தியாகி பகத்சிங்கின் 80-வது நினைவு தினம் சி.டபிள்யு.பி. அமைப்பின் சார்பாக இந்த ஆண்டு மார்ச் - 23 அன்று சமயநல்லூர், ஆலங்குளம், சிவகாசி, ஆனைக்கூட்டம் ஆகிய இடங்களில் தியாகிகள் ஸ்தூபி எழுப்பி அனுஷ்டிக்கப்பட்டது. ஆலங்குளத்தில் மார்ச் - 23 அன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தோழர் த.சிவக்குமார் (சி.டபிள்யு.பியின் மத்தியக் குழு உறுப்பினர்) சிறப்புரை ஆற்றினார். 

சமயநல்லூரில் இந்நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மார்ச் - 27 ஞாயிறன்று ஜீவா திடலில் நினைவு தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தோழர் வினோத் குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சி.டபிள்யு.பி. தோழர்களான மகாதேவன், தங்கராஜ், வரதராஜ், சிவக்குமார் ஆகியோரும், மாணவர் ஜனநாயக இயக்கத்தின்(SDM) சார்பாக தோழர் கோபியும் உரையாற்றினர். கூட்டத்தின் சிறப்புரை சி.டபிள்யு.பி. தென்மாநில அமைப்பாளர் தோழர் ஆனந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. 

தோழர் டேவிட் வினோத் குமாரின் தலைமை உரைக்குப் பின்னர் உரையாற்றிய தோழர் மகாதேவன் தனது உரையில் தற்போது ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் போட்டி போட்டு அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் எவ்வாறு ஏழை எளிய மக்களின் சுயமரியாதை உணர்வைப் பாதித்து அவர்களின் போர்க் குணத்தை மழுங்கடிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை விளக்கினார். தோழர் தங்கராஜ் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற வட்டத்திற்குள் மக்களைக் கட்டிப் போட விரும்புகிறது என்பதை அதன் கூற்றுகளையும் அறிவிப்புகளையும் ஆதாரமாகக் காட்டி விளக்கினார். தோழர் வரதராஜ் தனது உரையில் பகத்சிங் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொழில் தகராறு மசோதா சட்ட மன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது குண்டு வீசி மக்களின் கவனத்தை ஈர்த்துப் போராடினார். அச்சூழல் இப்போதும் மாறிவிடவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப் படுவது இன்று மிகச் சாதாரண நிகழ்வாகி விட்டது என்பதை முன்வைத்து உரை நிகழ்த்தினார். தோழர் கோபி மாணவரும் இளைஞரும் பகத்சிங் போன்ற தியாகிகளை  முன் மாதிரிகளாகக் கொண்டு இன்றைய சமூக அவலங்களை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். அப்போது தான் சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வு வரும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

 

தோழர் த.சிவக்குமார் தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற கெடுபிடிகள் எவ்வாறு பகத்சிங் நினைவு தினம் அனுஷ்டிப்பதையும் பாதித்தது என்பதையும், பகத்சிங்கை வெள்ளை அரசு ஒருமுறை தூக்கிலிட்டதென்றால் அவரது நினைவு தினத்தை அனுஷ்டிப்பதில் பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரைப் பலமுறை நமது அரசின் அதிகார வர்க்கம் தூக்கிலிட்டது என்று குறிப்பட்டார். தேர்தல்கள் மக்களின் மன விருப்பத்தின் படி நடைபெறுவதைப் பாதிப்பது வாக்கிற்குப் பணம் கொடுப்பது என்ற வகையில் வளர்ந்து வரும் போக்கினாலேயே ஆகும். அது ஆளும் கட்சியினால் கூச்ச நாச்சமின்றித் தொடர்ச்சியாகச் செய்யப்படுகிறது. அதைத் தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் தான் திறம்படச் செயல்பட்டு முறைகேடுகளைத் தடுக்க முழு முயற்சி மேற்கொள்வதாகக் காட்டுவதற்காக இத்தனை தேவையற்ற கெடுபிடிகளை தேசம் ஈந்த தியாகிகளின் நினைவு தின நிகழ்ச்சிகளிலும் ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியில் உரையாற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் முன்வைத்த கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு:

