[கடந்த 07. 09 .2010 அன்று சென்னை தொழில் நுட்பப் பயிலகத்தின் (MIT) முதலாமாண்டு மாணவர்கள் நடத்திய இளைஞர்கள் செஞ்சிலுவைச் சங்கத் தொடக்க விழாவின்போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம்.] 

.அன்பார்ந்த பேராசிரியர்களே! மாணவர்களே! வணக்கம்

என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த போது பேசுவதற்கென்று குறிப்பிட்ட தலைப்பு எதையும் எனக்குத் தர வில்லை, சமூக அக்கறையுள்ள எந்தப் பொருள் பற்றியும் நீங்கள் பேசலாம் என்றார்கள்.

எதுபற்றி பேசலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, இப் போது நாம் முதலாண்டு மாணவர்கள் மத்தியில் தொடங்கி வைத்திருக்கும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் வரலாற்றை அறியும் நோக்கில் அது பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.

பொதுவாக செஞ்சிலுவைச் சங்கம் என்பது சிவப்பு சிலுவைக் குறி ஒன்றை மட்டுமே எல்லோர் மனதிலும் பதிவை ஏற்படுத்தி வைத்திருக்க இச்சங்கம் செம்பிறை, செம்பளிங்கு ஆகிய சின்னங்களையும் கொண்டுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் இது தொடர்பான அடையாளங்கள் குறித்த எண் ணமும் எனக்குள் எழுந்தது. இந்த அடிப் படையிலேயே இன்றைய நிகழ்வில் ‘மனித குலமும் அடையாளங்களும்’ என்கிற தலைப்பில் பேசலாமே என்று முடிவு செய்து கொண்டேன்.

மனித குலத்துக்கு, மனிதனுக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. மனிதன் விரும்பியோ, விரும்பாமலோ அவனோடு பல அடையா ளங்கள் நிலவுகின்றன. எல்லாவற்றுள் ளும் முதலாவதாக பிற விலங்கினங்களி லிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற மனிதன் என்கிற அடையாளம். பிறகு அந்த மனிதர்களுக்குள்ளேயே பல அடையாளங்கள்.

காட்டாக நாம் இங்கே நாம் இவ் வளவு பேர் அமர்ந்து கொண்டிருக்கி றோம் எல்லோரும் மனிதர்கள். ஆனால் ஒருவர் போல் ஒருவர் இல்லை. ஒவ் வொருவரும் தோற்றத்தில் அடுத்தவரி லிருந்து பலவகையிலும் மாறுபட்டிருக் கிறோம். குணம், சுவாபம், பழக்க வழக்கங்கள் என்பது அப்புறம் இருக் கட்டும். புறத்தோற்றத்திலேயே ஒவ் வொருவரும் அடுத்தவரிடமிருந்து பல வகையிலும் மாறுபட்டிருக்கிறோம். அல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி யாக, ஒரே தோற்றத்தோடு இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்போது என்ன ஆகும். வாழ்க்கையே குழப்ப மாக ஆகிவிடும். உறவுகள் யார், நண்பர் கள் யார், பழகியவர்கள் யார், புதியவர் கள் யார் என்று எதுவுமே புரியாத குழப்பமாக ஆகிவிடும்.

ஒன்றுமில்லை, ஒரு திரைப்படத்தில் ஒரு நாயகனைப் போலவே இன்னொரு வரும் இருந்தால் அந்த ஒரே ஒரு நபரா லேயே எத்தனை குழப்பங்கள் என் பதை நாம் அறிவோம். இப்படி அல்லா மல், பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரே தோற்ற அமைப்போடு, வாழும் மனிதர்களெல்லாம் ஒரே தோற்றத் தோடு இருந்தால் என்ன ஆகும் என் பதை யோசிக்க இந்தச் சிக்கலை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் குழப்பம் ஏற்படாமல் இருக்க இயற்கை நமக்கு, நமக்கு என் றால் நமக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள், புழுப் பூச்சிகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் வழங்கி யுள்ள கொடைதான் இந்த தோற்ற அடையாளம்.

