துறைதோறும் துறைதோறும் நாட்டை விற்பதற்கு வணிக முகவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற அலங்காரப் பெயரில் இவர்கள் பவனி வருகிறார்கள். தலைமை முகவர், தலைமை அமைச்சர் என்ற பெயரில் இருக்கிறார். அவர் தான் மன்மோகன் சிங். இவரது தலைமையில் கல்வி வணிக முகவராக செயல்படுகிறவர் கபில் சிபில். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்பது இவரது பதவிக்கான சட்டப்பூர்வ பெயர்.

உயர்கல்வியை உள்நாட்டு வணிகர்களுக்கு திறந்து விட்டது போதாதென்று வெளிநாட்டு கொள்ளையர்களுக்கும் திறந்துவிட முயல்கிறார். இதற்காகவே “வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்(நுழைவு மற்றும் செயல்பாட்டு ஒழுங்காற்று) சட்ட வரைவு, 2010” (Foreign Educational Institutions [Regulation of Entry  and Operation] Bill, 2010) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கான உயர்கல்வியை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா விற்குள்ளேயே வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. “இந்தியாவில் பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் 100க்கு 12பேர் மட்டுமே உயர் கல்வியில் நுழைகின்றனர். இது வளர்ச்சியடைந்த நாடுகளில் 55 விழுக்காடாகவும் உலக சராசரி அளவில் 23 விழுக்காடாகவும் இருக்கிறது. 2015ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை இந்தியாவில் 23 விழுக்காடாக உயர்த்துவதற்கு அரசிடம் போதிய நிதி இல்லை. இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் இப்போதுள்ள நிலையை மாற்ற முடியாது. இதற்காகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் கல்வி நிலையங்கள் அமைக்க அழைக்கிறோம்” என்று கபில் சிபல் கூறுகிறார்.

இப்போது வட அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளில் மருத்துவம், மேலாண்மை, பொறியியல் போன்ற உயர்கல்வி பெறுவதற்கு 5 இலட்சம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு 750 கோடி டாலர், அதாவது 34,500 கோடி ரூபாய் வெளிநாடுகளில் செலவழிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் வரவழைத்துவிட்டால் அதைவிட குறைவான செலவில், இந்திய சூழலில் குடும்பத்தை விட்டு அதிக தொலைவு செல்லாமல் படிக்க வசதி ஏற்படும் என்பதும் கபில்சிபிலின் வாதம்.

ஆனால் கூர்ந்து நோக்கினால் திறமையற்ற வணிக முகவரின் விளம்பர உத்தி இது என்பது தெளிவாகும்.

பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் மிகச் சிலரே உயர்கல்வி வரை செல்வதற்கு கல்வி நிறுவனங்களின் போதாமை முதன்மைக் காரணி அல்ல, மாறாக மக்களிடம் நிலவும் வறுமையும், வாய்ப்பின்மையுமே உயர்க்கல்வியில் நுழைவோர் 12 விழுக்காடாக தேங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கொடுத்த பிறகும் காலி இடங்கள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைப் போதாமல் இல்லை.

வெளிநாடு சென்று உயர்கல்வியில் சேருவது அந்நாடுகளில் வேலையில் சேருவதற்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால் தான் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று படிக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை என்ற கனவில் வெளிநாடு சென்று படிப்பவர்களை கபில்சிபிலின் திட்டம் நிறுத்தி விடாது.

இலாப வேட்டைக்காக வரும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், நியாயமான இலாபம் ஈட்டுவதை அரசு தடுக்காது என்றும் இச்சட்ட வரைவு கூறிக்கொள்கிறது. வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் 51 விழுக்காடு வரை தான் தங்கள் பங்கு மூலதனத்தை வைத்துக் கொள்ள முடியும் என்றும், குறைந்தது 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இந்தியக் குடிமக்களை பங்காளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு நிபந்தனை விதிக்கிறது.

மேலும் இக்கல்வி நிறுவனங்கள் கிடைக்கும் இலாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்ய வேண்டுமே தவிர தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் இச்சட்ட நிபந்தனை கூறுகிறது.

வெளிநாடுகளில் இலாப நோக்கமின்றி தரமான உயர்கல்வி வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறான பல்கலைக் கழகங்களை இப்புதிய சட்டம் இந்தியாவிற்குள் ஈர்த்து விடாது. ஏனெனில் 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இவர்கள் இலாப நோக்கம் இல்லாதவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இது அரிதிலும் அரிது. ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் போன்ற இத்தகைய பல்கலைக் கழகங்கள் இலாப நோக்கமற்ற இந்திய குடிமக்களை தேடுகிற கடுமையான பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் மாட்டா.

மேலும் இச்சட்டம் வெளியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் பல்கலைக் கழக நல்கைக் குழு சட்டப்படி ‘நிகர்நிலைப் பல்கலைக்கழக’ அந்தஸ்து தான் முதலில் வழங்கப்படும் என்கிறது. உலகப் புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நிபந்தனையை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பல்கலைக்கழகம் துவங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக கபில்சிபல் கூறுவது முற்றிலும் பொய்யானது.

வெளிநாடுகளில் சேருவாரின்றி கடைதிறந்து வைத்திருக்கும் தரமற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது

உயர்படிப்பு பயிற்சித் திட்டம், களப்பயிற்சி விரிவாக்கத்திட்டம், தொழில் மேலாண்மை நேரடிப் பயிற்சி என்ற பல மோசடிப் பெயர்களில் இலாபத் தொகையை தங்கள் நாடுகளுக்கு எடுத்து செல்லத் தெரிந்த தில்லுமுல்லு நிறுவனங்களே இச்சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறத்தக்கவை.

அவ்வகை பல்கலைக்கழகங்களே இங்கு கடை விரிக்கும் என்பது தெளிவு.

இவ்வகை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இருக்காது.

வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற வணிக முத்திரையை பயன்படுத்தி கண் மண் தெரியாத கட்டணக் கொள்ளையில் இந்நிறுவனங்கள் ஈடுபடும். பிற தனியார் கல்வி நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள ஒரு நியாயத்தை வழங்கிவிடும்.

மேற்கத்திய நுகர்வுப் பண்பாட்டு படையெடுப்பை இக்கல்வி நிறுவனங்கள் தீவிரப்படுத்தி விடும்.

எல்லா வகையிலும் தீமை நிறைந்த, கல்விக் கொள்ளையில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தடையேதுமின்றி அனுமதிக்கின்ற “வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்டத்தை” கல்வியில் அக்கரையுள்ள அனைவரும் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.

-கி.வெங்கட்ராமன்

Pin It