 

தியாகி  பகத்சிங்கின் நினைவு தினத்தை நாம் அனுஷ்டிப்பதன் நோக்கம் அவரது வீரமும், தியாகமும் போற்றப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. அதன் பொருள் அவரது வீரம் போற்றப்பட வேண்டியதல்ல என்பதுமல்ல. அவரது நெஞ்சுறுதியையும் வீரத்தையும் முன் நிறுத்தும் அவரது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூரும் போது அவை நம்மை மிகப் பெரும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையிலானதாக இருப்பதையே பார்க்க முடிகிறது.  

லாகூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைபட்டிருந்த அவர் வாரம் ஒருமுறை போர்ஸ்டால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது பிற தோழர்களை வழக்கு குறித்து விவாதிப்பதற்காக என்ற சாக்கில் சந்திக்கச் செல்வார். அத்தகையதொரு சந்திப்பின் போது அவரது தோழர்கள் வேடிக்கையாகத் தங்களில் யார் யாருக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை ஒருவரை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி நாடக பாணியில் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் அவர்களது தீர்ப்பில் பகத்சிங்குக்கும், ராஜ குருவுக்கும் என்ன தண்டனை என்பது அறிவிக்கப் படவில்லை. அதைக் கண்ட  பகத்சிங் புன்முறுவலுடன் ஏன் எங்களிருவருக்கும் எந்தத் தண்டனையையும் நீங்கள் அறிவிக்கவில்லை? எங்களை விடுதலை செய்யப் போகிறீர்களா எனக் கேட்டுவிட்டுக் கூறினார்: எங்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்ற வருத்தத்தில் தானே நீங்கள் அதைக் கூறாதிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கான பதில் பிற தோழர்களிடமிருந்து வராத நிலையில் அடுத்த கணமே மிகுந்த கம்பீரத்துடன் அவர் “உயிர் வாழும் பகத்சிங்கை விட இறந்துவிட்ட பகத்சிங் இன்னும் வலிமை மிக்கவனாக இருப்பான். அவனது லட்சியத்தைச் சுமந்து தேச விடுதலைக்குப் பாடுபடும் எண்ணிறந்த இளைஞர்களை உருவாக்க வல்லவனாக இறந்த பின் அவன் ஆகிவிடுவான் எனவே கவலைப் படாதீர்கள்” என்று கூறினார்

.

சிறையதிகாரியின் உள்ளத்தை உருக்கிய வீரம்

 

அவரது வீரமும் மன உறுதியும் சிறையதிகாரிகளின் உள்ளத்தையும் உருக வைத்தது. மக்கள் எழுச்சிக்கு அஞ்சி மார்ச் 24ம் நாள் காலை 8 மணிக்கு அவரைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக வெள்ளை அரசு அவரை மார்ச் 23ம் நாள் மாலை 7 மணிக்குத் தூக்கிலிட முடிவு செய்தது. அதற்காகப் பிற கைதிகளை இரவு 7 மணிக்குப் பதிலாக மாலை 4 மணிக்கே அவர்களது செல்களில் வைத்துப் பூட்டுமாறு நிர்வாகம் சிறையதிகாரிகளுக்கு ஆணையிட்டது. அவ்வாறு பூட்ட வந்த சிறை அதிகாரியிடம் அதற்கான காரணத்தைக் கைதிகள் வினவிய போது வார்த்தைகளால் அவரால் பதில் கூற முடியவில்லை. பதிலைத் தனது கண்ணீரால் அவர் கூறினார்.

