(சென்னை இலௌகிக சங்க இதழ்களான தத்துவவிவேசினி மற்றும் THE THINKER இதழ்த் தொகுதிகளை முன் வைத்துச் சென்னைப் பல்கலையில் நூல்வெளியீடும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருநாள் கருத்தரங்கப் பதிவாக இக்கட்டுரை அமைகிறது).

தமிழ்ச் சிந்தனைமரபில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது எனலாம். அத் தகைய சிந்தனைமரபில் வந்தவர்களாக வள்ளலார், அயோத்தி தாசர், பெரியார் போன்றோரைக் குறிப்பிடமுடியும். அதற்கு ஆதாரமாக மேற்கண்டோர் சிந்தனைகள் அக்காலத்திலோ அதற்குப்பிறகோ தொகுக்கப்பட்டு உயிரோட்டமான ஆவணப் பதிவுகளாக நம்முன் நிற்கின்றன. அத்தகைய மரபில் சென்னை இலௌகிக சங்கமும் அதன் உறுப்பினர் குழாமும் நடத்திய தத்துவவிவேசினி மற்றும் THE THINKER ஆகிய இரு இதழ்களின் பதிப்பு பேராசிரியர் வீ.அரசு அவர்களால் தொகுக்கப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சங்கத்துடன் தொடர்பு கொண்டவரான அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனாரின் ஆக்கங்களும் நூலாக வெளியிடப்பட்டன. மேற்கண்ட நூல்களின் வெளியீட்டுவிழா 28.10.13 அன்றும் அதனைத் தொடர்ந்து 29,30 ஆகிய இரு தேதிகளில் அவை குறித்தான முழுஅளவிலான கருத்தரங்கும் நடைபெற்றது. அக்கருத்தரங்கச் சிந்தனைப் போக்கை இக் கட்டுரை பதிவுசெய்கிறது. சென்னைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் இரா. தாண்டவன் தலைமையேற்க நிகழ்வின் தொடக்கமாக 28.10.13 அன்று ‘அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு நூலை நீதிபதி கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு ‘சதுர்வேதி மங்கலங்கள் தோன்றியபோதே அத்திப்பாக்கம் வெங்கடாசலனாரும் தோன்றினார்கள். இவருக்கு அச்சு ஊடகம் வாய்த்தது அதனால் இவரால் பதிவு செய்ய முடிந்தது என்றார்.

இந்நூலைத் தொடர்ந்து தத்துவ விவேசினி, THE THINKER இதழ்த் தொகுதிகளையும் நீதியரசர் சந்துரு அவர்கள் வெளியிட அதனைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பேராசிரியர் இரா. மணிவண்ணன் அவர்கள் ‘அரசு அவர்கள் கொண்டுவந்த இத்தொகுப்பில் பண்பாடு, கலை, விஞ்ஞானம், பெண்ணியம், கடவுள் மறுப்பு, மனித உரிமைகள் முதலிய கருத்துப் பரிமாற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக பதிப்பாசிரியரின் ஏற்புரையாக வீ. அரசு அவர்களின் பேச்சு அமைந்தது. சென்னை இலௌகிக சங்கத்தார் மேற்கத்திய புத்தொளி மரபின் தொடர்ச்சியாக எவ்வாறு தமிழ்ச் சூழலில் வினையாற்றினர் என்பது குறித்தான விவரணைகளைப் பதிவு செய்தார். சுமார் 400 பேர்களுக்குள் நிகழ்ந்த பல்வேறு கருத்துப் புலங்களின் நீட்சியாகவும் அதன் அடுத்தகட்டமாகவும் பெரியார் நம்மிடம் உள்ளார் என்ற அவரது கூற்றுக்குப் பின் பேராசிரியர். ய. மணிகண்டன் நன்றி கூறி நிகழ்வை முடித்து வைத்தார். 29.10.2013, 30.10.2013 ஆகிய இருநாட்களும் தத்துவவிவேசினி மற்றும் THE THINKER ஆகிய இரு இதழ்த் தொகுதிகள் (மொத்தம் 6 தொகுதிகள்) குறித்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வுகளைக் கீழ்க்கண்ட முறையில் தொகுத்துக் கொள்ளலாம்

-     இயக்கம் சார்ந்த செயல்பாட்டாளர் பார்வையில் சென்னை இலௌகிக சங்கச் செயல்பாடுகள்.