இந்த தோற்ற அடையாளத்தை அடுத்து நமக்கு அமைவது நமது இருப் பிட அடையாளம். நாம் அனைவரும் இந்தப் புவிக்கோளில் ஏதோ ஒரு இடத் தில் வசிக்கிறோம். இந்த வாழியிடம் இருப்பிடத்தை வைத்து நமக்கு அமை வது முகவரி அடையாளம். இந்த முகவரி அடையாளத்தை வைத்தே நண்பர்கள், உறவினர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள் அஞ்சல்கள் வருகின்றன, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் முதலானவை வழங்கப் படுகின்றன.

முகவரிக்கு அடுத்து சாதி அடை யாளம். நாம் விரும்பியோ விரும்பா மலோ, நாம் ஒரு சாதியில் பிறக்கிறோம் அல்லது பிறக்க வைக்கப்படுகிறோம். இந்த சாதி நாம் பிறப்பதற்கு முன்பே கருவிலேயே பெற்றோர்களின் வழி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சாதி அடையாளம் இருக்கிறது.

இதே போலவே மத அடையாளம், ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வழி படும் இறைவனை வைத்து மதத்தால் அடையாளப்படுத்தப்படுகிறான். இந்து, இசுலாமியர் கிறித்துவர், சீக்கியர், பௌத்தர், சமணர் என அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

அடுத்து மொழி அடையாளம், இப் போது நாம் இங்கே இவ்வளவு பேர் திரண்டிருக்கிற«£ம். நாம் எல்லோரும் ஏதோ ஒரு மொழியைப் பேசுகிறோம். பெரும்பாலான மாணவர்கள் தமிழர் கள். அதனால் தமிழில் பேசுகிறோம் இங்கு பிற மாநில மாணவர்களும் குறிப்பிட்ட விழுக்காட்டினர் இருக்க லாம். அவரவர்களும் அவரவர் தாய் மொழியைப் பேசலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு மொழி யைப் பேசுகிறோம், இந்த மொழி அடையாளம் இல்லாமல் மனிதன் வாழ முடியாது.

இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் பல அடையாளங்கள் உண்டு. ஆனால் இந்த அடையாளங்கள் அனைத்துமே அதாவது எல்லா அடையாளங்களுமே மனிதனுக்கு அவசியமானவை அல்ல. சில அவசியமானவை சில அவசிய மற்றவை. சில தவிர்க்கக் கூடியவை, சில தவிர்க்க இயலாதவை, சில மனித குல வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்குப் பயன் படுபவை, சில அவற்றுக்கு முட்டுக் கட்டை போடுபவை.

எனவே இவற்றுள் தேவையற்ற, தவிர்க்கக்கூடிய, நமது முன்னேற்ற துக்குத் தடையாய் உள்ள அடையாளங் களை அழிப்பதும், தேவைப்படுகிற, தவிர்க்க இயலாத, முன்னேற்றத் துக்கு பயன் தருகிற அடையாளங்களைப் பாதுகாப்பதுமே நமது ஒவ்வொரு வரது கடமையும் ஆகும்.

இந்த அடிப்படையில் நமக்கு இருக்கும் அடையாளங்கள் ஒவ்வொன் றைப் பற்றியும் சிறிது ஆராய்வோம்.

முதலில் தோற்ற அடையாளம், இவை தேவையானவை, தவிர்க்க இயலாதவை, எனவே பாதுகாக்கத் தக்கவை. இவ்வாறே முகவரி அடை யாளம். தேவையானவை தவிர்க்க இய லாதவை, பாதுகாக்கத்தக்கவை. ஆனால் மத அடையாளம் தேவையற்றவை, தவிர்க்க கூடியவை, மனிதனுக்குள் பாகு பாட்டையும் பகைமையும் ஊட்டு பவை, மனித குல வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் இருப்பவை. எனவே அழிக்கத் தக்கவை. தற்போதும் ஒரு சிறு பிரிவினர் மத அடையாளங்கள் அற்ற வர்களாக வாழ்ந்து வருகிறார்கள். விரும்பினால் அவர்களைப்போலவே நாமும் வாழலாம்.

இதேபோன்றே சாதி அடையாள மும். தேவையற்றவை, தவிர்க்கக் கூடியவை, மனிதனுக்குள் பாகுபாட் டையும், ஏற்றத் தாழ்வையும் கற்பிப் பவை மனித குல முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பவை. எனவே அழிக்கத்தக்கவை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சாதியில் சமத்துவம் இல்லை, சன நாயகம் இல்லை, சுதந்திரம் இல்லை, இது எல்லா வகையிலும் மனிதனைப் பிளவுபடுத்துகிறது. மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கிறது. பகைமை யைத் தூண்டுகிறது.