 

அதைப்போல் அவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் மறுநாள் காலை சிறையின் அறைகளைத் திறந்துவிட்ட போதும் கண்ணீருடன் கூறினார்: என்னுடைய 30 ஆண்டுகால அனுபவத்தில் மரணத்தை இவர்களைப் போல் எதிர்கொண்ட மாவீரர் எவரையும் நான் சந்தித்ததில்லை; புரட்சி ஓங்குக என அவர்கள் உரத்து எழுப்பிய முழக்கத்தின் முடிவும் அவர்களது உயிர்களின் பிரிவும் ஒருசேர நிகழ்ந்தன என்று மாளாத சோகத்துடன் கூறினார்.

 

மதவாதத்தை இறுதிவரை எதிர்த்த பகத்சிங்

 

சீக்கிய மதத்தினைச் சேர்ந்தவராக இருந்த அந்த சிறை அதிகாரி பகத்சிங் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப் படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அவரிடம் “இந்தக் கடைசி நிமிடத்திலாவது சீக்கியக் கடவுளான வாகே குருவை நினைத்துக் கொள் என்று கூறினார். அதற்கு பகத்சிங் புன் முறுவலுடன் மக்களின் சிரமங்களையும், சமூகத்தின் ஏற்றத் தாழ்வையும் போக்க முடியாத கடவுள் என அவரை நான் பலமுறை இகழ்ந்திருக்கிறேன். அவ்வாறிருக்கையில் இப்போது நான் அவரை நினைத்தால் அவர் என்னைக் கோழை என்று கேலி செய்வார்” என்று அமைதியாகக் கூறி அவரது வேண்டுகோளை நிராகரித்தார்.

சாவை அவர் எத்தனை மன உறுதியுடன் எதிர் கொண்டார் என்பதையும் மதவாதத்திற்கு அப்பாற்பட்டவராக இறுதிவரை அவர் எவ்வாறு இருந்தார் என்பதையும் இது பக்கம் பக்கமாக விளக்கும். இந்த நிகழ்வுகள் மட்டும் அவரது வீரத்திற்கு எடுத்துக் காட்டுகளல்ல. உடனடியாக விளையும் சாவு அந்த அளவு வேதனை தருவதல்ல. போர்க்களத்தில் கூட ஏராளமான ராணுவ வீரர்கள் போர்க் காலங்களில் சாதாரணமாக இறந்து விடுகின்றனர். தூக்கு மேடையில் ஒருவருக்கு நிகழும் சாவு விளைவிப்பது சில நொடி நேர வேதனையே. ஆனால் அரசியல் கைதிகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு சித்திரவதைகளையும் மீறி உணவுண்ண மறுத்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் மேற்கொண்ட 63 நாட்கள் நீடித்த உண்ணாவிரதமே அவர்களது மாபெரும் வீரத்தைப் பறைசாற்றிய உன்னதமான விசயமாகும்.

 

நினைவுதினம் அனுஷ்டிப்பதன் நோக்கம்

 

இத்தகைய வீரமும் தியாகமும் அவருக்கு மட்டுமே சாத்தியம் என்பதல்ல. அவற்றை அடையும் மனோதிடத்தை அவருக்குத் தந்தது அவர் தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் அவர் தெரிந்து கொண்ட சமூகமாற்றக் கருத்துக்களும் சிந்தனைகளுமே. பகத்சிங்கின் வீரமும் தியாகமும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட அளவிற்கு அவரது கருத்துக்கள் கொண்டு செல்லப் படவில்லை. எனவேதான் இதுபோன்ற கூட்டங்களை நாம் நடத்துகிறோம். எனவே இதன் நோக்கம் இருட்டடிப்பு செய்யப்படும் அவரது வரலாறு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும், அவரது கருத்துக்களின் அடிப்படையில் சமூகம் மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதற்காகவுமே.

