தமிழகத்தில் தி.மு.க அதிமுக வுக்கு அப்பாற்பட்டு ஒரு மூன்றாவது அணி, மாற்று அணி என்பது தற்போதைக்கு மாயமான் வேட்டை யாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் 67 இல் காங்கிரஸை வீழ்த்தி திமுக ஆட்சி, அதன்பின் 1977 இல் அதிமுக ஆட்சி எனத் தொடங்கிய திராவிடப் பாரம்பர்ய ஆட்சிகளின் வரலாறு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகமிழைப்பதாகவே இருந்து வருகிறது.

இவற்றுக்கு அப்பால் இவற்றி லிருந்து தனிப்பிரிந்த சில கட்சிகளும் மற்றும்இவற்றோடு நேரடியாக அடை யாளப்படாமல் தனித்துத் தோன்றிய சில கட்சிகளும் இவை அனைத்துமே மேற்குறித்த இவ்விரண்டு கட்சிகளில் ஏதாவதொன்றுடன் கூட்டு வைத்து ஏதோவொரு வகையில் தொடர்ந்து அத்துரோகத்தில் பங்கு வகிப்பதாகவே இருந்து வருகின்றன.

 இப்படி இருக்க இவை அனைத் திற்கும் மாற்றாக புரட்சிகரக் கொள் கைக்காக கோட்பாட்டிற்காக இயங்கு வதாகச் சொலலிக் கொள்ளும் இடது சாரித் தேர்தல் கட்சிகளும் பிற எந்தக் கட்சிக்கும் சளைக்காத அளவுக்கு இந்தக் கூட்டணி அரசியலில் சாகசம் செய்து வருகின்றன்.

 ஆக இக்கட்சிகளின் கடந்த கால வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆராய, இவை அனைத்துமே, வளர்ச்சி யடைந்தபின் தொடக்கத்தில் முன் வைத்த முழக்கங்கள், கோரிக்கைகள், அரசியல் தார்மிக நெறிமுறைகள் சார்ந்த வாக்குறுதிகள் ஆகிய, அனைத் தையும் எப்படி காற்றிலே பறக்கவிட்டு ஆதிக்க சக்திகளோடு சமரசமாகி அவற்றுக்குத் துணைபோய் சுகம் அனு பவித்துக் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வரும்

இப்படி அவ்வபோது புதிது புதி தாகக் கட்சிகள் தோன்றுவதும், அவை வசீகர முழக்கங்களை முன் வப்பதும், பின் வளர்ந்து வலுப் பெற்ற பிறகு, தம் முழங்கங்களுக்கு துரோக மிழைத்து மக்களை வஞ்சிப்பதுமாகவே இருந் தால் இது மக்கள் மத்தியில் அவநம்பிக் கைகளையும் விரக்தியையுமே ஏற்ப டுத்துவதாக ஆகாதா, பொது வாழ்க் கையில் அக்கறையற்ற தன்மையையும் வெறுப்பையும் ஏற்படுத்தாதா என்று கவலையாக இருக்கிறது.

இது இப்படி இருக்க ஏற்கெனவே இருக்கும் கட்சிகள் செய்த துரோகங் கள்,வஞ்சகங்கள் போதாதென்று இவற்றுக்கு மாற்றாக அருள் பாலிக்க வரு வது போல் தற்போது தமிழகத்தில் சில புதிய சக்திகள் தலையெடுத்து வருகின்றன. இவை கடந்தகால அரசியலில் சோர்வுற்ற மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மாயக் களிப்பூட் டும் போதைகளையே நம்பிக்கைகளாக ஊட்டி வருகின்றன.

 திட்ட வட்டமான வரையறுக் கப்பட்ட கொள்கைகளோ, கோட் பாடுகளோ, சனநாயக முறைப்படி கட்டமைக்கப்பட்ட அமைப்போ, அல்லது அப்படி ஒன்றை உரு வாக்க வேண்டும் என்கிற அக்கறையோ இல்லாது, இவை ஊர் ஊராகப் போய் எழுச்சியுரை ஆற்றுவதும், அதற்கு இளைஞர்கள் பெருந்திரளாக வந்து கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மனத்துயரங்களுக்கு இளைப்பாறுதல் பெற்றுச் செல்ல வைபபதுமான போக்கில் ஆத்ம சரீர சுகமளிக்கும் நற்செய்திக் கூட்டங்கள் போல இரட்சிப்புக் கூட்டங்கள் நடத்தி வரு கின்றன.