இது தோற்ற அடையாளம் போல, முகவரி அடையாளம் போல், வெறு மனே ஒரு அடையாளமாக இருந்து விட்டுப் போனால் பரவாயில்லை. ஆனால் சாதிகளுள் சில மேம்பட் டவை சில கீழ்ப்பட்டவை சில தீண்டத்தகாதவை என சாதிகளில் படி நிலை ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுகிறது. படிநிலை ஆதிக்கமும் படிநிலை அடி மைத்தனமும் கடைப்பிடிக்கப்படு கிறது. இதனால் சாதிகளுக்குள்ளே சமத்துவம் இருப்பதில்லை.

அதோடு இந்த சாதியை நீங்கள் உங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுத் துக்கொள்ளவும் முடியாது அதாவது எங்கள் பாட்டன் முப்பாட்டன் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறை யெல்லாம் முதலியாராக இருந்தார்கள், நானும் முதலியாராக இருப்பது எனக்கு அலுப்பூட்டுகிறது. ஆகவே கொஞ்ச காலம் படையாச்சியாக வாழ்ந்து பார்க் கிறேன் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது. நீங்கள் மதத்தைக் கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சாதியை மாற்றிக் கொள்ளமுடியாது. ஒரே தெய்வத்தை வழிபடும் ஒரே மதத் திற்குள்ளேயே பல சாதிகள். இதனால் தான் சாதி சனநாயகமற்றதாக சர்வாதி காரம் மிக்கதாக இருக்கிறது. எனவே தான் சாதி அடையாளம் அழிக்கப்பட வேண்டிய அடையாளம் என்கிறோம்.

அடுத்தது மொழி அடையாளம். இது தேவையானது, தவிர்க்க இயலா தது, பாதுகாக்கத்தக்கது. தமிழகத் திலேயே தாய் மண்ணிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த அடை யாளத்தின் சிறப்பு நமக்குத் தெரியாம லிருக்கலாம். உணரப்படாது போக லாம். ஆனால் நம் வேற்று மொழி பேசும் அண்டை மாநிலங்களுக்கு, அண்டை நாடுகளுக்குச் செல்லும் போது வேற்று மொழியே நம் காது களில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது எங்காவது யாராவது தமிழ் மொழி பேசுவதைக் கேட்க நேர்ந்தால் அப்போது உணரப்படும் இந்த அடை யாளத்தின் மகிமை. இந்த அடிப்படை யில் இந்த மொழி அடையாளம் பாது காக்கத்தக்கது.

இப்படி மனித குலத்தைப் பற்றிப் படர்ந்திருக்கும் இந்த அடையாளம் சார்ந்து எழுந்ததுதான் சேவை நோக்கில் தொடங்கப்பட்ட செஞ்சிலுவை அமைப்பில் இந்த சிலுவை அடை யாளத்துடன் செம்பிறை செம்பளிங்கு அடையாளங்கள்.

இங்கு நாம் தொடங்கியிருக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் என்பது, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்கிற தாய்க் கழகத்தின் ஓர் அங்க மாகும். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் என்பது உலக செஞ்சிலுவைச் சங்கத் தின் ஓர் அங்கமாகும்.

இந்த செஞ்சிலுவைச் சங்கம் தோற்று விக்கப்பட்டதற்கு ஓர் வரலாறு உண்டு.

பத்தொன்பதாம் நு£ற்றாண்டின் நடுப்பகுதியில் இத்தாலிய ஒருங்கி ணைப்புக்கான போர் நடந்து கொண் டிருந்த போது 1859 ஜுன் 24 அன்று ஸ்விஸ் நாட்டைச் சார்ந்த ஹென்றி டுனான்ட் என்பார் சால் ஃபெரினோ நகருக்குப் பயணமாகச் சென்றிருந்தார். அப்போது போர்க்களத்தில் 45,000-க்கும் மேற்பட்ட படையாள்கள் இறந்தோ, காயம் பட்டோ, கைவிடப் பட்டோ கிடந்து வதையும் காட்சி களைக் கண்டு மனம் பொருமினார்.

