பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் சிலர் நன்கு அறியப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் நன்கு அறியப் படாமல் உள்ளனர். அவ்வாறு அறியப்படாத ஆளுமையாக அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் (1800-1897) இருந் திருக்கிறார். இந்த ஆளுமை குறித்த கவனத்தை தமிழ்ச் சூழலில் அரசியற் செயற்பாடாகவும் கருத்தியல் விவாதமாகவும் உருமாற்றி இருப்பவர் பேராசிரியர். வீ. அரசு. ‘அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு எனும் பனுவலை உருவாக்கியதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக வரலாற்றில் முக்கியமாகக் கவனம் கொள்ள வேண்டிய அவசியப்பாட்டை உருவாக்கியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது புத்தொளிக்காலம். இதுகாலம் வரை கேள்வி கேட்கப்படாமல் இருந்த பல்வேறு நிகழ்வுகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேள்விக்கு ஆளாக்கப்பட்டன. இதில் சமயங்கள் தொடர்பான விவாதங்கள் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. குறிப்பாகச் சமயச்சீர்திருத்தங்கள் விரிவாகப்பேசப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் தான் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் முதலான அமைப்புகள் உருவாயின. இந்தக் காலத்தில் வாழ்ந்தவர் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார். இவர் இந்துமதத்தின் மூலம் உருவாகும் கேடுகள் குறித்தும் கவலை கொண்டார். இந்து மதத்தை அறிவுப்பூர்வமாகவும் ஆய்வுரீதியிலும் புரிந்துகொள்வதற் கான முயற்சியிலும் ஈடுபட்டார்.

குறிப்பாக இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் முட்டாள்தனமான சடங்குகள் மற்றும் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனர்கள் ஏழை மக்களைச் சுரண்டும் முறைகள் ஆகியவை எவ்விதம் இந்து மதத்தின் ஆசாரங்களாக உள்ளன என்பது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த எழுத்துகள் இந்தக் காலத்தில் தனிக்கவனம் பெறுகிறது. பின்னோக்கிப் பார்க்கும் பொழுது இந்த எழுத்துகள் தான் இந்துமதம் தொடர்பான மாற்று உரையாடலுக்கானக் களத்தைத் திறந்துவிடுகிறது.

உலகளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் விரைந்தெழுந்து வளரத் தொடங்கியது எனலாம். சார்லஸ் டார்வின் முன்மொழிந்த உயிரினங்களின் கூர்ப்புக் கோட்பாடு மனிதரின் தோற்றம் பற்றிய புலக்காட்சியை விரிவுபடுத்தியது. இவற்றின் செல்வாக்குகள் கலை இலக்கியத் திறனாய்விலும் உட்புகத் தொடங்கின. இந்நிலையில் உருவாக்கம் பெற்ற திறனாய்வாளராக ஹிப்போலித்தி அடொல்பேதைனி (1828-1893) சிறப்புப் பெறுகின்றார்.

இவர் இலக்கியப்படைப்பைத் தனித்து ஆராய முடியாதென்றும் அதனை ஆக்கியவரது ஆளுமையையும் உளக் கோலங்களையும் உளநிலையையும் ஒன்றிணைத்து ஆராயும் பொழுதுதான் முழுமையைக் கண்டறிய முடியும் என்றும் வலியுறுத்தினார். மேலும் படைப்போடு இணைந்துள்ள சூழல் நிலவரங்கள் மீதும் பண்பாட்டுக் கோலங்கள் மீதும் கவனம் செலுத் தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படல் வேண்டும் என்றார்.

இந்தப் பின்னணியில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனாரைப் புரிந்து கொள்வதற்கான தருக்கவியல் பண்புகளை வீ. அரசு நமக்குத் தந்துள்ளார். குறிப்பாக இந்த நூலுருவாக்கப் பணி இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. வள்ளலார் (1823-1874) ஆறுமுகநாவலர் (1822-1879) மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (1855-1897) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1926-1889) ஆகியோர் வரிசையில் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் என்னும் ஆளுமையும் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதை இந்நூல் நமக்கு தெளிவாக அடையாளப்படுத்துகிறது.

த்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர். சாதாரண மக்களிடம் இருந்த உழவு நிலங்கள் ஆதிக்க சாதிக் காரர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டபோது அந்நிலங்களை மீட்டு அம்மக்களுக்கே கொடுக்கும் போராட் டத்தில் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்திருக்கிறார். அப்போது ஆட்சி செய்த காலனிய அதிகாரிகளிடம் முறையிட்டு உரியவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடியுள்ளார். இச்செயற் பாடுகள் தொடர்பாக அத்திப்பாக்கம் வெங்கடாசலம் எழுதியவைகள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன.

