சொற்களை வீசியாச்சு
தேவைப்பட்டால்
பொறுக்கிக் கொள்க
சொற்களற்றவர்க்கு
முன்னுரிமை

சத்தற்றதான
சொற்கள் ஏதுமில்லை
அவ்வாறிருந்தால்
என்னுடையவையல்ல.

மனைவியைத் திட்டலாம்
உரமானது
கவிதை எழுதலாம்
நளினமானது.

பிடிக்காதவரைக்
காயப்படுத்தலாம்
கூரானது

விரும்பியவரைத்
தழுவலாம்
குளுமையானது.

சொற்களில் வாழ்வது
குறித்து
கேள்விகள் உள்ளன
கேலிகளும்கூட
ஒதுக்கிவிடலாம்.

சிக்கலற்ற வாழ்வு
அழுத்தமானது

அர்த்தமற்ற சொற்களும்
அதற்கு
பலம் கூட்டும்.

- நா.விச்வநாதன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.