தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:

      "என்.டி.ஏ. கூட்டணியை ஒரே மேடையில் ஏற்றி ஒற்றுமையை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த போராட்டம் தான் "சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டம்". ஆனால் இந்தப் போராட்டம் கூட்டணியின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிட்டது. திமுக எதிர்ப்பு இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பாக உருமாறி விட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவினரே அதிமுக சண்முகத்தை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.சொந்தக்காசில் சூடு வைத்த கதை தான்.

அஇஅதிமுக ஆட்சிக் காலத்தைவிட திமுக ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்களுடன் உள்துறை செயலாளர் அறிக்கை விடுத்திருக்கிறார். நடப்பது எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, பாலுறவு வன்கொடுமை குற்றங்களுக்கு ஆட்சியை குற்றம் சாட்டுவது நியாயமும் இல்லை.அர்த்தமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. இவை அனைத்தும் சமூகம் சார்ந்த குற்றங்கள் வன்முறைகள். நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தடுக்கக்கூடிய "மந்திரக் கோல்" எந்த அரசிடமும் இல்லை.இருக்கவும் முடியாது. குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் தவறு. அப்படி எந்தக் குற்றச்சாட்டையும் இந்த ஆட்சியின் மீது கூறி விட முடியாது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலுறவு வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை திமுகவுடன் இணைத்து பேசினார்கள். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழியாக மிகக் குறுகிய காலத்தில் பெற்றுத் தந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் பொள்ளாச்சி கூட்டுப் பாலுறவு வன்முறை வழக்கில் சொந்த கட்சிக்காரரை காப்பாற்றுவதற்கு எடப்பாடி ஆட்சி முயன்றதையும் குற்றச்சாட்டுக்களை காவல் நிலையத்தில் பதிவுசெய்யாமல் காலம் கடத்தியதையும் நாடு பார்த்தது. நாட்டின் வளர்ச்சிக்கான மக்களின் எதிர்காலக் கனவுகளை ஒரு மக்கள் தலைவராக அறிய விரும்பினார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அது படுக்கை அறை கனவாகவே தெரிந்தது. இது அவருடைய வக்கிர புத்தி. இதே போன்ற வக்கிர மனநிலையாளர்களால்தான் சமூகத்தில் பாலுறவு வன்முறைகளும் குழந்தைகள் மீதான வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த குற்றங்களுக்கும் ஆட்சிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதற்கு சண்முகமே பதிலாகவும் சாட்சியாகவும் நிற்கிறார். திமுகவினரே மக்களிடம் போய் நீங்கள் குற்றச்செயலில் இறங்குங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று கூறுவதைப் போல இருக்கிறது இவர்களின் குற்றச்சாட்டு. நாட்டில் நடக்கும் குற்றங்கள் சமூக ஒழுங்கு மீறல்களே. இந்த சமூக ஒழுங்கு மீறல்கள் வழியாக மக்களே சட்டம் ஒழுங்குகளை சீர்குலைக்கிறார்கள். ஆட்சி சீர்குலைக்கவில்லை.மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது வேறு! பொது ஒழுங்கு சீர்கேடுஎன்பது வேறு!

மணிப்பூரில் நடப்பது பொது ஒழுங்கு சீர்கேடு. ஆட்சி நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. இந்த ஆட்சியை கலைப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக குற்றங்களை அரசின் மீது ஏற்றி ஆட்சியாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற துடிப்பது அற்ப அரசியல் அர்த்தமற்ற அரசியல். திராவிட மாடல் ஆட்சியை கண்டிப்பதற்கு இவர்களுக்கு இதை விட்டால் வேறு பிரச்சனையே இல்லை. சரி.என்.டி.ஏ அணியோ, த.வெ.கவோ அதிகாரத்துக்கு வந்தால் கொலையோ, கொள்ளையோ, பாலுறவு வன்முறையோ நடக்கவே நடக்காது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? தேர்தல் அறிக்கையில் அறிவிப்பார்களா?

“இந்தக் கூட்டத்தில் எவராவது ஒழுக்க சீலர் இருந்தால் இந்த பெண்ணின் மீது கல்லை எறியலாம்” என்று இயேசுநாதர் சொன்னதாக் கூறப்படும் கதைதான் நினைவுக்கு வருகிறது.

மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷாதான் அறிவித்தார்; இப்போது கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி அலுவலகத்தில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் கூட்டணிக்கான தலைமை தனது கட்சிதான் என்றும் பாஜக அல்ல என்றும் மக்களுக்கு சூசகமாக கூறுகிறார். பாஜக என்ற அடையாளத்தை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்த உண்மை கட்டாயத்தின் பேரில் கூட்டணியில் இணைக்கப்பட்ட எடப்பாடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.

இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் சேர மறுத்தார்; இதன் காரணமாகவே இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்று சித்தரிக்க விரும்புகிறார் எடப்பாடி.விருப்பமில்லாமல் பாஜக என்ற லக்கேஜை சுமக்க வேண்டி இருக்கிறது என்ற குமுறல்களின் வெளிப்பாடு இது! இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக அணிதான் என்று அமித் ஷாவே தன்னிடம் ஒப்புக்கொண்டதை ஓபிஎஸ் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார். இதற்கு அமித் ஷா -விடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இப்போது தனி மெஜாரிட்டியுடன் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி கூறுவதன் வழியாக அமைச்சரவையில் பாஜக இடம்பெறாது என்ற உறுதியையும் மக்களுக்கு மறைமுகமாக வழங்குகிறார். இந்தத் திரைக்கதைகளை மக்கள் நம்புவார்களா?

முதலமைச்சராக இருந்து இவர் நடத்திய ஆட்சியை இயக்கியதே ஒன்றிய பாஜக ஆட்சி தான். முத்தலாக் சட்டம்; குடியுரிமை சட்டம்; விவசாய சட்டம்; காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து; டெல்லி மாநில உரிமைப் பறிப்பு சட்டம் என்று அனைத்து மாநில உரிமை பறிப்பு மற்றும் மதவாத சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது எடப்பாடி ஆட்சி.

  • ஜெயலலிதா கையெழுத்திட மறுத்த உதய் மின் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் பச்சைக்கொடி காட்டினார்கள்.
  • நீட் விலக்கு கோரி எடப்பாடி அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவர் ஏற்க மறுத்து எழுதிய கடிதத்தை மக்களிடம் வெளிப்படுத்தாமல் ரகசியமாக பாதுகாத்தது டப்பாடி ஆட்சி.
  • தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் பாஜகவின் அத்தனை முயற்சிகளுக்கும் துணை போனவர் எடப்பாடி.
  • ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுக்கும் இந்து முன்னணி மாநாட்டுக்கும் தனது கட்சியின் சார்பில் தூதுவர்களை அனுப்பினார்.
  • திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்; எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை திமுக அமல்படுத்தவில்லை என்று கன்னடம் தெரிவித்தார்.
  • என்.டி.ஏ மாநாட்டின் முகப்பில் இடம்பெற்ற பெரியார் படத்தை பாஜக நீக்கிய போதும் வாய் திறக்கவில்லை.
  • மாநில உரிமைகளை பறிக்க முயன்ற ஆளுநர் ஆர்என்.ரவியின் அடாவடிகளுக்கும் துணை போனார். இப்படி நீண்ட பட்டியலிட முடியும்.

பாஜகவின் நிழல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது தனது தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று படம் காட்டுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது!

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.