தனது தாய் நகரமான ஜெனிவா திரும்பிய பின் அப்போர்க்கள அவலங் களைச் சித்தரித்து சால்ஃபெரினோவின் நினைவுகள் என்கிற ஒரு நூலை எழுதி 1862 இல் அதை வெளியிட்டு, அதில் முக்கியமான இரண்டு கருத்துகளையும் குறிப்பிட்டிருந்தார்.

1. போர்க்களத்தில் ஏற்படும் கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் நிவாரணம் அளிக்க, தன்னார்வத் தொண்டர் குழுக்களை உருவாக்கி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

2. போர்க்களத்தில் காயம் பட்ட வர்களையும் அவர்களுக்குத் முதலுதவி செய்யும் தன்னார்வத் தொண்டர் களையும் பாதுகாக்க அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும்.

இதன் விளைவாக அதே ஆண்டில் முதல் கோரிக்கையின் அடிப்படையில் 183 நாடுகளில் தேசியச் சங்கங்கள் என்னும் சேவை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இரண்டாவது கோரிக்கையின் அடிப் படையில் 192 நாடுகள் கையப்ப மிட்ட ஜெனிவா மாநாடு நடை பெற்றது.

இதற்கு அடுத்த ஆண்டே 1863 பிப்ரவரி 7இல் ஹென்ரி டுனான்ட்டின் கருத்துகளை ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப் பட்டது. இக்குழுவில்தான் போர்க் காலத்தில் போர்க்களத்தில் பணியாற்ற சேவை மற்றும் மருத்துவ உதவிக்காக சட்ட அங்கிகாரம் கொண்ட தனித் தொண்டர் குழாத்தை தனித்த அடை யாளத்தோடு உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இத்தொண்டர் குழாத்துக்கு, எளி மையானதும் தூரத்தில் இருந்தே இலகு வில் அடையாளம் காணக் கூடியதும் எல்லோராலும் ஏற்கக் கூடியதும் உலக ளாவியதாகவும் உள்ள வகையில் ஓர் இலச்சினையை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 1863 அக் டோபர் 26இல் 14 நாடுகள் பங்கேற்க நடைபெற்ற கூட்டத்தில் உருவாக்கப் பட்டதுதான் தற்போது பயன்பாட்டில் உள்ள செஞ்சிலுவைச் சின்னம். வெள்ளைப் பின்னணியோடு துலங்கும் சிகப்பு சிலுவைக் குறி.

இந்த 1863 மாநாட்டில் அடிப் படையில் 1864 இல் பல்வேறு நாடுகள் ஒன்று கூட, அக்கூட்டத்தில் இச் செஞ்சிலுவை இலச்சினை எளிமை யாகவும், தெளிவாகவும் பளிச்சென்றும் இருப்பதாக அனைத்து நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்கப்பட்ட துடன் சங்கத்திற்கான விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் உருவாக்கப் பட்டன.

இதற்குப் பத்தாண்டுகள் கழித்து 1876 -78இல் துருக்கி ருஷ்யா போர் வெடித்தது. துருக்கியின் ஆட்டோ மான் அரசு போர்க் காலச் சேவைக்காக செஞ்சிலுவைக்குப் பதிலாக செம்பிறை இலச்சினையைப் பயன்படுத்தப் போவ தாக அறிவித்தது. செஞ்சிலுவை இலச் சினையை நாங்கள் மதிக்கும் அதே வேளை, அது இசுலாமியப் போர் வீரர்கள் மத்தியில் எதிர்ப்புக்குரிய இலச்சினையாக இருப்பதால் அதற்கு மாற்றாகவே இந்த ஏற்பாடு எனவும் அது தெரிவித்துது.

இந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கிறித்துவர் களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட போரையும், இப்போருக்கு கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர் - புனிதப் போர் எனப் பெயரிட்ட தையும் நினைவுகூர இசுலாமியர்கள் ஏன் இந்த சிலுவைச் சின்னத்தை ஏற்பதில்லை என்பதைப் புரிந்து செய்ய முடியும்.

