தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி "பொன் சிவகுமரனின்" 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் - காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார்.
"கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ பெண்களின் சிறுகதைகள் 'வழி', வேர்கள் துளிர்க்கும், பெண்களும் புரட்சியும், மார்ச் 8 அனைத்துலகப் பெண்கள் நாள், கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி, அறிவரண் தளபதி பொட்டுஅம்மான் தளபதியின் வாழ்க்கை வரலாறு " ஆகிய நூல்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிமுகம் செய்து பேசுகையில் ஈழ வரலாற்றில் பெண் புலிகள் வியப்பூட்டிய செய்திகளைப் பற்றியும், ஈழத்தில் குறுகிய காலத்தில் குறைந்த இளைஞர்களை வைத்து தொழிற்கல்வி, நீதிமன்றங்கள், போக்குவரத்து, மருத்துவம், சட்டங்கள், சுற்றுசூழல் போன்ற ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து துறைகளை உருவாக்கி அங்கிருந்த மக்களிடம் எடுத்துச் சொல்லி, திரட்டி போராட முடிகிறது என்றால் குறைந்தது வீரியமிகு போராட்டத்திற்கு நம்மால் ஏன் அணி திரட்ட முடியாது என்ற சிந்தனை இந்த நூல்களும் இந்நிகழ்சிகளும் நமக்கு வழங்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.
அருண் தங்கவேல் (மருத்துவர்) , ஜெகநாதன் (வழக்குரைஞர்), ஜீவா சங்கிலி, அக்பர் (தொழிலதிபர்), (இயற்கை வேளாண்மையாளர்), செங்குட்டுவன், விஜயன் (சமூக செயற்பாட்டாளர்), பழ. ஆனந்த் (வழக்கறிஞர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்) , மலைக்கொழுந்து (ஆசிரியர் ), மில்லர் மெய்யழகன், காமராஜ் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
அன்பு எழிலன் (புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர்), வேல் அழகன், எத்திராஜ், ராமகிருஷ்ணன் புதுச்சேரி மாநில கழகத் தோழர்களும், கரூர் மாவட்டக் கழக முன்னனி தோழர்கள் மோகன்தாஸ், இரா. காமராசு, (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்) டேவிட், கிருஷ்ணன் (ஈரோடு மாவட்ட துணைத் தலைவர்), பிரபு (ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), நாகராஜ் (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), ரஞ்சித், ஆசிரியர் சதீஸ்குமார், கார்த்தி ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.