இளைஞர்களுக்கு எழுச்சியுரை தேவைதான், அவை முற்றாக வேண் டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் இது ஒன்று மட்டுமேதான் தமது பணி என்பது போல இவை நாம் எப்படிப்பட்ட தளத்தில் இயங்குகி றோம், எப்படிப் பட்ட ஆதிக்க சக்தி களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்பது பற்றிய அறிவார்ந்த சிந்த னைக்கே தம்மையோ தம்மைச் சார்ந்திருக்கிற இளைஞர்களையோ உட்படுத்திக் கொள்ளாது. அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாது வெறும் பட்டாசு வெடிப்பேச்சுகளை உதிர்த்து இளைஞர்களை போதை யிலாழ்த்தி கிளர்ச்சி யடையச் செய்யும் பணியை மட்டுமே செய்து கொண்டி ருக்கின்றன.

இந்தப் பட்டாசு வெடிப் பேச்சு கள் இளைஞர்களை ஈர்க்கவேண்டுமா னால் உதவுமே தவிர அவர்களை வளர்க்க உதவாது. அமைப்பாகத் திரட்டி திட்டமிட்ட உறுதியோடும் தெளிவோடும் போராட வைக்காது எதிரிகளைச் சந்திக்க அதற்கான திராணியை வளர்க்காது.

அரசு அதிகாரம், ஆதிக்கச் சக்திகள் எப்படிப்பட்ட வலுவான பொறியமைவுகளோடு மக்களை மயக்கியும் ஒடுக்கியும் வருகிறது என்பது வெளிப்படை. இதற்கு மாற்றாக நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் `அமைப்புதான்’ இந்த அமைப்பு வலுவில் நின்றுதான் நாம் அனைத் தையும் எதிர்கொள்ளவும் எதிரிகளை சந்திக்கவும் வேண்டி ருக்கிறது.

அதாவது பருண்மைத் தளத்திலும் கருத்தியல் தளத்திலும் நம்மைத் தற்காத்து கொள்ளவும், எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கவும் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இந்த அமைப்பு தான். இந்த நோக்கில் இப்படி ஒரு வலுவான அமைப்பைக் கட்ட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் எப்படி இவர்கள் கட்சி நடத்தப்போகிறார்கள். என்பதுதான் கேள்விக்குரியதாகவும், இவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படுத் தாததுமாகவும் இருக்கிறது. எனவே இதுபற்றி நாம் அதிகம் சொல்வ தைவிடவும் சம்மந்தப் பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்.

இவ்வளவையும் நாம் வலியு றுத்துவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அவ்வப்போது யாராவது சில தலைவர்களை நம்பி அவர்கள் பின்னால் போவதும், பின்னர் ஏமாந்து மனம் வெதும்பி விரக்தியடைந்து திரும்பி வருவதுமே தொடர் கதையாக, வாடிக்கையாக இருந்து வருகிறதே இதுவே இப் படியே நீடித்து விடக்கூடாதே என்ப தற்காகத்தான்

அதோடு போராட்டங்கள் என்பதே கோரிக்கைகளை வென்றெ டுப்பதற்காகவே என்பதால போராட் டங்கள் அதற்கான முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் நடத்தப்பட வேண்டுமேயல்லாது சும்மா மக்களுக்கு பராக்கு காட்டுவதாக,, காயம்பட்ட மனத்துக்கு ஒத்தடம் கொடுத்து வீட் டுக்கு அனுப்புவதாக, அவரகளது துயரங்களின் மீட்சிக்கான போலி சுகம் அளிப்பதாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான்.

எனவே எழுச்சியுரைகளைக் கேட்டு பரவசப்பட்டு, கைதட்டி மகிழும் இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படை யில் எந்தக் கட்சியினதும், அந்தக் கட்சியின் தலைவர்கள் தனி மனிதர் களதும் வீராவேச உரைகளைக் கேட்டு மகிழும் அதே வேளை வெறும் உணர்ச் சிக்கு மட்டுமே இடம் தந்து அதிலேயே மதி மயங்கி விடாமல் அறிவு பூர்வமான சிந்தனைக்கும் இடம் தந்து எது பற்றியும் தெளிவோடும் விழிப்போடும் இருக்கப் பழக வேண் டும். இந்த நோக்கில் இளைஞர் களது சிந்தனைக்காக சில கருத்துகள்.