இந்நூலில் ஐந்து பகுதிகள் இடம் பெற்றுள்ளன. முதற்பகுதியில் ‘அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் எனும் சமூகப் போராளி என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர் சமூகப்போராளியாக நோக்கப்படுவதற்கான பின்புலம் தெளிவாக எடுத்துரைக்கப்படு கிறது. முன்னைய எழுத்துகளில் வாசிப்புகளில் கவனம் பெறாத விடயங்கள் இங்கு புதிய பொருள் கோடலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேராசிரியர். வீ. அரசு ஒரு முக்கியமான ஆளுமையைத் தமிழ்ச்சூழலுக்கு அடையாளம் காட்டுகிறார். மறைந்த வரலாற்றை புதுப்பிப்பதும் அதன் மூலம் சமகாலத்தைப் புரிந்து கொள்வதற்கான உத்வேகமும் பதிவு செய்யப்படுகிறது.

பகுதி இரண்டில், தொண்டை மண்டலம் சாதி நில உறவுகள் (வீ. அரசு), பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகி யிருக்கிற விவாதம்/தத்துவவிவேசினி கடிதங்கள் உள்ளடங்கி உள்ளன. அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் 1872இல் வெளியிடப்பட்ட ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும்; உண்டாகியிருக்கிற விவாதம் எனும் ஆவணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் வீ. அரசுவின் ‘தொண்டை மண்டல சாதி நில உறவுகள் கட்டுரை இடம் பெறுகிறது. தமிழ்மொழியைப் பெரும்பான்மையாகப் பேசுபவர்கள் வாழ்ந்த வாழும் நிலப் பகுதிகள் பல்வேறு மண்டலங்களாக நிலவியல் சார்ந்து பிரிந் திருக்கின்றன.

இவை கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம், நாஞ்சில்நாடு எனும் பிரிவு களாக உள்ளன. இவற்றுள் பல்வேறு உட்பிரிவுகளும் உள்ளன. இந்தப் பின்புலத்தில் ஐரோப்பியர்கள் நிர்வாகத்தை மேற்கொண்ட போது நில உறவுகளில் புதிய மாற்றங்கள் உருவாகியிருந்தன. இவற்றை இக்கட்டுரை தெளிவாக வெளிப்படுத்துகிறது. செங்கற்பட்டு பகுதி நில உறவுத் தன்மைகளை அடிப்படைபாகக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள நிலஉறவுத் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான உரையாடல்கள் தவிர்க்க முடியாது என்பதை தருக்க ரீதியாக அரசுவின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

பகுதி மூன்றில், ‘ஆசாரம்-ஆபாசம் இந்துமதம் (வீ.அரசு) இந்துமத ஆசார ஆபாச தரிசினி இரண்டாம் மற்றும் முதற்பதிப்பு மதிப்புரைகள் சாற்றுக்கவிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் 1882ஆம் ஆண்டில் 8011 செய்யுட்களை எழுதி ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி எனும் பெயரில் நூலொன்றை வெளியிட்டார். இந்நூலில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளும் வகையில் அரசுவின் ‘ஆசாரம் - ஆபாசம் : இந்து மதம்;’ கட்டுரை இடம் பெற்றுள்ளது.

மேற்குறித்த நூல் இந்துமதம் குறித்து மிக விரிவாகவும் ஆழமாகவும் விமர்சனம் செய்து எழுதிய நூலாகும். இந்துமதம் தொடர்பாக விமர்சன அணுகுமுறை தமிழ்ச்சூழலில் இயல்பாக மையம் கொண்டுள்ளது என்பதையும் நாம் இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சமய மறுப்பு இயக்கம் தமிழ்ச்சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்து வந்துள்ளது என்பதை சமூக வரலாற்று ரீதியில் புரிந்து கொள்வதற்கான பின்புலத்தை அரசுவின் கட்டுரை வழங்குகிறது.

நான்காம் பகுதியில் பதினேழு கேள்விகளும் பதில்களும் எனும் பகுதி இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் பகுதியில் ‘மூல நூல்களின் முதற் பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த இரு பகுதிகளும் ‘வெங்கடாசலனார் திரட்டு மீதான கவனயீர்ப்பை ஈர்க்கின்றது. நம்மிடையே வாசகனின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. வாசிப்பை ஒருவரது ஆழ்மனம் அல்லது நனவிலி மனத்துடன் இணைத்து நோக்கும் மரபை உளப்பகுப்பு உளவிய லாளர் உருவாக்கினார். அதாவது ஒருவரின் நனவிலி மனத்தின் இயல்புக்கு ஏற்ற இலக்கியத்துக்குரிய பொருள் கோடலை மேற் கொண்டு தனித்துவ நிலையிலே ஒவ்வொரு வாசகரும் துலங்குவர்.

நம்மிடையே வாசிப்பின்போது வாசகரின் இயல்புக்கு ஏற்றவாறு சிந்தனை குவிசிந்தனை, விரிசிந்தனை எனும் இரு இருநிலைகளில் வாசிப்பு துவங்க வேண்டும், ஆழப்பட வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நூலாசிரியரின் கருத்து எல்லையின் விளிம்புக்கு அப்பால் வாசகர் நகரும்பொழுது வாசகருக்குரிய தனித்துவம் மேலெழத் தொடங்குகிறது. இந்நிலையிலேயே “கருத்து எல்லையின் விளிம்பு என்ற தொடரின் அடிப்படையாக வாசிப்பையும் வாசகரையும் முன்னிறுத்தும் அணுகுமுறைகள் மேலெழுந்துள்ளன.