 

வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை எதிர்த்துத் தனக்குத் தோன்றிய வழிகளிலெல்லாம் போராடத் தொடங்கிய அவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், செளரி செளரா நிகழ்வுகளுக்குப் பின் அவரால் கைவிடப்பட்ட நிலையில் அதிலிருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு மக்கள் எழுச்சிக்கான பாதையாக பயங்கரவாதப் போக்கில் சில காலம் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ரஷ்யப் புரட்சி அவரிடம் மிகவும் அடிப்படையானதொரு மாற்றத்தைத் தோற்றுவித்தது. கிடைத்த மார்க்சிய இலக்கியங்களை ஈடுபாட்டுடன் கற்றுணர்ந்த அவர் உழைப்பாளிகள், விவசாயிகள் பங்கேற்பில்லாமல் நமது நாட்டின் உண்மையான விடுதலையைச் சாதிக்க முடியாது என்ற உறுதியான முடிவிற்கு வந்தார்.

 

இன்றைய மாணவரும் இளைஞரும் பகத்சிங்கைப் போல் ஒரு முதல்தர அனுபவத்தைப் பெறும் வகையில் சமூக இயக்கங்களில் பங்கேற்க வேண்டும். ஏனெனில் அவரது காலகட்டத்தில் இருந்த ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் அன்றிருந்ததை விட மிகவும் சீரழிந்த நிலையில் இன்றுள்ளன. அடக்கு முறைத் தன்மைகளோடு ஏமாற்றுத் தனத்தையும் கொண்டதாக உலகம் முழுவதும் முதலாளித்துவ அமைப்பு ஆகியுள்ளது. அதன் உற்பத்தி முறை அப்பட்டமான சூதாட்டத் தன்மை கொண்டதாகவும் அதற்குத் தேவையான மூலதனத் திரட்சி முறையான உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து ஏற்படாது அரசியல் வாதிகளின் ஊழல் முறைகளின் மூலம் ஈட்டப் படுவதாகவும் ஆகியுள்ளது.

போலி சுதந்திரம்

 

முதலாளித்துவம் மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளின் மனதில் அதன் சுதந்திரம் என்ற அம்சத்தை முன்னிருத்தியே இடம் பிடித்திருந்தது. ஆனால் இன்று ஊடகங்களாலும் அரசின் பிரச்சாரச் சாதனங்களாலும் வெளியிடப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகளை அதாவது முதலாளித்துவ அரசியல் வாதிகளின் வேசதாரித் தனங்களையும் தனியார் தொழில் நிறுவனங்களுடனான அவர்களது கூட்டையும் வெளிப்படுத்தியதற்காக விக்கிலீக்கின் அதிபர் அஸ்ஜாஞ்ச் இன்று கற்பழிப்புக் குற்றவாளியாக நிறுத்தப் படுகிறார்.

 

நமது நாட்டின் அமைச்சர்களும் அரசியல் வாதிகளும் தங்கள் மனைவி மக்களிடம் கூட மனம் திறந்து பேசுவார்களா என்பது சந்தேகமே. ஆனால் அமெரிக்க நாட்டின் தூதர்களிடமும் அதிகாரிகளிடமும் அவர்கள் உள் மனதில் உள்ளவற்றை மிகுந்த அன்னியோன்யத்துடன் பேசுகின்றனர். அதுபோன்ற முதலாளித்துவ அவலங்களைத் தோலுரிக்கும் உண்மைகளை வெளிப் படுத்தியதற்காக ராஜதுரோகக் குற்றம் விக்கிலீக் நிறுவனர் மேல் சுமத்தப் படுகிறது.

 

வாழும் வழிகாட்டும் தத்துவம்

 