இது இப்படியே சில காலம் நீடிக்க 1914-18 முதல் உலகப் போர் முடிந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1929 இல், பல்வேறு அரசுகள் ஒன்று கூடி ஜெனிவா மாநாட்டின் முடிவுகளை ஆய்வு செய்தது அப்போது துருக்கி பாரசிகம் எகிப்து ஆகிய நாடுகள் செஞ்சிலுவையுடன் செம்பிறை, செஞ் சிங்கம், செஞ்சூரியன் ஆகிய இலச் சினைகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அந்நாடுகளின் கோரிக்கையை ஏற்று இம் மூன்று நாடுகளும் இந்த மூன்று இலச்சினையும் பயன்படுத்த அனும திப்பது என்றும் அதே வேளை நாட் டுக்கு நாடு இப்படி கோரிக்கைகள் வைத்து இலச்சினைகளின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டு போகாத வண் ணம் இந்த மூன்றோடு மட்டும் வைத்து இதைக் கட்டுப்படுத்திக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த அடிப்படையில் தற்போது 151 நாடுகள் செஞ்சிலுவைச் சின்னத்தையும் 32 நாடுகள் செம்பிறை சின்னத்தையும் பயன்படுத்தி வருகின்றன .

இதன்பின் இரண்டாவது உலகப் போர் முடிவுற்ற தருணத்தில் இதற்குப் பிறகான நிலைமைகளை ஆராய 1949இல் உலக நாடுகள் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில் மூன்று கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன.

1. உலக நாடுகள் அனைத்திற்கும் எல்லா நாடுகளும் ஏற்கும் ஒரே புதிய சின்னம் இருக்க வேண்டும் என்று நெதர்லாண்ட் கோரியது.

2. புதிய சின்னம் எதுவும் வேண்டாம் பழைய செஞ்சிலுவைச் சின்னத்தையே வைத்துக் கொள்ளலாம் என்று சில நாடுகள் வலியுறுத்தின.

3. நிலவும் சின்னங்களுடன் தாவீதின் போர்க் கேடயம் சின்னத்தையும், அது தங்கள் நாட்டுப் போர் வீரர்களின் ராணுவ மற்றும் மருத்துவச் சின்னமாக இருப்பதால் அதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரியது.

எனில், இந்த மூன்று கோரிக்கை களுமே நிராகரிக்கப்பட்டன. ஏற் கெனவே உள்ள செஞ்சிலுவை, செம் பிறை, செஞ்சிங்கம் மற்றும் செஞ் சூரியன் ஆகியன மட்டுமே நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 1980இல் துருக்கி, பாரசிகம், எகிப்து, ஆகிய நாடுகள் தாங் கள் செஞ்சிங்கம், செஞ்சூரியன் ஆகிய சின் னங்களைப் பயன்படுத்து வதைக் கைவிட்டு செம்பிறைச் சின்னத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறி வித்தது. கூடவே எப்போது வேண்டு மானாலும் தாங்கள் மீண்டும் பழைய சின்னத்துக்கே திரும்பும் உரிமையை யும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரியது.

இப்படி 1949 முதல் இலச்சினை தொடர்பான இந்த சர்ச்சைகள் தொடர 1992இல் பல்வேறு நாடுகளும் செஞ் சிலுவை மற்றும் செம்பிறை சின்னத் துடன் தங்கள் தங்கள் நாடுகளின் தேசிய சின்னங்களையும் பயன் படுத்திக் கொள்ள அனுமதி கோரின இதையெட்டி இந்த செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சின்னங்களுக்கு அப்பால் தேசியம், அரசியல்,மதம் சாராத ஒரு பொதுவான சின்னத்தை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்கிற கருத்தை அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கத்தின் தலைவர் வலி யுறுத்தினார்.

இதன் பின் 1999இல் இப்படி ஒரு பொதுவான புதிய சின்னத்தை உருவாக்க International Committee of the Red Cross பரிந்துரைத்தது, இதனடிப் படையில் செம்பளிங்கு Red Crystal என்னும் பொதுவான புதிய சின்னம் தோற்றுவிக்கப்பட்டு 2005இல் திசம் பரில் ஜெனிவாவில் கூடிய உலக நாடு களின் சிறப்பு மாநாடு இதற்கு ஒப்பு தலும் அளித்தது. அன்று முதல் உலக நாடுகள் செஞ்சிலுவை அல்லது செம் பிறை சின்னங்களையோ அல்லது இவ்விரு சின்னங்களையும் தவிர்த்து செம்பளிங்கு சின்னத்தை மட்டும் தனித்தோ அல்லது அவ்விரு சின் னங்களுடன் சேர்த்தோ பயன்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட செஞ் சிலுவைச் சங்கத்தின் இலச்சினை குறித்த சிக்கல் ஒருவாறு முடிவுக்கு வந்தது.