-     கருத்துநிலை சார்ந்த ஆய்வாளர்களில் மார்க்சியம், பெரியாரியம் குறித்த அடிப்படையை உடையவர்கள் பார்வை.

-     கருத்துநிலை சார்ந்த ஆய்வாளர்களில் தலித்தியம் சார்ந்த ஆய்வினைச் செய்தவர்களின் பார்வை.

-     பிரதி வாசிப்பு, மறுவாசிப்புத் தளத்தில் அறியப் பட்டவர்கள் ஆய்வாளர் பார்வை.

திராவிட இயக்கம் சார்ந்த கருத்தாளர்களில் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் சென்னை இலௌகிக சங்கம் செயல் பட்ட காலத்தில் சென்னையில் இருந்த 50 அமைப்புகளில் முற்போக்கு அமைப்புகள் 10 இல் இலௌகிக சங்கமும் ஒன்று என்று குறிப்பிட்டு, அவர் எடுத்துக்கொண்ட ‘தத்துவவிவேசினி யில் காலனியம் என்ற தலைப்பிற்கு ஏற்ப காலனியம் பற்றிய பல்வேறு செய்திகளை நினைவுபடுத்தி அவை இன்று அடைந் துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்தார்.

அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சம், மன்றோ சிலை பற்றிய பதிவுகள் குறிப்பிடத்தக்கன. இது ஒரு பெரிய பத்திரிகை என்ற அளவில் இல்லாமல், 150 உறுப்பினர் களைக் கொண்டு சுமார் 200 பேர்களைச் சந்தாதாரர்களாகக் கொண்ட இப்பத்திரிகை அறிவார்ந்த தளத்தில் இயங்கியதைச் சுட்டிக்காட்டினார். தத்துவவிவேசினியில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் அன்றைய சென்னை ஆளுநர் உதகையில் இருந்து சென்னை இராசதானியை நிர்வாகம் செய்து வருவதைக் கண்டித்து எழுதப்பட்ட கண்டனத்தை இன்றைய முதலமைச்சரின் கொடநாடு பிரவேசத்தோடு பொருத்திக்காட்டினார்.

கொளத்தூர் மணியவர்கள் பேசுகையில் பெரியார் பொது வாழ்விற்கு வருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பு செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். மேலும் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் நூல் தவிர்த்து பெரியாருக்கு இவ்வமைப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை என்றும்; பேசினார். அதுபோன்று அயோத்திதாசருக்குப்பின் நடத்தப்பட்ட ‘தமிழன் இதழோடு மட்டுமே பெரியாருக்குத் தொடர்பு இருந்ததை இணைத்துப் பேசினார்.

பெரியார் மக்களிடமே அதிகம் பேசியவர். இவர்களோ அறிஞர் மத்தியில் செயல்பட்டவர்கள். பெரியார் கிறித்தவர்களை அதிகம் விமர்சிக்கவில்லை. இவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையும் கிறித்தவம் சார்ந்ததாகவே இருக்கிறது என்பது போன்ற எதிர் எதிர் கருத்துகளைச் சுட்டி காட்டியபோதும் பெரியார் பின்னாளில் விமர்சிக்காத புராணங்கள் பலவற்றையும் இவர்கள் விமர்சித்திருக்கின்றனர் என்று முடித்துக் கொணடார்.

தத்துவவிவேசினியில் பெண்கள் குறித்த பதிவுகள் என்ற பொருண்மையில் விடுதலை ராஜேந்திரன் உரையாற்றினார். அன்றைய காலகட்டத்தில் தத்துவவிவேசினியார் பெண்கள் விசயத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், குடும்ப அமைப்பிற்குள் இருந்ம பெண்களின் கடமைகள் - கணவன், மனைவி ஆகிய இருவருக்குமான தனித்தனி கடமைகள் - பால்ய விவாகம் எதிர்ப்பு - விதவைத் திருமண ஆதரிப்பு ஆகியவை பற்றிய தத்துவவிவேசினி காலப் பதிவுகளை எடுத்துக் காட்டி அவை சட்டமாக இருந்த பார்ப்பன இந்து மதத் தடை களை அவற்றின் விவரங்களோடு விளக்கினார். இன்றைய பார்வையில் பெண்களுக்கு எதிரான சில விடயங்கள் இவ்விதழ்த் இத்தொகுப்பில் இருந்த போதிலும் அத்தகைய பழமைவாதத்தி லிருந்து ஒருபடி தத்துவவிவேசினி முன்னேறிச் சென்றிருப்பதையும் பதிவு செய்தார்.