பகத்சிங் முன்வைத்த சோசலிசக் கருத்துக்களின் அடிப்படையில் செயல்பட்ட சமூக அமைப்புகள் எவையும் இன்று இல்லையே. எனவே சோசலிசத்தை மாற்றாக முன்வைத்தவர் என்ற அடிப்படையில் பகத்சிங்கை நினைவு கூர வேண்டியதன் தேவை என்ன என்ற கேள்வி சிலரால் எழுப்பப் படலாம்.சோசலிசம் இல்லாமற் போன பின்னர் சமூகத்தில் கிளர்ச்சியும் எழுச்சியும் இல்லாமற் போய்விடவில்லை. பிரான்ஸ் நாட்டு நகரத் தெருக்களிலும், லண்டன் மாநகரின் வீதிகளில் சமூகமாற்றக் குரல்கள் பீறிட்டுக் கிளம்புகின்றன. அங்கெல்லாம் பகத்சிங் மானசீகமாகப் பார்த்த மாணவர் இளைஞர்கள் கண்முன் சமூக மாற்றக் கருத்துக்களை நெஞ்சில் சுமந்த வண்ணம் சமூக எழுச்சியை முன்னெடுத்துச் சென்று கொண்டுள்ளனர்.

பகத்சிங் கூறினார் இறந்த பகத்சிங் உயிர் வாழ்ந்த பகத்சிங்கை விட வலிமையானவன் என்று. அதைப்போல் முன்பு ஒரு சமூக அமைப்பாக இருந்து இன்று இல்லாமல் போய்விட்ட சோசலிசம் அது இருந்தபோது கொண்டிருந்ததைக் காட்டிலும் கூடுதல் வலுவுடன் அது இல்லாதிருக்கும் இப்போது  சமூக எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

 

முதலாளித்துவத்தின் தந்திரம்

 

முதலாளித்துவம் தன் வாழ்நாளை நீட்டிப்பதற்காக பல தந்திர நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற் கொண்டது. இழப்பதற்கென்று ஒன்றுமில்லாதது என மாமேதை மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்திடம் சொத்துடைமை மனநிலையை வளர்த்தது. கல்வி நிலையங்களில் சமூக நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களை மாணவர்களின் முன்மாதிரியாக வைப்பதற்குப் பதிலாகத் தொழிலதிபர்களை முன்மாதிரிகளாக நிறுத்தி உடைமை வர்க்க சுயநலத் தன்மை வாய்ந்த தனிநபர் வாதத்தை முன்னிறுத்தி கூட்டுவாதப் போக்கை மேலெழும்ப விடாமல் செய்கிறது. ஒரு கூரையின் கீழ் லட்சக் கணக்கான தொழிலாளர் வேலை செய்த நிலையை மாற்றி ஒப்பந்தத் தொழில் முறையை அமல் செய்து தொழிலாளர் ஒற்றுமையைத் துண்டாடுகிறது. இந்த மாற்றங்களுக்கெல்லாம் உகந்த விதத்தில் மார்க்சியக் கண்ணோட்டம் செழுமைப் படுத்தப்பட வேண்டும்.

 

பகத்சிங் புத்தகங்களைத் தேடித் தேடிக் கற்றார். அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு சமூக மாற்றத்தை வழிநடத்த வல்ல இன்றைய கால கட்டத்தின் ஒரே தத்துவமான மார்க்சிஸத்தை நாம் தேறக் கற்கவும் செழுமைப்படுத்தவும் வேண்டும். அந்த வகையில் செயல்பட்டு பகத்சிங் கனவு கண்ட சோசலிச சமூக அமைப்பை நமது மண்ணில் நிறுவப் பாடுபடுவதே பகத்சிங்கிற்கு அவரது நினைவு நாளில் நாம் செலுத்தும் உரிய அஞ்சலியாகும் என்று கூறி அதனைச் செய்ய முன்வருமாறு இளைஞர் சமூகத்தைக் கேட்டுக் கொண்டு தனது உரையை ஆனந்தன் நிறைவு செய்தார்.

 

சிவகாசி, ஆலங்குளம், தேனி, வத்தலக்குண்டு போன்ற பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட சி.டபிள்யு.பி. தோழர்களோடு குறிப்படத்தக்க எண்ணிக்கையில் இந்த முறை உள்ளூர்ப் பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டது இந்த ஆண்டு பகத்சிங் நினைவு தினத்தின் கூடுதல் சிறப்பம்சமாக இருந்தது. 

Pin It