மீனவர் சிக்கல் தொடர்பாக மீண்டும் ஒரு திறமையான நாடகத்தை தில்லி தமிழக அரசுகள் அரங்கேற்றி யுள்ளன.

தமிழக மீனவர்கள் தாக்கப்படு வதான சம்பவம், இதற்கு முன் எப் போதுமே நடைபெறாதது, தற்போது தான் புதிதாக நடைபெறுவது போல, சமீபத்தில் செயக்குமார், பாண்டியன் இருவரும் சிங்களக் கப்பற்படையால் படுகொலை செய்யப் பட்டதற்கு ஒரு மறிவினை புரிவதுபோல் காட்டிக் கொண்டிருக்கிறது.

1974இல் கச்சத் தீவை தாரை வார்த்தது முதல் இதுவரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பற் படையால் கொல்லப்பட்டிருப் பார்கள். இப்படுகொலைகளின் போதெல்லாம் சிங்கள அரசைக் கண் டித்து தில்லி அரசிடமிருந்து ஒரு அறிக்கை இல்லை. சிங்கள அரசுக்கு ஓர் எச்சரிக்கை இல்லை. இனியும் இப்படி ஏதும் நடந்தால் உறவுகள் பாதிக்கப்படும் என்று ஓர் அச்சுறுத்தல் இல்லை. சம்பந்தப்பட்ட கடற்படை யின் மீது நடவடிக்கை கோரவில்லை.

இப்போதும்கூட இம்மாதிரி நடவடிக்கைகள் எதையும் தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. மாறாகவெளி யுறவுத் துறைச் செயலர் நிருபமா கொழும்பு போனாராம். ராஜபக் சேவைச் சந்தித்தாராம். இதுபற்றிப் பேசினாராம். திரும்பி வருகையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறாராம். இந் நடவடிக்கைகள் கருணாநிதிக்கு திருப்தி அளிக்கிறதாம்.

சரி,இதுவரைநடந்த படுகொலை களுக்கு என்ன பதில்? இதுவரை நடந்தது ஒருபுறம் இருக்கட்டும். இனி யாவது இதுபோன்று எதுவும் நடக்காது என்று சிங்கள அரசிடமிருந்து எதாவது உத்திரவாதம் உண்டா. அதுபற்றி ஏதும் தெளிவான திட்டவட்டமான அறிக்கை உண்டா.

எதுவுமில்லாமல், வேறு எது தில்லி, தமிழக அரசுக்குத் திருப்தி அளிக் கிறது. ஒருவேளை, தேர்தல் முடியும் வரைக்குமாவது யாரையும் கொல்லா மலிருக்கும்படி நிருபமா கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்து, ராஜபக்சே பார்ப்போம் என்று சொல்ல அது இவர்களுக்குத் திருப்தியளித்திருக்குமா?

இலங்கை அரசை பாகிஸ்தான் சீனா பக்கம் சாராமல் தன்னோடு இணக்கமாக வைத்துக்கொள்ள எதை யும் இழப்பது, எதையும் விட்டுக் கொடுப்பது என்னும் தில்லி அரசின் கொள்கை, உள்நாட்டுத் தேர்தல் வெற் றிக்குக் கூட இலங்கை அரசின் கரு ணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கி அதன் வெளிப்பாடாகவும் இந்த நாடகம்அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.

இடையில் ஒரு சம்பவம். அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகர் திரிவேலி பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சிலர், சட்டப்பூர்வ அனு மதியின்றி போலி விசாவில் தங்கிப் படித்து வருகிறார்கள் என்பதற்காக அவர்களது நடவடிக்கைகளை கண் காணிக்கும் பொருட்டு, அவர்களது கால்களில் மின்னணு கண்காணிப்புக் கருவிகளை நிரந்தரமாகப் பொருத்தி யிருக்கிறது அமெரிக்க காவல்துறை.

இந்த மனித உரிமை மீறலை, இழிவு படுத்தலை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கண்டித்திருக்கிறார். அக்கருவிகளை மாணவர்களின் கால்களிலிருந்து அப் புறப்படுத்த வேண்டும் என்று கோரி யிருக்கிறார்.

அமெரிக்காவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது, கிருஷ்ணாவின் கோரிக்கை நியாயமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் இந்த மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் கிருஷ்ணா தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப் பட்டபோதும் கொல்லப்படும்போதும் எங்கே போயிருந்தார்? இந்திய வெளியுறவுத் துறைக்கு ஓர் அமைச்சர் இருக்கிறார் என்பதெல்லாம் அப்போது தெரியக்கூட இல்லையே?

சரி, போகட்டும். இனியாவது தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பற் படையால் தாக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு, தாக்கப்பட்டால் என்ன நடவடிக்கை என்பதற்கு ஏதாவது உறுதிப்பாடு உண்டா. எதுவுமில்லை. ஆக அப்போதைக்கப்போது எதாவது சமாதானம் செய்துவிட்டு, இலங்கையை செல்லப்பிள்ளை மனோபாவத்தோடு கொஞ்சியே அதன் அட்டூழியங்களைச் சகித்துக் கொண்டிருப்பது என்பதே இலங்கை விஷயத்தில் இந்திய அரசின் கொள்கையாக இருந்துவருகிறது.

