ப் போக எத்தனிக்கும்
நிலையிலிருப்பவனுக்கு
வேறு என்ன நிகழ்ந்து விடும்?

- வசந்ததீபன்

Pin It