1. எந்தக் கட்சியானாலும் அதன் கொள்கைகள் என்ன கோட்பாடுகள் என்ன? எந்த அல்லது எப்படிப்பட்ட இலட்சியத்தை இது முன்வைக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2. இந்தக் கொள்கைகளும் கோட்பாடுகளும் வெறுமனே வெற்று ரைகளாகக் காற்றில் கரைந்து போகா மல் இதன் நிறைவேற்றத்திற்கும் செய லாக்கத் திற்கும் கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது, அதை எப்படி நிறை வேற்றப் போகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. கட்சியின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது, யார், எங்கிருந்து தீர்மானிக்கிறார்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றி யோசித்து, கட்சி முடிவுகள் தனி மனித முடிவுகளாக, வெறுமனே தலை வர்களது முடிவுகளாக இல்லாமல் அனைத்தும் கூட்டு முடிவு களாக அமைப்பின் முடிவுகளாக அதை நிறை வேற்றும் தொண்டர்களது முடிவாக அமையப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. இதற்கு அமைப்பு என்பதும் அதன் கட்டமைப்பு என்பதும் மிகமிக முக்கியமாகும்.அதாவது ஒரு அமைப்பு என்பது அடிமட்டக் கிளைகள், ஒன் றிய அல்லது வட்ட, வட்டார, மாவட்ட அமைப்புகள், தலைமை அமைப்புகள் எனச் சீராகப் படிநிலை வரிசையோடு கட்டமைக்கப்பட் டிருப்பதும் எல்லா முடிவுகளும் அனைத்து மட்டங்க ளிலும் விவாதிக் கப்படும் வகையில் சனநாயகத் தன்மை யோடு இயங்கு வதும் மிக முக்கியம், இப்படிப்பட்ட அமைப்பு அதற்கான சனநாயகம், தான் இயங்கும் அமைப் பில் நிலவுகிறதா என்பதை ஒவ்வொரு வரும் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5.இவை அனைத்தும் பெயர ளவில் மட்டுமே வாய்ச் சொல் லளவில் மட்டுமே இருந்தால் போதாது.அது உண்மையான செயல்பாட்டில் இருக் கிறதா, கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இருக்கிறதா, மாற்றுக் கருத்துகள் மதிக்கப்படுகிறதா அது அணிகள் மத்தியில் முறையாக விவாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளவேண்டும். அல்லாது தலைமை மனம் போன போக்கில், அல்லாது தங்களுக்குள்ள நெருக்கடி அல்லது தன்னலவாதப் நோக்கில் எடுப்பதாக அமைந்து விடக்கூடாது.

காட்டாக, நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்த ஜெ. அணிக்கு வாக்களித்தோம். அத்தோடு நம் ஜெ ஆதரவுப் பணி என்பது முடிந்து விட் டது. தவிர நாம் ஜெ. அணிக்கு அளித்த வாக்கு என்பது அவர் தலைமையில் நல்லாட்சி அமையும் என்கிற நம்பிக் கையிலோ, எதிர்பார்ப்பிலோ அல்ல. மாறாக காங்கிரஸ் - திமுக அணியை வீழ்த்த வலுவுள்ள வேறு எந்த அணி யும் இல்லாத நிலையில் வேறு வழி யின்றி ஜெ. அணிக்கு வாக்களித் தோமே தவிர, மற்றபடி அவரை ஆத ரித்து அல்ல.அதாவது,ஜெ. அணிக்கு மக்கள் அளித்த வாக்கு என் பது ஜெ. ஆதரவு வாக்கு என்பதை விடவும், காங்கிரஸ் - திமுக எதிர்ப்பு வாக்கு என்பதே உண்மை.

இந்த உண்மையை உணர் வாளர்கள் புரிந்து அதற்கேற்ப நம் நிலைப்பாடுகளை கொள்கை கோட் பாடுகளை வகுத்து கோரிக்கைகள் வைத்து செயல்பட வேண்டுமேயல் லாது, எந்த விமர்சனமும் இல்லாமல் ஜெ.வை ஆதரிக்கும் போக்கில் அல்ல.

இந்த அடிப்படையில் தற் போதைய ஜெ. அரசு,-ஜெ, அரசு என்று அல்ல, வேறு எந்த அரசாக இருந் தாலும் அது மக்களுக்கு நல்லது செய் தால் அதை ஆதரிப்போம். நல்லது அல்லாதன செய்தால் அதை எதிர்ப் போம் என்கிற அணுகு முறையையே நாம் கடைப் பிடிக்க வேண் டும்.

இப்படியில்லாமல் நல்லதை மட்டுமே ஆதரிப்போம். தீயதைப் பற்றிப் பேச மாட்டோம். அது பற்றி வாய்திறக்க மாட்டோம் என்றால் இது என்ன நியாயம். இது என்ன அணுகு முறை. இது நம்மை நம்பி வந்த மக்க ளுக்கு துரோக மிழைப்பதாகாதா

ஜெ. ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும், இலங்கை மீது பொருளா தாரத் தடை கொண்டு வரவேண்டும். கச்சத் தீவை மீட்க வேண்டும் என் றெல்லாம் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதுவே பல உள் நோக்கம் கொண்டது என விமர்சனம் இருக்கிறது. ஆனால் செய்தவரைக்கும் சரி.என்ற வகையில் நாம் அதை ஆதரித்தோம் வரவேற்றோம் ஆனால் ஜெ இதை மட்டுமா செய்தார்.