அடுத்ததாக இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி, பகுத்தறிவு இயக்கத்தின் தாய் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று பேசிய பெ. மணியரசன் அவர்கள், தமிழ்தேசிய செயல்பாட்டாளர் என்ற நிலையில் அதற்கும் முன்பாக இச்சிந்தனைகள் தமிழகத்தில இருந்தன என்றார். உலக நாடுகளில் மறுமலர்ச்சி அந்நாட்டின் பெருமைகளையே அடிப்படையாகக் கொண்டு எழ, தமிழகத்தில் மட்டும் வேறு வகைகளில் அது குழப்பமாகச் சொல்லப்பட் டுள்ளது என்றார்.

இந்தியா முழுமையும் வரலாற்று ஒருமைவாதம் நிறைந்திருப்பதையும் 19,20ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி இன்றும் முற்றுப்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி வரலாற்றை முன்னெடுக்க முன்னோர்கள் வழங்கிய ஆயுதமாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்றார். ஒரு கட்டத்திற்கு மேல இவர்கள் செல்லவில்லை என்றாலும் தொடங்கியிருக்கிறார்கள் என்ற அளவில் இவரின் பேச்சு அமைந்தது.

மார்க்சிய பொதுவுடைமைக்கச்சி செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன் பேசுகையில் கிறித்தவப் போதகர்கள், சீர்திருத்தம், கல்வி, மருத்துவம், மதம் பரப்பிய காலனிய காலத்தில் இப் பத்திரிகை வந்திருப்பது மிகப்பெரிய புரட்சியாகும் என்றதுடன், ‘தத்துவவிவேசினி அறிவியல் கருத்துகள் என்ற தலைப்பில் கருத்துரைத்தார். டார்வினைப் பற்றியும் அவரின் பரிணாமக் கோட்பாடு பற்றியும் மட்டுமே நூறு பக்கங்கள் தொடர்ச்சியாக கட்டுரைகள் வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இறைமறுப்பு,

கிறித்தவம் மற்றும் காலரா போன்ற வியாதிகள் குறித்தும் அறிவியல் கண்ணோட்டத்தோடு எழுதியிருப்பதையும் தெளிவு படுத்தி இவ்விரு இதழ்களும் 19ஆம் நூற்றாண்டில் மிகப் பிரம்மாண்ட பத்திரிகைகள் என்றவர், தத்துவவிவேசினியில் எழுதிய ‘இந்தியாவிற்கு என்ன தேவை?’என்ற கட்டுரையைச் சுட்டி அதற்கான தேவை இன்றும் உள்ளதைக் கூறி அமர்ந்தார்.     மார்க்சியம் - பெரியாரியம் என்ற தளத்தில் செயப்படும் ஆய்வாளரான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் உலகம் தழுவிய அளவில் அறிவொளி மரபைப் பற்றிப் பேசினார். வுலீந வுலீவீமெநச ஆங்கில இதழ்த் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இவர் உரை அமைந்திருந்தது. மேற்கத்திய அறிவொளி மரபின் நீட்சியாக தமிழகஅறிவொளி மரபு இருப்பதைக் குறிப்பிட்ட எஸ்.வி.ஆர். அய்ரோப்பியப் பின்புலத்தில் நிலப்பிரபுத்துவம்,

முதலாளியம், மதம், மதகுருமார்கள், அரசு இவர்களுக்கு எதிராக உருப்பெற்ற புத்தொளிமரபானது இங்கு குருமார்கள் தன்மையில் இருக்கிற பார்ப்பனர்களுக்கு எதிராக அமைந்த வரலாற்றை பூலே, அம்பேத்கர், ராம்மோகன்ராய், பெரியாரோடு இணைத்துக் கூறினார். அதேசமயம் பெரியாருக்கு முன்னதாகப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் இத்தொகுதிகள் வரும்வரை நமக்குத் தெரியாமல் இருப்பது பெரும் ‘அவப்பெயர் என்றே நாம் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

