முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்று இரண்டு வருடங்களாகின்றன. அந்கப்படுகொலை தந்த அதிர்ச்சியிலிருந்து தாயகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தமிழ் மக்களே இன்னும் விடுபடவில்லை. படுகொலையில் இருந்து தப்பியவர்கள், காயமடைந்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேயில்லை. மீள்வதற்குரிய பணிகளும் சீராகக் கட்டியெழுப்பப்படவில்லை. போர் அவலத்தைச் சுமந்த மக்கள் இன்று போரின் பின்னரான அவலத்தையும் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக வாழ அனுமதிக்கப் படாததினால் இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பணிகளைச் சக தமிழர்களாலும் மேற்கொள்ள முடியவில்லை.

முள்ளிவாய்க்காலில் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை. தமிழ் மக்களே தோற்கடிக்கப்பட்டனர். தமிழ் மக்களது இதுவரைகால தியாகம் நிறைந்த போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. அவர்கள் அரசியல் சமூகமாக வாழ முயற்சித்த அடையாளம் தோற்கடிக்கப் பட்டது. இத்தோல்விகள் அவர்களது கூட்டிருப்புக்கே அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் வாய்க்குள் அது சப்புதற்காகத் தமிழ் மக்கள் கொண்டுபோய் விடப் பட்டுள்ளனர். இதற்குச் சிறீலங்கா அரசாங்கம் மட்டும் காரண மாக இருக்கவில்லை. தங்கள் நலன்களிலிருந்து செயற்பட்ட இந்தியா, மேற்குலகம், ஐக்கிய நாடுகள் சபை அனைத்துமே காரணம். இவை மட்டுமல்ல புலிக்காய்ச்சல் காரணமாகக் காட்டிக் கொடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய எதிர்ப்புச் சக்திகளும் காரணம்.

மறைந்த ஊடகவியலாளர் சிவராம் ஒரு தடவை கூறினார் “புலிகளிடம் பல தவறுகள் இருக்கின்றன. ஆனால், அது தொடர்பாகப் பகிரங்கத்தில் செயற்பட்டு இப்போராட்டத்தைப் பலவீனப்படுத்த நாம் விரும்பவில்லை. ஏனெனில் இப்போராட்டம் புலிகளுக்கான போராட்டமல்ல. தமிழ் மக்களுக்கான போராட்டம்’’ இந்தச் சிந்தனை இந்த எதிர்ப்புச் சக்திகளிடம் தோன்றாமை தான் மிகவும் கவலைக்குரியது.

இன்று தாயகத்தில் புலிகளுக்கான பதிலீட்டை இராணுவமே மேற்கொண்டுள்ளது. முன்னர் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் அடையாள அழிப்புகள் இன்று பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிகழ்ச்சி நிரல் தெளிவாக உருவாக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கண்களுக்குத் தெரியக்கூடியதாகவும், தெரியாமலும் இவ்வழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கேற்ற வகையில் வலிமையான இறுக்கத்துடன் இராணுவ நிர்வாகம் செயற்படுகின்றது.

தமிழ் மக்கள் விரும்பினால் என்ன? விரும்பாவிட்டால் என்ன? இதற்கு எதிராகப் போராடித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது அவர்களுடைய கூட்டிருப்பு, கூட்டுரிமை சார்ந்த பிரச்சினை. கிழக்கில் இக்கூட்டிருப்பு ஏற்கனவே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. முள்ளிவாய்க்கால் கொலைக்குப் பின்னர் வடக்கும் ஆட்டம் காணத் தொடங்குகின்றது.

இந்தப் புதிய சூழலுக்கு முகம்கொடுப்பதற்குச் சவால்களையும், வாய்ப்புகளையும் நாம் அடையாளம் காணவேண்டும். வேலைத்திட்டங்களையும் தந்திரோபாயங்களையும் அதற்கேற்ற வகையில் முன்னெடுக்கவேண்டும். சவால்கள் இல்லாத சூழல் என்பது வரலாற்றில் கிடையாது. அதேபோல வாய்ப்புகள் இல்லாத சூழலும் வரலாற்றில் கிடையாது. சவால்களுக்கும், வாய்ப்புகளுக்குமிடையில் விகிதாச்சாரத்தில் மட்டும் காலத்திற்குக் காலம் வேறுபாடுகள் ஏற்படலாம். வரலாற்றில் ஒரு கதவு மூடப்பட்டால் இன்னோர் கதவு திறக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

