திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 28.06.2026 ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள், பரப்புரைப் பயணம், கருத்தரங்குகள் நடத்துவது, குடும்ப விழாக்கள் நடத்துவது ஆகியவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. நிறைவாக தலைமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. "குரலற்ற மனிதர்களுக்கான குரல்"
சீர்மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளில் இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசுப் பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாமல் அமிழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகத்து மக்களின் பாடுகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நோக்கத்துடன் "குரலற்ற மக்களின் குரலாக" ஒலிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி அரசின் கவனத்திற்கும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
2. பரப்புரை பயணத் திட்டம்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 14-ம் ஆண்டு பரப்புரைப் பயணத்தை தென் மாவட்டங்களில் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் பரப்புரைப் பயணம் 2026 ஆகஸ்டு 6-ம் தேதி திருச்சி, பேராவூரணி, நாகர்கோயில் ஆகிய 3 முனைகளில் இருந்து தொடங்கி கழகம் தொடங்கிய நாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி காரைக்குடியில் பயண நிறைவு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
"சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு" என்கின்ற தந்தை பெரியாரின் கருத்தின் அடிப்படையில் இந்த பரப்புரைப் பயணம் அமைய உள்ளது.
ஒரே ஜாதி திருமணங்கள், மதத்தில் சமஸ்கிருதம், பார்ப்பனர்கள் திணிக்கும் இழிவுகள், குடும்பத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து இளம் தலைமுறையினர் விடுவித்துக் கொண்டு அறிவியல் சமத்துவ வாழ்வியலுக்கான மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.இப்பயணத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள், தெருமுனைக் கூட்டங்களாக இப்பரப்புரைப் பயணம் நடைபெறும்.
3. குடும்ப விழாக்கள்
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் -17 அன்று அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் கழகத் தோழர்களின் குடும்பங்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் விழாக்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் கழகக் குடும்பங்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், சென்னை உமாபதி, மேட்டூர் கோவிந்தராஜ், காவலாண்டியூர் ஈஸ்வரன், பேராவூரணி திருவேங்கடம், திருச்சி மனோகரன், கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர்செல்வம், வேலூர் சிவா ஆகிய தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு
- ஜாதியில் திருமணம்
- மதத்தில் பார்ப்பனியம்
- வாழ்வில் மூடநம்பிக்கை
தடை, அதை உடை……
மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்
- திராவிடர் விடுதலைக் கழகம்