ஆக செஞ்சிலுவை அமைப்பின் உலகு தழுவிய பொதுச் சேவையும், அதன் நோக்கமும் ஒன்றாக இருந்த போதிலும், அதை எந்த சின்னத்தின் பேரால் செயலாக்குவது என்பதில் அந்தந்த நாடுகளின் தேசிய அடை யாளம், மத அடையாளம் சார்ந்து வெவ்வேறு கருத்தாக்கங்கள் நிலவு கின்றன என்பது வெளிப்படை. இது அந்தந்த மக்களும் அவரவர் அடை யாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளும், முன்னிறுத்தும் இயல்பான விழைவின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பொதுவாகவே எந்த தனி மனி தனோ மனித சமூகமோ தன் அடை யாளம் இழக்கப்படுவதை, தன் அடை யாளம் மறுக்கப்படுவதை ஏற்பதில்லை. அவரவரும், அந்தந்த சமுக மக்களும் தன் அடையாளத்தைப் பாதுகாக்கவும், நிலை நிறுத்தவுமே போராடி வரு கிறார்கள். இதில் எந்த அடையாளமும் உயர்வானது என்றோ, எந்த அடை யாளமும் தாழ்வானது என்றோ கருத இடமில்லை. கருதவும் கூடாது. அடையாளத்தைப் பாதுகாப் பதன் நோக்கமும் அதுவல்ல. மக்கள் எல்லா அடையாளத்தையும் ஏற்று, அங்கீ கரித்து சமத்துவ அடிப்படையில் வாழ வேண்டும் என்பதே இதன் இலக்கு.

இந்த அடிப்படையில் நாம் தொடக் கத்தில் பார்த்த அடையாளங்களுக்கு வருவோம். உலகம் முழுக்க மனி தர்கள் வாழ்ந்தாலும் அவரவரும் அவரது மொழி சார்ந்து தேசிய இனம் சார்ந்தே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். உலகு தழுவி பல மதங்கள் இருக்கலாம், சாதிகள் இருக்கலாம், ஆனால் அதை யும் கடந்த அடையாளமாகவே தேசிய இன அடையாளம் இருக்கிறது.

இந்த வகையில் நமக்கு, தமிழர் களுக்கு உள்ள அடையாளம் தமிழன் என்கிற அடையாளம். இந்த அடை யாளத்தை நாம் உணர்கிறோமா. அதைப் பாதுகாக்கிறோமா, அதற்கான முயற்சிகளையாவது நாம் எடுத்துக் கொள்கிறோமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.

முதலில் நாம் நம்மை தமிழன் என்று சொல்லிக் கொள்கிறோமா என்பது கேள்வி. அப்படியே சொல்லிக் கொள்வ தானாலும் அப்படி சொல்லிக் கொள்வ தற்கான உரிமை இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. இவை குறித்தெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். நம் பள்ளிக் கூடங்களில் சான்றிதழ்களின்படி எல்லா ஆவணங்களிலும் இந்தியன் என்றே போட வேண்டியிருக்கிறது போட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஏன்? இதனால் தமிழன் என்கிற நம் அடை யாளம் மறுக்கப்படவில்லையா?

உலகத்து மக்களுக்கெல்லாம் அவர வர் பேசும் தாய் மொழி சார்ந்து அவர வருக்கும் தாய் நாடு அமைகிறது. பிரஞ்சு மொழி பேசுவேருக்கு பிரான்சு தாய்நாடு, ஜெர்மன் மொழி பேசு வோருக்கு ஜெர்மன் தாய் நாடு, என இப்படியே பலவும் இருக்க தமிழ் மொழி பேசுபவர்களுக்கு மட்டும் இயல்பாக தாய் நாடு தமிழ்நாடாக அமையாமல் இந்தியாவாக அமைந்தது ஏன்? பள்ளிக் கூடங்களில் இந்தியா என் தாய் நாடு எனச் சொல்லிக் கொடுப் பதேன்?