முள்ளிவாய்க்காலில் விழுந்த அடி தமிழ் மக்களில் மட்டும் படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகக் கட்சிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என எல்லோர் மீதும் பட்டு இன்று தி.மு.க, காங்கிரஸ் மீதும் விழுந்துள்ளது. முள்ளிவாய்க்காலினால் விழுகின்றவர்களுடைய தொகை பெருகப் பெருகத் தமிழ் மக்களுக்கான வாய்ப்புகளும் பெருகிக்கொண்டே போகும். ஏனெனில் வீழ்ந்தவர்கள் எல்லோரும் மீண்டும் எழவே முயற்சிப்பர். அவர்களுக்கு உதவப்போவது தமிழ்த் தேசிய அரசியல்தான்.

நாம் முதலில் சவால்களைப் பார்ப்போம். தமிழ் மக்கள் சந்திக்கின்ற மிகப் பெரிய சவால் திட்டமிட்ட நிலப்பறிப்புதான். இதுமுன்னர் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது இராணுவ நிர்வாகத்தின்கீழ் பகிரங்கமாகவே மேற்கொள்ளப் படுகின்றது.

இதில் முதலாவது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஒரே நேரத்தில் வடகிழக்கு முழுவதும் இவை முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னர் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் போர் காரணமாகக் கைவிடப்பட்டிருந்தன. அவை தற்போது புதிய பொலிவுடன் கட்டியெழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பெரிய சோகம் நிலத்திற்கான ஆவணங்களைத் தமிழ் மக்கள் கைவசம் வைத்திருக்கின்றபோதும் அந்நிலங்கள் பகிரங்கமாக பறிக்கப் படுவதாகும்.

கிழக்கில் திருகோணமலை மாவட்டமே குடியேற்ற விடயத்தில் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குச்சவெளிப் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் காணிகள் பகிரங்கமாகப் பறிக்கப்படுகின்றன. இது தொடர்பில் குச்சவெளிப் பிரதேச செயலாளரே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார். மொறவேவா பிரதேச சபையிலுள்ள பன்குளம் பகுதியில் உறுதிப்பத்திரங்கள் வைத்திருந்தும் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. ஒட்டு படுகொடு இடத்தில் 200 ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை -ஹொரப்பொத்தானை வீதியில் இருபகுதியிலும் திட்டமிட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். கன்னியா பிரதேசப்பகுதி திருமலைப்பட்டணமும், சூழலும் பிரதேச சபையிலிருந்து அரசாங்க அதிபரினால் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டுச் சிங்கள நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சேருவலவிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் புதிய வீதி அமைக்கப்பட்டபோது அதன் இருமருங்கிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் தென்னைமரவாடி உட்படப் புல்மோட்டையின் தமிழ்க்கிராமங்கள் பல பதவி சிறீபரா என்ற சிங்களக் கிராமத்துடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. குச்சவெளிப் பிரதேச செயலாளரே இது தொடர்பாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பூர் மக்கள் அவர்களது சொந்தப் பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது 10,000 ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. சம்பூரிலிருந்து கடற்கரையோரமாக வெருகல் ஆறுவரை தமிழ் பிரதேசங்களே உள்ளன. மூதூர் கிழக்குப் பிரதேசம் என இது அழைக்ப்பட்டது. படித்த மத்தியதர வர்க்கம் அதிகமாக உள்ள பகுதி என்ற வகையில் சம்பூர் பிரதேசமே அதற்குத் தலைமை கொடுத்துக்கொண்டிருந்தது. இன்று அது பறிக்கப் பட்டுள்ளதால் முழு மூதூர் கிழக்குப் பிரதேசமே பலவீனமாகி யுள்ளது.

திருகோணமலைக் கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களினால் விரட்டியடிக்கப்பட்டுள்ள னர். அவர்களது குடிசைகளும், உடமைகளும் தீயிடப்பட்டுள்ளன. இவர்கள் உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் நீண்ட காலமாகவே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் வெளிப்பிரதேசங்களில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கௌலியா மடு பிரதேசம் இவ்வாறான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட எல்லைகளிலும் இவ் நெருக்கடிகள் உள்ளன. நாவலடி, ஊத்துச்சேனை போன்ற பிரதேசங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களே சிங்களக் குடியேற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில், தீக வாவிப் பிரதேசங்களில் இக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொத்துவில் வேகாமம் பிரதேசத்தில் அனுமதிப் பித்திரம் பெற்று வயல்செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டுள்ளார்கள்.

