கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன தழிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள் சமகாலத்து அரசியல் கவிதைகள்,என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது. 

ஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார். கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார்.  

முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தழிழ்நதி கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதிவு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. சுகிர்தராணி,தழிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான்,லீனா மணிமேகலை , நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர்.

ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துலாக இருக்கிறது. முதல் அமர்வில் சராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) ,கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன்,திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்பித்தார்கள். 

கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன. யவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல் தலித் விடுதலை குறித்து எழுதாமல் எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் எழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சகணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார்.  

தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலிக் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார். 

அதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும்கூடி கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின் கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார். 

மதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார். 

கவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  

இரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை –ஐஐ ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.  

செல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம் சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்பைடயாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.  

ஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம்,சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்துதூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா ரிரிதர்ஸன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரiவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.  

நிகழ்வு:2  

கவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து தாந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள் விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் குடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பதிரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீயார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.  

ஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைபாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ் பேஷ் செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று வன்டாம் காட்டியிருக்கிறார்.

தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைபாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது. “இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா: ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா சாகடித்தவர்கள் நீங்கள்தான். பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.

நிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம்.

சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும்,இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், படுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.இலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.

அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று,ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியைஃ பங்கு போட்டுஃ சிங்கங்களும் புலிகளும்ஃ பகிர்ந்துகொண்டனஃ இரண்டின் வால்களையும்ஃ முடித்துவிட்ட எவனோஃ எனது இடத்தின்மீது நிரந்தரமானஃ காயத்தை ஆரம்பித்து வைத்தான்ஃ அதிலிருந்து வடியும் இரத்தம்ஃ நிரந்தரமானது என அடிக்குறிப்பும்ஃ எழுதிவைத்துவிட்டான்ஃ எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள்ஃ விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி இரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.

கிழக்கிலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள்,சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை,உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.

தமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ்சொரணை? கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர்,இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.

அடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது,தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சேர்க்கிறது என்றார்.

லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினார்.

இளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்புக்குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பானத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னால் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.

நிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார்.

பழைய கதைகளை பேசி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன? வரலாறு தெரியுமா? நீ இதையெல்லாம் படித்திருக்கிறாயா? என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு என்றும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகாரதொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.

மரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா? ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.

தொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.  

பின்குறிப்பு:

இந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே. இதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பகுதியில் வெளியிடப்படும் 

உங்கள் பொறுமைக்கு நன்றி.