அ.வெங்கடாசலனார், ம.மாசிலாமணியார், லட்சுமிநரசு போன்றோர் பெரியார் இயக்கத்துடன் கருத்தளவிலும் செயல் அளவிலும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி, பல்வேறு அறிவொளி மரபு சார்ந்த அறிஞர்களை அவர்களின் தத்துவச் செயல்பாடுகளோடு புரிந்துகொள்ளச் சான்றுகளை இணைத்துக்காட்டினார். அந்த வகையில் மால்தூசியஸ், மார்க்கிஸ் வெபர், பிராட்லா, அன்னிபெசண்ட், சார்லஸ் டார்வின், தாமஸ் பெயின் ஆகியோரின் கருத்துத் தொடர்ச்சி இன்று நம்மிடம் இல்லை என்பதற்கு பூலேவை எடுத்துக்காட்டி அவர் நடைமுறை இய்ககத்தோடு தொடர்பு கொண்டதையும் லௌகிக சங்கத்தவர் கருத்துத் தளத்தில் மட்டும் செயல்பட்டதாகக் கூறி முடித்தார்.

எஸ்.வி.ஆர்யைத் தொடர்ந்து பேசிய வ. கீதா அவர்களின் கருத்து தத்துவவிவேசினி முதல் குடியரசு வரை என்பதாக அமைந்திருந்தது. தத்துவவிவேசினி சுயக்கியானம், விசாரணை, சுயாட்சி, சகோதரத்துவம், அபிமானம், ஒற்றுமை, அய்க்கியம் ஆகிய சொற்கள் பயன்படுத்தியதை எடுத்துக்காட்டி அத்தகைய சொற்கருத்துகளின் பின்புலத்தை விளக்கினார்.

விடுதலை, புரட்சி, சமத்துவம் ஆகிய அறவியல் மற்றும் பிற்பட்ட உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அதற்கான சூழல் அவர்களுக்கு வாய்க்க வில்லை என்றார். அரசியல், பொருளாதாரம் பற்றி காலனிய ஆட்சிக்காலத்தின் அதன் குளைபாடுகளைப் பற்றி பேசியவர்களாக பூலே, அ.வெங்கடாசலனார் ஆகியோரை இணைத்துக்காட்டிப் பேசினார்.

அதேசமயம் வெங்கடாசலனார் வன்னியர் என்பதை இன்றைய சூழலோடு பொருத்திப்பார்ப்பது வரலாற்றுப்பிழையில் முடியும் என்பதையும் பேசியதோடு இவர்களின் பசி, பஞ்சம் பற்றிய பார்வை உழைப்பு பற்றிய இவர்களின் கருத்துநிலை பெண் குறித்தான பார்வை போன்றவற்றை லௌகிக சங்கம் - அயோத்திதாசர் - பெரியார் செயல்பாடுகளோடு ஒப்பிட்டார்.

பெண்ணுரிமை பற்றிய விசயமே வரலாற்று ரீதியாக மற்ற எல்லா இடங்களில் இருந்தும் இவர்களை வேறுபடுத்துகிறது என்பர். இதில் இருக்கிற செய்திகளை எல்லாம் ஆராய்ந்து பதிவு செய்வோமானால் இந்தியாவினுடைய வரலாற்றை வேறுமாதிரி யாக எழுதவேண்டியிருக்கும் என்று கூறி முடித்துக்கொண்டார்.

ஆய்வாளர் ரவிக்குமார் இலௌகிக சங்கத்தாரின் பார்ப்பன எதிர்ப்பும் சாதி எதிர்ப்பும் என்ற தலைப்பில் குறிப்பாக ஆய்வு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எந்தப் பின்புலத்தில் இதில் அடங்கியுள்ள செய்திகளைப் பார்க்க வேண்டும் என்பதாகத் தம் தலைப்பை அமைத்துக்கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பத்திரிகை வந்த காலத்தில் இருந்த இந்து, சுதேசிமித்திரன், பறையன் முதலான பத்திரிகைகளின் செய்திப் பின்புலத்தைப் பகிர்ந்துகொண்ட ரவிக்குமார் - சாதி பற்றிய கட்டுரைகள் இதில் குறைவாக இருப்பதையும் - தீண்டாமை, தீண்டாதார் பற்றிய செய்திகள் இடம்பெறாத சூழலையும் சுட்டிக்காட்டினார்.