சமச்சீர் கல்வி இந்த ஆண்டு கிடையாது என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஒரு கோடிக்கும் மேற் பட்ட மாணவர்களை, அவர்தம் பெற் றோர்களை, பள்ளி ஆசிரியர்களைச் சந்தியில் நிறுத்தி திண்டாட வைத் தாரே, கல்வியைப் பாழ்படுத்தியுள் ளாரே, நடந்த தவறை உணர்ந்து தன் னைத் திருத்திக் கொள்ள முயலாமல் தான் செய்ததே சரி எனச் சண்டித்தனம் செய்து வந்தாரே, அப்போது அதைக் கண்டித்திருக்க வேண்டாமா.அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண் டாமா, இலங்கை தீர்மானங்களை ஆதரித்தவர்கள் இதையும் செய்திருக்க வேண்டாமா.

எதிர்க்கவில்லை. கண்டிக்க வில்லை என்றால் என்ன பொருள். இதற்கு வேறு ஏதோ காரணம் இருக் கிறது என்று பொருள். அந்தக் கார ணம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா அதனடிப்படை யில் நாம் விழிப்படைய வேண் டாமா.இந்த விழிப்பு இல்லாமல் இப் படிப் பலரையும் நம்பி நம்பியே தானே தமிழ்ச் சமூகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. இப்படியே இன் னும் ஏமாந்து கொண்டு இருந்தால் நிலைமை இப்படியே நீடித்தால் நம் சமூகம் உய்வதுதான் எப்போது,

எனவே மக்கள் குறிப்பாக இளை ஞர்கள் தாங்கள் செல்லும் பாதை எது, தங்களது நடவடிக்கைகள் என்ன, அவை எதை நோக்கியதாக இருக்கின் றன என்கிற தெளிவுடனே தங்கள் செயல்பாட்டைத் தீர்மானித் துக் கொள்ள வேண்டும். அல்லாது வெறும் உணர்ச்சி வயப்பட்ட பரவச நிலையி லேயே மயங்கி ஒவ்வொரு அமைப் பின் தலைவர்களின் பின்னாலும் போய் மீண்டும் மீண்டும் ஏமாந்து சோர்வும் விரக்தியுமுற்று திரும்பிக் கொண்டி ருக்கக் கூடாது. காரணம் அரசியல் மதம் அல்ல. அரசியல் தலை வர் கள் மடாதிபதிகளும் அல்ல. மதம் நம்பிக்கை சார்ந்தது. அரசியல் அறிவு சார்ந்தது. மதம் மக்களுக்கு அபின். அரசியல் மக்களுக்கு விடியல்.எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு இளைஞர்கள் தங்கள் செயல்பாட்டை வகுத்துக்கொள்ள வேண்டும்

திகார் சிறையில் இட்டிலி தோசை

தமிழ் நாட்டைச் சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகிய இருவரும் திகார் சிறையில் முறையே 4ஆம் 6ஆம் எண்கள் அறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தென்னிந்திய உணவுமுறைப்படி இட்டிலி, தோசை, ஊத்தப்பம், தேங்காய்ச் சட்டினி, சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறதாம்.

வழக்கமாக திகார் சிறையில் வட இந்திய உணவுமுறைப்படி பூரி, சப்ஜி, சமோசா, சோளி,பச்சர் முதலானவைதான் வழக்கப்படுமாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருப்பதால் அவர்கள் உணவுமுறை வழக்கப்படி இட்டிலி தோசை ஏற்பாடாம். இதற்காக உணவுக் கூடத்தில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டு சமையல் தயாரிப்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.

பரவாயில்லை, கங்கை வென்று கடாரம் வென்று இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை வடித்ததாக தமிழின் பெருமை பேசியவர்களின் மரபில் வந்தவர்கள், தற்போது திகார் சிறையில், இட்டிலி தோசையை அறிமுகம் செய்து, தமிழன் பெருமையை தில்லிதிகார் சிறையிலும் நிலைநாட்டியதற்காக அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கலாம்.