வடக்கில் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் மட்டுமல்ல இன்று யாழ்ப்பாண மாவட்டம் கூடக் குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் கொண்டச்சி பிரதேசத்தில் போருக்கு முன்னர் மரமுந்திரிப் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. 6000 ஏக்கர் நிலம் இதற்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏழு சிங்களப் பெயர் கொண்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுச் சிங்கள மக்கள் குடியேற்றப் பட்டனர். 200க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. பாடசாலை, விகாரை, மரமுந்திரிகை பதனிடும் நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டிருந்தன. மத்திய இடத்தில் பாதுகாப்பிற்காக இராணுவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. அனுராதபுரத்துடன் போக்குவரத்துச் செய்யக்கூடிய போக்குவரத்துப் பாதையும் அமைக்கப்பட்டிருந்தது.

1900களில் யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் வெளியேறினர். தற்போது புதுப்பொலிவுடன் குடியேற்றம் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது. ஏற்கனவே வசித்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிவிட்டனர். தற்போது புதியவர்களைக் கொண்டு குடியேற்றம் செப்பனிடப்படுகின்றது.

மடு ரோட்டில் முன்னர் சட்ட விரோதமாகக் காணிகளைப் பிடித்துச் சிலர் சிங்களவர்கள் குடியேறியிருந்தனர். அவர்களுக்காகச் சிங்கள மகாவித்தியாளயம், பௌத்த விகாரை என்பனவும் உருவாக்கப்பட்டிருந்தன. யுத்த சூழ்நிலை காரணமாக அவர்கள் அனைவரும் வெளியேறியிருந்தனர். தற்போது பௌத்த பிக்குகள் முன்னின்று புதிய குடியேற்றங்களை உருவாக்கி வருகின்றனர். பௌத்த விகாரைப் பெருப்பிக்கப்பட்டு வில் வளைவு ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை உட்பட வேறு கட்டடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வீதியின் இருமருங்கிலும் நூற்றுக்கணக்கான சிறு கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மடுப்பகுதி மன்னார் அரசாங்க அதிபரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றபோதும் அனுராதபுரம் மாவட்ட அரசாங்கச் செயலதி பரின் கீழேயே இக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கென்ற் பாம், டொலர் பாம், சிலோன் தியேட்டர் பாம் போன்ற பிரதேசங்களில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் அங்கிருந்த தமிழ் மக்களை அகற்றி விட்டு உருவாக்கப்பட்டிருந்தன. இன்று அது மீளவும் புதுப்பிக்கப் பட்டு நெடுங்கேணிவரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் சரணாலயத்தின் 4000 ஏக்கர் காணியில் 1000 ஏக்கர் காணி புல்டோசர் மூலம் திருத்தப்பட்டுள்ளது. அங்குச் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவற்குழிக் குடியேற்றம் நாமெல்லோரும் அறி¢ந்ததே. யாழ்ப்பாண மண்ணின் நிறமே தெரியாதவர்கள் அங்குத் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வகை குடியேற்றம் வியாபாரக் குடியேற்ற மாகும். இது முன்னர் கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. திருகோணமலை நகரத்திலுள்ள பல சிங்களக் கடைகள் வியாபாரக் குடியேற்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டவையாகும். கடைகளுக்கான நிலங்களை அடாத்தாகப் பிடித்து அந்த இடத்தில் முதலில் பெட்டிக் கடைகளைப் போடுவார்கள், பின்னர் அதனையே நிரந்தரக் கடைகளாக மாற்றிவிடுவார்கள். திருக்கோணமலைச் சந்தை இன்றுவரை சிங்களவரின் ஆதிக்கத்திலேயே உள்ளது.