18,19 ஆம் நூற்றாண்டுகளில் புலப்பெயர்வு தாழ்த்தப்பட்டோர் மத்தியில் நடைபெற்றதையும் அதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் இதன் போதாமையையும் - தாசிகள் பற்றிய இவர்கள் பொதுப் புத்தியிலான பார்வைகளையும் அதுவே திராவிட இயக்கப்பார்வையிலிருந்து இவர்கள் வேறுபடுவதையும் சுட்டிக்காட்டிய ரவிக்குமார் தற்போது வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதையும் வரலாற்று ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக் கிறார்களா? என்ற அதிருப்தியையும் தெரிவித்துக்கொண்டார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ச்சிந்தனை மரபில் ம.மாசிலாமணியார் என்ற தலைப்பின்கீழ் கட்டுரை வழங்கிய ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ்ச் சமூகத்தின் இன்று ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு 18,19ஆம் நூற்றாண்டுகள் ஆராயப்படவேண்டிய வைகளாக உள்ளன என்றும், சில விளங்கமுடியாத விடயங்களுக்கு வாசல்களைத் திறந்துவிட்டிருப்பதாகவும் கூறினார். அந்த வகையில் இத்தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார்.

அன்றைய பத்திரிகைகள் அரசியல் செயல்பாடாகப் பார்க்கப் பட்டமை - பிரம்மஞான சபை பற்றி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு தத்துவவிவேசினியில் எதிர்மறையாக வந்தமை முதலியவற்றோடு வருணம் பற்றியும் சாதி பற்றியும் மாசிலாமணியாருக்குப் போதிய புரிதல் அன்றைய கால அளவில் இருக்கவில்லை என்றும் - இவர்கள் எல்லோருமே அய்ரோப்பியச் சட்டகத்திலிருந்து வருணம் என்பதைப் பார்த்தார்களே ஒழிய வட்டாரத் தன்மைகொண்ட சாதியமைப்பை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று விளக்கினார்.

இவை பார்ப்பன வேளாளர் அல்லாத அடிநிலைச் சாதிகளில் நடத்தப்பட்டவை என்ற சிந்தனையில் இருந்து விலகாமல் வருண எதிர்ப்பும் சாதி எதிர்ப்பும் ஒன்றா? வேறுவேறா? என்ற கேள்வியையும் எழுப்பி னார். ஐ.சி.எஸ். தேர்வை பிராட்லா இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறிய சமயத்தில் எழுந்த கோரிக்கையை ஏன் இவர்கள் பதிவுசெய்யவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

சாதி என்பது வழக்கத்தில் தான் பொருள்படுகிறது என்றும் - நம்முடைய மரபு, அம்சங்கள் முதலியவற்றை இவர்கள் அறியாமல் போனது - போன்ற விவாதப் புள்ளிகளை முன்வைத்த ஸ்டாலின் ராஜாங்கம் இறுதியாக மாசிலாமணியார் தீண்டாதார் சூத்திரர்கள் என்ற வேறுபாட்டுடனே சூத்திரர்களை நோக்கியே அவரின் கருத்துப்பிரச்சாரம் அமைந்திருந்ததையும் எடுத்துக்காட் டினார்.

அயோத்திதாசர் சிந்தனைகளைத் தொகுத்தளித்தவரான ஞான அலாஸ்சிஸ் ‘அகில இந்திய சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கத்தைப் பற்றி கருத்துரை வழங்கினார். இதற்குமுன் பேசிய ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகி யோரின் கருத்துகளை ஆமோதிப்பதாகவும் அதன் நீட்சியாகவும் இவரின் கருத்துகள் அமைந்தன. மேற்கண்ட இரு இதழ்களையும் எவ்வாறு மதிப்பிடுவது? என்ற கேள்வியோடு தொடங்கிய ஆய்வாளர் பெரியார் - குடியரசு, அயோத்திதாசர் - தமிழன் போன்று இவ்விதழுக்கு முழுப்பொறுப்பு தனிநபராக இல்லாமல்; இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ‘பெரியாருக்கு முன் என்ற அடையோடு இவர்கள் சொல்லப்பட்டாலும் பெரியாருக்கு சாதி தான் பிரதானம். இவர்களுக்கு அப்படியில்லை.