இப்படி வழங்கப்படும் இட்டிலி தோசைகள், போக வாரம் இருமுறை பார்வையாளர் சந்திப்பின்போது சந்திப்பு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் அளவுக்கு இவர்கள் பணம் பெற்று வில்லைகளாக மாற்றி சிறையில் உள்ள விற்பனைக் கூடத்தில், தேவையானதை வாங்கிக் கொள்ளலாமாம். நல்லது. கோடிகளில் புரள்பவர்களுக்கு சந்திப்புக்கு ஆயிரம் என்பது மிக அற்பத்தொகைதானே. தாராளமாய் செலவு செய்து மகிழ்ச்சியோடு இருக்கட்டும். வாழ்க ராசா, கனிமொழி சிறையாளிகள்.!

மதவாதிகளும் அரசியல்வாதிகளும்

மத, அரசியல் தளங்களில் சமீபகாலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை நோக்க மதவாதிகள் அரசியல் வாதிகளாகவும் அரசியல் வாதிகள் மதவாதிகள் போலவும் மாறிவரும் போக்கு நிலவி’ வருகிறது.

ஒரு சனநாயக நாட்டில் இன்னார் இன்னாராகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. யார் வேண்டுமானலும் யாராக வேண்டு மானலும் மாறலாம். எப்படிப் பட்ட பணிகளை வேண்டுமானலும் செய்யலாம். தடையில்லை ஆனால் அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பதே கேள்வி

`மதம் மக்களுக்கு அபின்’ காரணம் அது துயரத்தில் உழலும் மக்களுக்கு மாயையான சுகத்தை அளிக்கிறது. எனவே இந்த மாயை யான சுகத்திலிருந்து மக்களை மீட்டு உண்மையான சுகத்தைப் பெற அவர்களைப் போராட வைக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.

ஆனால் தற்போது நம் அரசியல் வாதிகள் நடத்தும் பல போராட்டங்கள் மக்களுக்கு உண்மை யான சுகத்தைப் பெற்றுத்தரும் திசையில், முனைப்பில் இல்லாமல் மக்களுக்கு மாயையான சுகத்தை அளிக்க வல்லதாகவே இருந்து வருகின்றன..

அந்தந்தச் சிக்கலிலும் ஆட்பட்டுள்ள மக்களுக்கு, அது குறித்த துயரத்தில் வாடும் மக்களுக்கு அதுஅதற்கும் ஒரு போராட்டம் என்று மாயையான சுகத்தை அளித்து வருகின்றன, அதாவது கோரிக்கைகள் நிறைவேறாமலே, அக் கோரிக்கை சார்ந்தப் பிரச்சனைகளின் துயரங்களுக்கு ஒரு நிவாரணம், ஒற்றடம் கொடுப்பதாக இருந்து வருகின்றன. தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகள் முதல் தமிழீழ விடுதலை சார்ந்த பிரச்சனைகள் வரை எதை எடுத்துக்கொண்டும் நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்..

அரசியல் வாதிகள் இப்படி மதவாதிகள் போல ஒற்றடம் கொடுக்கும் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் மதவாதிகள், அரசியல்வாதிகள் போல் மக்கள் தொண்டர்களுடன் கார்பவனி வருவதும். நற்பணியில் ஈடுபட்டு இலவசங்கள் வழங்கி மக்களிடம் செல்வாக்கு தேடுவதுமான செயல் பாடுகளில் இறங்கியிருக் கிறார்கள். இதன் மறுபக்கமாக தற்போது பாபா ராம்தேவ் ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கும் எதிராக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி அரசின் அடக்கு முறைகளையும் எதிர் கொண்டிருக்கிறார்.

உததிரப்பிரதேசம் ஜக்ஜீர்பூர் சிற்று£ரின் ‘மட்ரி சதன் ’ என்னும் ஆசிரம சாதுவான சுவாமி நிகமானந்தா என்பவர் கங்கை நதியைப் பாதுகாக்க 80 நாள்களுக்கும் மேல் பட்டினிப்போராட்டம் நடத்தி எந்தவித ஊடக விளம்பரம் இல்லாமலும் வெளியுலகு ªத்ரியாமலும் உயிர் நீத்திருக்கிறார்..

இந்நிலையில் அரசியல் வாதிகள் மதவாதிகளது நடவடிக்கைகள் தரம் மறவோ, கை கோர்க்கவோ ஆன வாய்ப்பும் எதிர் காலத்தில் இருக்கிறது. எனினும் நாம் தொடக்கத்தில் கூறியது போல் எது எதுவாக ஆனாலும், எது எதனோடு கை கோர்த் தாலும் பரவாயில்லை இதனால் மக்களுக்கு என்ன பயன் என்கிற நோக்கிலேயே இவற்றை அணுக வேண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

Pin It