தற்போது போரின் பின்னர் இந்த வியாபாரக் குடியேற்றம் வடக்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கு நகரங்கள் எதுவும் இதற்கு விதிவலக்காக இல்லை. நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னர் அடாத்தாக இடங்களைப் பிடித்துத் தெற்கிலிருந்து வந்த சிங்களவர்கள் வியாபாரம் செய்கின்றனர். காலைக்கடன்களையும் கோவில் நிலத்திலேயே கழிக்கின்றனர். நகரச் சுற்றுப்புறங்களில் இராணுவ முகாமிற்கு அருகே அல்லது காவலரண்களுக்கு அருகே அடாத்தாகக் காணிகளைப் பிடித்துக் கொட்டில்களைப் போட்டு வியாபாரம் செய்கின்றனர். காணிச் சொந்தக்காரர்களிடமோ அல்லது யாழ் மாநகரசபை நிர்வாகத் திடமோ இதற்காக எந்த அனுமதியையும் அவர்கள் பெறுவதில்லை. திருக்கேதீஸ்வரம், மடு, முறிகண்டி போன்ற கோவில் பிரதேசங்களிலும் இக்கொட்டில் வியாபாரம் நடைபெறுகின்றது. முறிகண்டியில் இதற்காகக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. போர் முடிந்த சில நாட்களிலேயே தெற்கிலிருந்து வடக்கிற்கு உல்லாசப் பயணம் பெருமளவில் இடம்பெற்றது. ஒரு பேருந்தில் 60 பேர் பயணம் செய்தால் இருவர் வியாபாரத்தினை அமைக்கும் நோக்குடனேயே பயணம் செய்கின்றனர்.

மூன்றாவது மீனவர் குடியேற்றம். திருக்கோணமலைப் பிரதேசத்தில் போர்க்காலத்திலேயே இக்குடியேற்றங்கள் வலிமையாக இருந்தன. ஆரம்பத்தில் பருவகால மீன்பிடிக்காக வாடி அமைத்துத் தங்கியவர்கள் பின்னர் நிரந்தரமாகவே தங்கிவிட்டனர். தற்போது வாகரை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டத்தின் சிலாபத்துறை போன்ற இடங்களிலும் இவ்வகையான குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிலாபத்துறையில் அமைக்கப்பட இருக்கின்ற புதிய துறைமுகம் சிங்கள மீனவர் குடியேற்றத்தை மேலும் பலப்படுத்தப் போகின்றது.

நான்காவது பௌத்த ஆலயங்களுக்கான நிலப்பறிப்பாகும். முன்னர் பௌத்த ஆலயங்கள் இருந்த இடங்கள் எனக் கூறிப் பழைய இடத்திலும் பார்க்க அதிகமான இடம் இதற்காகப் பறிக்கப்படுகின்றன. கிளிநொச்சி நகரில் இவ்வாறான பௌத்த ஆலயம் பெரிய நிலப்பரப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதைவிடப் படைமுகாம்களுக்கு மத்தியிலும் சிறிய சிறிய ஆலயங்கள் கட்டப்படுகின்றன. வவுனியா நகரத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றது. அமைதியைப் போதித்த புத்த பகவான் இங்கு ஆக்கிரமிப்பின் குறியீடாக மாற்றப்பட்டுள்ளார்.

ஐந்தாவது இராணுவத் தேவைகளுக்கான நிலப்பறிப்பாகும். வடக்கில் இப்பறிப்புத்தான் தற்போது அதிகமாக உள்ளது. இப்பறிப்புகள் ஆறு வகைகளாக இடம்பெறுகின்றன. இராணுவ முகாம்களுக்கான நிலப்பறிப்பு, இராணுவ முகாம்களுக்குச் செல்லும் பாதைகளுக்கான நிலப்பறிப்பு, இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிகளுக்கான நிலப்பறிப்பு, சிங்கள சுற்றுலாப் பயணிகளின் இடைத்தங்கல் நிலையங்களுக்கான நிலப்பறிப்பு, இராணுவக் கடைகளுக்கான நிலப்பறிப்பு, இராணுவ விவசாயப் பண்ணைகளுக்கான நிலப்பறிப்பு என்பனவே இவ் ஆறுமாகும். கிழக்கில் இப்பறிப்புகள் இடம்பெற்றாலும் வடக்கினைப்போலக் கடுமையானதாக இல்லை.