பார்ப்பதற்கு அனைவரும் வெள் ளைக்கார்களே என ஒன்றுபோலத் தோற்றம் தரும் ஐரோப்பியர்களே ஒரு தேசமாக இல்லாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, என வெவ்வேறு தேசங்களாகப் பிரிந்து தனித்து வாழும் போது, மேலோட்ட மான பார்வையிலேயே வெவ்வேறா னவர்களாகத் தோற்றம் தரும் ஒரு தமிழன், ஒரு பஞ்சாபி, ஒரு வங்காளி, ஒரு மலையாளி, ஒரு அஸ்ஸாமி இவர் கள் அனைவரும் ஒரு தேசம் என்பது என்ன நியாயம்?

இதோ இங்கே நாம் தமிழ் நாட்டில் வசிக்கிறோம். இங்கே பேசியவர்கள் அனைவரும் தமிழர்கள். அல்லது தமிழ் தெரிந்தவர்கள். மாணவர்களிலும் ஒரு 10 விழுக்காடு பிற மாநில மாணவர்கள் இருக்கலாம் என்று சொன்னார்கள். அவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் தமிழர்கள். அப்படி இருக்க இந்த அழைப்பிதழை ஆங்கிலத்தில் அடிக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு வாதத்துக்குப் பிற மாணவர்களுக்கும் புரிய வேண்டும் என்றால் தமிழிலும், ஆங்கிலத்திலும் அடித்து நம் அடை யாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது நாமே நம் தாய் மொழியைப் புறக்கணித்து நம் அடை யாளத்தை இழந்து ஆங்கிலத்தில் மட்டும் அடிப்பது என்ன நியாயம்? அப்படி நம்மை நிர்ப்பந்திப்பது எது?

உலகில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பல்வேறு பகுதி மக்களுக் காகவும் நாம் குரல் கொடுத்தோம் போராடினோம். ஆனால் அண்டை யில் ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் சிங்கள இனவெறி அரசால் கொத்து கொத்தாய் கொன்றழிக்கப் பட்டபோது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவ வழியின்றி கையறு நிலையில் குமுறி அழக்கூட உரிமையற்ற வர்களாக வைக்கப்பட்டிருந்தது ஏன்?

ஊர் உலகமெல்லாம் நடைபெற்ற போர்களில், பஞ்சம், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் களில் பாதிக்கப்பட்ட மக்களுக் கெல்லாம் நிவாரணப் பணிகளைத் தங்கு தடையின்றி மேற்கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் தமிழீழத்தில் செத்து மடிந்த, படுகாயமுற்ற பாதிக்கப் பட்ட பல்லாயிரக் கணக்கான மக் களுக்கு எந்த வகையிலும் சுதந்திரமாக உதவ அனுமதி மறுக்கப்பட்டதே உதவிகள் முடக்கப்பட்டதே ஏன்?

இப்படி நம் அடையாளம் சார்ந்து எண்ணற்ற கேள்விகள் நமக்கு எழுகின் றன. எழவேண்டும். இப்படி எழுந்தால் தான் நாம் நம் அடையாளத்தை இழந் தது எப்படி? ஏன்? இதற்கான வரலாற்றுப் பின்னணிகள் என்ன? இவ் வாறெல்லாம் ஆனது எப்படி என்பது பற்றிய சிந்தனை நமக்குத் துளிர்க்கும்.

இவற்றையெல்லாம் இங்கே தெளிவாக விளக்கிக் கொண்டிருக்க நேரம் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. ஆனால் நீங்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். நாம் யார்? நம் அடையாளம் என்ன? நமது மொழி எது? நமது தாய் நாடு எது? என்பது குறித்தெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

 எண்ணற்ற கனவுகளோடும், இளமைத் துடிப்போடும், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்கிற உந்துத லோடும் இங்கே நீங்கள் அமர்ந்திருக் கிறீர்கள். உங்கள் உந்துதலும் துடிப்பும், உங்கள் வாழ்க்கைக்கு ஓர் அர்த்ததைக் கற்பிக்க வேண்டும் உங்கள் கனவுகள் நாளைய வருங்கால சமூகத்தை ஓர் புதிய உலகிற்கு இட்டுச் செல்ல வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் நம் அடையாளங்களை அறிய நீங்கள் விழிப் படைய வேண்டும். அவற்றைப் பாது காக்க, நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டும், நாம் வாழ்வின் ஒரு சிறு பகுதியையேனும் அதற்காக அர்ப் பணிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி முடித்துக் கொள்கிறேன் வணக்கம்

Pin It