கட்டுமானக் குலைப்புச் செய்யும் பாங்கு, வாசகர் துலங்கள் திறனாய்வு முதலான பண்புகள் காரணமாக இந்த நூல் தனித்துவமாக உள்ளது. பின்காலனியத் திறனாய்விலே மொழியும் ‘பிரதிநிதித்துவப்படுத்தலும் பெருமள விலேயே எடுத்தாளப்படுதல் குறிப்பிடத்தக்கது.

வாசகர் துலங்கல் திறனாய்வு பனுவலை ஓர் ‘ஆற்றுகை வடிவமாக கருதுகின்றது. ஆற்றுகை வடிவம் என்பதன் பொருள் அது இறுகி நிலைத்த வடிவம் அன்று என்பதாகும். அதாவது அது தொடர்ந்து இயங்கும் நிலையில் உள்ள வடிவம் என்பதாகும். இயங்கும் நிலையானது மாற்றமடையும் நிலையாகும். இந்நிலை யில் வாசகர் தமது இயல்புக்கு ஏற்றவாறு கருத்துரு வாக்கத்தை தம்முள் உருவாக்கிக் கொள்கின்றனர். வாசகர்கள் மேற்கொள்ளும் பொருள்கோடல் அல்லது வியாக்கியானம் செய்தல்வாயிலாக கருத்தாக்கம் பலநிலைகளில் உருவாக்கப்படுகின்றது. நூலிலும் அல்லது பனுவல் பண்பை, வடிவை எடுக்கின்றது.

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் மீதான வீ.அரசுவின் வாசிப்பு, பொருள்கோடல் சமூக வரலாற்றில் கட்டு மானக் குலைப்புச் செய்யும் பாங்கு, வாசகர் துலங்கல் திறனாய்வு முதலான படைப்புகள் காரணமாக இந்த நூல் தனித்துவமாக உள்ளது.

எந்தவொரு ஆய்வாளரும் வெறுமனே பழைய பனுவல்களைக் கண்டுபிடித்து அப்படியே பிரதி பண்ணிக்கொடுப்பது அச்சாக்கிக் கொடுப்பது மட்டும் அவர்தம் பணியன்று. மேலும் இலக்கியப் படைப்புகளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் பின்னினக் குழும இயல்போடு தொடர்புடையது என்ற புரிதல் ஆய்வாளருக்கு இருக்க வேண்டும். அதாவது தமிழ் இலக்கிய ஆக்கங்கள் தோன்றி யமைக்கான சமூகச் சூழலை அக்கோட்பாடு நோக்குகின்றது.

இலக்கியம் படைத்தவர்களுக்கும் சமூகச் சூழலுக்கும் இடையே யுள்ள இடைவினைகளைக் கண்டறிய அக்கோட்பாடு துணை செய்கிறது. இலக்கியங்களில் வெளிப்படையாகவோ மறைந்து நின்றோ இயங்கிக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறை அழுத்தங்களில் மொழி மற்றும் இன அடையாளங்களின் இயல்பு விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இலக்கியம் படைத்தவர்களது அனுபவத்துக்கும் இடையேயுள்ள உறவிலும் விரிசலிலும் இனக்குழு நோக்கு ஏற்படுத்தும் செல்வாக்குகளை கண்டறிதல் முக்கியமானது. சில சந்தர்ப்பங்களில் ‘இனக்குழுமக் கோட்பாடு என்பதைக் காட்டிலும் ‘இனக்குழு நிலவரம் என்பது பொருத்த மாகவும் இருக்கும்.

இந்தப் பின்புலத்தில் ‘அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு நோக்கப்பட வேண்டும். வாசிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் பேரா.வீ.அரசுவின் படைப்பாக்கச் செயல்முறையில் இழையோடும் ‘அறிவு, ‘ஆய்வு முதலான அம்சங்களை நாம் விளங்கிச் கொள்ள முடியும்.

சமகாலத்தில் முன்னைய ‘பதிப்பு எனும் கருத்து வெளிப்படுத்தும் அர்த்தத்தில் இருந்து இன்று ‘பதிப்பு என்பது பன்முக அர்த்தப்பாடுகளை உள்வாங்கி உள்ளது. இந்தப் புரிதலில் தான் நாம் பேரா.வீ.அரசுவின் பதிப்பு முயற்சிகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் முன்னைய ஆய்வாளர் களிடமிருந்து வீ.அரசு எவ்வாறு வேறுபடுகிறார். தனித்து நிற்கிறார் என்பதும் தெளிவுபடும்.

(இந்நூல் மதிப்பீட்டை எழுதியுள்ளவர் ஈழத்தை சேர்ந்த ஆய்வாளர். ஈழத்தின் இதழியல் மற்றும் ஆய்வு வரலாற்றில் இவருக்குத் தனித்த இடமுண்டு. கொழும்பில் வசிக்கிறார்.)

Pin It