இப் பறிப்புகளுக்குத் தனியார் காணிகள், அரச காணிகள், பொது நிறுவனங்களின் காணிகள் என எதுவும் விதிவிலக்கான தாக இல்லை. தற்போது வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. அவை எதிர்காலத்தில் இராணுவத் தேவைகளுக்காகப் பறிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

நினைவுத் தூபிகளுக்காக ஆனையிறவு, கிளிநொச்சி சந்திகளில் பெறுமதியான காணிகள் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. சிங்களச் சுற்றுலாப் பயணிகளுக்கான இடைத்தங்கல் இல்லங்கள் வீதியில் ஒவ்வொரு முக்கிய சந்திகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் கடைகளும் சந்திக்குச் சந்தி உருவாக்கப் பட்டுள்ளன. இராணுவத்தினருக்கான பண்ணைகள் பலாலியிலும், வன்னியிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இராணுவ முகாம்களுக்கான காணிப் பறிப்புகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. வடக்கின் மூலை முடுக்கெல்லாம் அவை இடம்பெற்றுள்ளன. தற்போது திருமுறிகண்டியில் இராணுவக் குடியிருப்புக்காகவும் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆறாவது அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிப்பறிப் பாகும். கிழக்கில் பாசிக்குடா தொடக்கம் நிலாவெளி வரை உல்லாச ஹொட்டல்களுக்காகக் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கம்பனிகளுக்கு விவசாயத் திட்டங்களுக்காவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கிழக்கில் பறிக்கப்பட்டுள் ளன. கிழக்கு மாகாண காணி அமைச்சர் தனக்குத்தெரியாமல் 25,000 ஏக்கர் காணி பறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலும், மரமுந்திரிகைத் திட்டம் உட்படப் பல்வேறு திட்டங்களுக்காகக் காணிகள் பறிக்கப்படுவதற்காகச் செய்திகள் வருகின்றன.

போருக்குப் பின்னரான சவால்களில் இரண்டாவது மிகப் பெரிய சவால் இராணுவ நிர்வாகமாகும். இந்த இராணுவ நிர்வாகத்தால் வட கிழக்கு மக்கள் ஒரு திறந்த வெளிக்கைதிகள் என்ற நிலையிலேயே உள்ளனர். அவர்கள் உண்பதற்கு மட்டுமே வாய்திறக்க முடியும். வேறு விடயங்களைப் பேச வாய்திறக்க முடியாது. இராணுவத்தினரின் அனுமதியில்லாமல் ஓரிடத்தில் ஐந்து பேர் கூடிக்கதைப்பதற்கு முடியாது. எல்லாப் பொது நிகழ்வுகளுக்கும் அருகிலுள்ள இராணுவ முகாம்களின் தளபதிகளை அழைக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத பொது விதியாக உள்ளது. அரச நிர்வாகமும் இராணுவத்தின் ஒரு செயற்பாட்டுக் கருவியாக மாறியுள்ளது.

நடைமுறையில் இராணுவத்தினர் வேறாகவும், இராணு உளவுப்பிரிவினர் வேறாகவும் செயற்படுகின்றனர். இனந்தெரியாத கொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் இராணுவ உளவுப் பிரிவினரே காரணம் என மக்கள் கூறுகின்றனர். சந்திக்குச் சந்தி ஒழுங்கைக்கு ஒழுங்கை இராணுவத்தினர் நிற்கும்போது அவர்களுக்குத் தெரியாமல் கொலைகள், தாக்குதல் இடம்பெறுகின்றன எனக் கூறமுடியாது. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நகைச்சுவையாகக் கொலைகள் பற்றி இராணுவத்திற்குத் தெரியாதென்றால் முனிதான் அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

வடகிழக்கில் இராணுவ நிர்வாகம் இருக்கும்வரை ஜனநாயகச் செயற்பாடுகளை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது. இன்று அரசியற் கட்சிகளெல்லாம் அங்குப் பெயருக்குச் செயற்படு கின்றனவே தவிர எந்த ஜனநாயகச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. அவ்வாறு முன்னெடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டால் பிரமுகர்கள் தாக்கப்படுவது குறைவு, மாறாக உறுதுணையாக இருக்கும் பொதுமக்களே அச்சுறுத்தப்படுகின்றனர். இதனால் பொதுமக்களும் ஜனநாயகச் செயற்பாடுகளில் பெரிய அக்கறைகளைக் காட்டுவதில்லை. இதற்குச் சிறந்த உதாரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிச் சபை வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை இராணுவம் சேகரிக்கின்றமையாகும். இதேபோல சுரேஸ் - பிறேமச்சந்திரன் மீதான கோபத்தை அவரின் செயலாளர்மீது தீர்த்திருக்கின்றனர். பத்திரிகைகளும் சுயதணிக்கை களை மேற்கொண்டு வருகின்றன. கொழும்புப் பத்திரிகைகளை விட யாழ்ப்பாணப் பத்திரிகைகளே இது விடயத்தில் பெரிதும் அச்சப்படுகின்றன.