இதுவே பெரியாரிடமிருந்து இவர்களை வேறுபடுத்துகிறது என்றார். ஆற்றுப் படுகைகளில் நிலவிய சமூக அமைப்பை இந்தியா முழுமைக்குமான சமூக அமைப்பான பிரித்தானியர்கள் பார்த்து அவ்வாறே ஆக்கினார்கள் என்றும், பல்வேறு சாதி மத்தியப் படுத்தப்பட்டபோது சுதேசியம் இங்கு உருவானது போன்ற வற்றை அதன் பின்புலங்களுடன் விளக்கினார் .

மேலும் இவர்கள் தங்களை அழைத்துக்கொள்ளும் சுயக்கியானிகள் என்பதினூடே சுதேசியம் ஒட்டிக்கொண்டே வருகிறது என்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றார். தத்துவவிவேசினியில் சாதிபற்றிய கட்டுரைகள் குறைவாக இருக்கும் அதே சமயம் கிறித்தவ எதிர்ப்பு என்பது இதன் முழுமையும் காணப்படுவதைச் சுட்டிக்காட்டி தத்துவவிவேசினி மீதான அய்யப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இதே பழமைவாதம் நோக்கிச் செல்கிறது என்றால் இவ்விதழ் பழமைவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது. எனவே அவற்றை முழுமையாக தள்ளிவிடவும் முடியாது என்று அதன்பின் பேசிய விடுதலை ராஜேந்திரன் குறிப்பிட்டதையும் இங்கு நினைவுகூறலாம்.

இலௌகிக சங்கம், தத்துவவிவேசினி பற்றி தமிழவன் பேசுகையில் மேற்கண்ட இரு இதழ்களையும் ‘பின்காலனியம் என்ற துறையின் கீழ் ஆராயப்படவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுகளை மேற் கொண்டால் உலகின் பல்வேறு பகுதிகள் சார்ந்த ஆய்வாளர்களின் பார்வை சென்னையின் பக்கம் திரும்பும் என்று குறிப்பிட்டவர் பின்னும், இதுவரை கல்கத்தாதான் அவ்விடத்தில் வைத்துப் பார்க்ப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். பெரியாரைப் புரிந்துகொள்ள திராவிட இயக்கங்கள் இதனை முன்னமே கொண்டுவந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு முடித்தார்.

தமிழவனைத் தொடர்ந்து பேசிய சுந்தர்காளி தத்துவவிவேசினி மேற்கொண்ட தொன்மை வாசிப்பை சில எடுத்துக்காட்டுகளுடன் ‘பிரதிவாசிப்புச் செய்து தெளிவுபடுத்தினார். மானுடவியலாளர்கள் போன்று நேரடிக் களஆய்வு முறையிலும், அமைப்பியலாளர் போன்று புராணத்தொன்மத்தை எடுத்துக்கொண்டு அதைக் கட்டுடைத்திருக்கிறார்கள் என்றார். இதழின் செய்திகள் பாதிக்கு மேற்பட்டவை தர்க்க முறையில் இருப்பதனையும் புராணவாசிப் பில் பெரியாருக்கும் இவர்களுக்குமான ஒற்றுமை - பின்னாளில் திராவிட இயக்கத்தவர்களால் மறுபிரதியாக்கம் செய்யப்பட்ட ‘இரணியன் போன்ற தொன்மங்களை இவர்கள் முன்பே செய்திருப்பது - மாற்றுச்சொல்லாடல் - மாற்று விளக்கம் தருதல் முதலியவற்றை இவர்களின் தன்மைகளாக விளக்கினார்.

இவ்விருநாள் கருத்தரங்கில் பல்வேறு கோணங்களில் பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முழுமையானவையும் முடிந்த முடியும் அல்ல. இதனை வரலாற்றின் பார்வையோடு அணுகி வேறுகட்டத்திற்கு எடுத்துச்செல்வது நமது கடமை யாகும்.

(கருத்தரங்க நிகழ்வைப் பதிவு செய்தவர் ஆய்வாளர் ர.குமார். தமிழ் இலக்கியத் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It