இல்லாவிட்டால் ராஜீவ்காந்தியைத் தாக்கிய கடற்படை சிப்பாய் மீதே எந்த நடவடிக்கையும் இல்லாமல் போக விட்டிருப்பார்களா? நாட்டின் பிரதமரையே ‘நல்லுறவுக்கு’ பலி கொடுக்கத் தயக்கம் காட்டாத ஆதிக்க சக்திகள் சாதாரண மீனவர்கள் உயிரின் மீதா அக்கறை காட்டப் போகிறது? அப்படி அக்கறையற்ற போக்கின் வெளிப்பாடுகள்தான் கடந்த கால நிகழ்வுகள். இதை மறக்க நடத்தும் தேர்தல் கால நாடகம்தான் இக்கால நிகழ்வுகள்.

இந்நிலையில் நாம் கோருவது,

1. இலங்கை சார்ந்து தோல்வி யுற்ற தன் அயலுறவுக் கொள்கையை இந்திய அரசு மறு பரிசீலனை செய்து தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான உயிர் வாழும் உரிமை பிரிவு 21ன் படி இந்திய அரசு தமிழக மீனவர்களது உயிருக்கு முழுப் பொறுப்பும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.

3. தமிழக மக்களின் வரிப் பணத்திலும் ஊதியம் பெறும் கப்பற்படை, கடலோரக் காவல்படை, கடல் பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து வந்து தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும். இதற்குத் தில்லி, தமிழக அரசுகள் உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

தேவை துப்பாக்கி அல்ல! பாதுகாப்பே!!

தமிழக மீனவர் பிரச்சினையில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ள சிலர் உணர்ச்சி மேலோங்கி நிலையில் தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும். தற்காப்புப் பயிற்சி அளிக்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். கேட்பதற்கு இது சுவாரஸ்யமானதாகவும், பொதுக் கூட்ட உரைகளைக் கேட்டு கைதட்டி மகிழ்வதைப் போல ஆஹா என்று பரவசப்பட்டு வரவேற்கத்தக்கது போலவும் தோன்றலாம்.

ஆனால் நடைமுறையில் இது எந்த அளவு சாத்தியப்படும் என்று யோசிக்கவேண்டும்.

1. பயிற்சி பெற்ற, இதையே முழு நேரப் பணியாகக் கொண்ட, தொழில்முறை சிங்களக் கப்பற்படை, படையாட்களுடன் பயிற்சியற்ற மீனவர்கள் சண்டையிட முடியுமா. இது அவர்கள் தற்காப்புக்கு உதவுமா என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

2. மீனவர்களின் பணி மீன் பிடிப்புதானே தவிர, இலங்கைக் கப்பற்படையோடு சண்டை போடுவதல்ல. இதற்காக அவர்கள் கடலுக்குப் போகவில்லை. அவர்கள் பிழைப்பும் அது அல்ல என்பதை உணர்ந்து, அவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உதவவேண்டும். இதற்கு இந்திய கப்பற்படையும் கடலோரக் காவல்படையும் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

3. இப்படிப் பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக மீனவர்களுக்கு இலவசமாக தகவல் தொடர்புக் கருவிகளைத் தந்து அவசரத் தேவைக்கு அவர்கள் இந்தியக் கப்பற்படை, கடலோரக் காவல் படைக்குத் தகவல் தர, அவர்கள் உடனடியாக வந்து உதவும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும். அதாவது தரையில் அவசரத் தேவைக்கு 100 உள்ளது போல கடலில் அவசரத் தேவைக்கு ஒரு ஏற்பாடு இருக்கவேண்டும். இதற்கு வசதியாக வங்க, இந்து மாக்கடலில் எப்போதும் கடற்படை, காவல்படை கண்காணிப்பு செய்ய வேண்டும்.

4. தமிழக மீனவர்கள் தமிழக எல்லை தாண்டி, சிங்கள கடற்பகுதிக்குள் வருவதாக சிங்களக் கப்பற்படை கருதினால் அவர்களைக் கைது செய்து சம்மந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்கவேண்டுமே யல்லாது, தாக்கவோ, சுடவோ, மீன்கள், வலைகளைப் பறிமுதல் செய்வதோ எந்த வகையிலும் நியாயமாகாது. அப்படி நியாயமற்ற நடவடிக்கையில் சிங்களக் கப்பற்படை ஈடுபட்டால் இந்தியக் கப்பற்படை தாக்குதல் தொடுக்கும் என்கிற நிலையை உறுதி செய்யவேண்டும்.

ஆக இப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து அவர்கள் தங்கு தடையின்றி சுதந்திரமாகவும், அச்சமின்றியும் மீன் பிடிக்கச் செய்து அவர்கள் நிம்மதியாக வாழ வழி காண வேண்டுமே யல்லாது, உணர்ச்சி மேலிடலில் மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கு என்று கோரி, மீனவர்களைப் மீன் பிடித் தொழிலைவிட்டு துப்பாக்கி பயில வைத்து, போர்க்களத்தில் நிறுத்தி அவர்கள் வாழ்வைப் பாழாக்கக் கூடாது. அப்படி ஆக்க நினைப்பது மீண்டும் மீனவர்களின் பாதிப்பிற்கே வழி வகுக்கும்.

Pin It