மூன்றாவது சவால் பொருளாதார ஆதிக்கமாகும். இது மூன்று வகையாக இப் பொருளாதார ஆதிக்கம் இடம்பெறுகின்றது. தமிழர் தாயகத்தின் பண வளங்களை அள்ளிச் செல்லுதல், மூலவளங்களை அள்ளிச் செல்லுதல், தொழில் வாய்ப்புகளைப் பறித்தெடுத்தல் என்பனவே அவ்மூன்றுமாகும்.

தமிழர் தாயகத்தின் பணவளங்களை அள்ளிச்செல்லுதல் யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணக் குடும்பங்களில் பெரும்பாலனவற்றிற்கு வெளிநாடுகளில் உறவுகள் உண்டு. இதன் காரணமாக வெளிநாட்டுப் பணம் அவர்களுக்கு வருகின்றது. இதைவிட யாழ்ப்பாண மக்கள் சேமிப்புக்குப் பழக்கப்பட்டவர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தங்களை ஒறுத்துப் பணத்தைச் சேமிப்பவர்கள். இந்தச் சேமிப்புப் பணங்களை அள்ளிச் செல்வதற்காகத் தெற்கிலிருந்து தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தமது கிளைகளை யாழ்ப்பாணத்தில் திறந்திருக்கின்றன.

சம்பத்த வங்கி ஒரு இனவாத வங்கி என அழைக்கப்படுகின்றது. அதில் தமிழர்களை வேலைக்குச் சேர்ப்பதே மிகக் குறைவு. அவ்வங்கியும் தனது கிளைகளை வட கிழக்கு எங்கும் திறந்திருக்கின்றது. அது யாழ்ப்பாணத்தில் கிளைகளைத் திறந்த முதல் நாளே லட்சக்கணக்கில் பணம் சேமிப்பில் சேர்ந்திருக்கின்றது. இந்த வங்கிகளில் பணியாளர்களாகத் தெற்கிலிருந்து சிங்களவர் களும் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றனர். இந்த வங்கிகள் தமிழர்களுக்குப் பெரியளவில் கடனுதவிகளை வழங்குவதில்லை.

இதைவிட “சதோசா’’ போன்ற தெற்கின் வர்த்தக நிறுவனங்களும் அங்கு உருவாக்கப்படுகின்றன. இதற்குப் பணியாளர்களும் தெற்கிலிருந்து கொண்டுவரப்படுகின்றனர். இந்த வர்த்த நிறுவனங்களும், ஆங்காங்கே காணிகளை அடாத்தாகப் பிடித்துக் கொட்டில்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற வர்த்தக நிறுவனங்களும் போரிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வர்த்தகத்தை விருத்தி செய்து வருகின்ற தமிழ் வர்த்தகர்களை மோசமாகப் பலவீனமாக்குகின்றன.

அடுத்து மூலவளங்களைச் அள்ளிச் செல்லுதல் ஆகும். வட- கிழக்கின் மூல வளங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை. வட வழங்களையும் பறித்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

காங்கேசன்துறைச் சீமந்து தொழிற்சாலையை ஒட்டிய பிரதேசங்கிலுள்ள சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்தெடுக்கும் வாய்ப்பு தெற்கு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பல் மூலம் போர்க்காலத்திலேயே இவற்றைத் தெற்கிற்குக் கொண்டுசென்றனர். இதுபற்றி யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கோ, தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ கூட எதுவும் தெரிவிக்கவில்லை. போரின் பின்னர் கீரிமலைக்குச் சென்றவர்கள் மூலம்தான் அது வெளியில் தெரியவந்தது.

இதேபோல மணல்களை அள்ளிச்செல்லும் அனுமதியும் சிங்கள வர்த்தகர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தென் இலங்கைக்கு வன்னியின் மணல்களை அள்ளிச் செல்கின்றனர். அதேவேளை வன்னியில் மணலை இலவசமாக அள்ளிச்சென்று குடாநாட்டு மக்களுக்கு விற்கின்றனர்.

காட்டு வளங்களும் இவர்களின் கண்களுக்கு அகப்படாமல் இருக்கவில்லை. புலிகள் இருக்கும்போது காடுகளில் உள்ள பாரிய மரங்களைத் தறிப்பதற்குத் தடை விதித்திருந்தனர். போரின் பின்னர் தென் இலங்கை வியாபாரிகள் வன்னிக்கு வந்து காடுகளில் உள்ள பாரிய மரங்களைத் தறித்து விற்பனைக்காகத் தென் இலங்கைக்குக் கொண்டு செல்கின்றனர். மேலிடத்திலிருந்து விசேட அனுமதி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடுமையாகப் போர் நடந்த புதுக்குடியிருப்புப் பிரதேசம் தற்போது பாதுகாப்பு வலயமாக உள்ளது. அங்குச் செல்வதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கோ இன்னமும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால், தென் இலங்கை வியாபாரிகள் தாராளமாக அங்குச் சென்று பழைய இரும்புகள், வீட்டுக் கதவு, யன்னல் நிலைகள் என்பவற்றைத் தென் இலங்கைக்குக் கொண்டு செல்கின்றனர்.

மீன்வள விடயத்திலும் இவர்களின் வளப்பறிப்பு இடம் பெறுகின்றது. மன்னார் வளைகுடாக் கடல் பரப்பிலும், முல்லைத் தீவு கடற்பரப்பிலும் சிங்கள மீனவர்கள் பாரிய படகுகளுடன் வந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கான அனுமதி தமிழ் மீனவர்களுக்கு இன்னமும் சீராக வழங்கப்படவில்லை.

மூன்றாவது தொழில் வாய்ப்புகளைப் பறித்துச் செல்லலாகும். இதில் கொந்தராத்துத் தொழில் முக்கியமாக உள்ளது. போரின் பின்னர் வீதி அமைத்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற கொந்தராத்துத் தொழில்கள் முக்கியமானதாக உள்ளன. இக் கொந்தராத்துகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அனைத்தும் சிங்களவர்களுக்கே வழங்கப்படுகின்றது. சிங்களக் கொந்தராத்துகாரர்கள் வேலையாட்களாகவும் சிங்களவர் களையே முழுமையாகக் கொண்டு வருகின்றனர். பல கொந்தராத்து வேலைகள் சீரற்று ஒழுங்கின்மையுடனும் நடைபெறுகின்றன. அவர்களுடைய செயற்பாடுகள் பல தரமானதாக இல்லை.இதனைத் தட்டிக்கேட்பதற்கும் தமிழ் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். கொந்தராத்துகாரர்கள் மேலிடச் செல்வாக்கினைப் பெற்றவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.

இதைவிட அரச தொழில் வாய்ப்புகளும் சிங்களவர்களுக்குக் கொடுக்கும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. அடிமட்டத்திலுள்ள சிற்றூழியர் பதவிகளுக்குக் கூட இந்நிலை ஏற்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்ட 21 பேரில் 17 பேர் சிங்களவர் களாக இருந்தனர். நிர்வாகச் சேவையில் இணைத்துக்கொண்ட 257 பேரும் சிங்களவர்களாக இருந்தனர். மன்னாரில் அமைச்சர் ரிசாத்பதியுதீன் பட்டியலிலேயே சிற்றூழியர் பதவிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கம் இந்தவகையான பச்சை சூறையாடல் நடவடிக்கை களையே அபிவிருத்தியாகக் காட்டிவருகின்றது. வட கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களின் மூலவளங்களைப் பிரயோகிக்கக் கூடிய, அவர்களுக்குத் தொழில் வாய்ப்பினைத் தரக்கூடிய எந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபடவில்லை.

உண்மையில் இனப்படுகொலை என்பதற்குள் இவையெல்லாம் அடங்கும். ஒரு இனத்தினைக் கொலைசெய்வது மட்டும் இனப்படுகொலையல்ல. அந்த இனத்தின் நிலத்தினைப் பறித்தல், அதன் கூட்டிருப்பைச் சிதைத்தல், கூட்டடையாளங்களை அழித்தல், வாழ்வாதாரங்களைப் பறித்தல் என்பவற்றையும் இனப்படுகொலைக்குள் அடங்குபவையே.

Pin It