சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 அன்று புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்:
கடந்த 20.06.2026 அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் "குற்றங்கள் குறைய வேண்டும்" என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் விலங்கு பலியிட்டு மாந்திரீக பூஜை செய்திருப்பது.
1. அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது.
2. காவல்துறை நடத்தை விதிகள் மீறல்.
3. பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்பதனை தோழமையுடன் சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நேரில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்த அடுத்த சில நாட்களிலேயே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நாள் பரப்புரை!
கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20-06-2026 சனிக்கிழமை அன்று கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மருத்துவக் கனவைச் சிதைக்கும் `நீட்’ தேர்வை இரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு நாள் பரப்புரைப் பயணம் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா தலைமையில் நடைபெற்றது.
காலை 10 மணி மூங்கில்துறைப்பட்டு, காலை 12 மணி மேல் சிறுவள்ளூர் கூட்டு சாலை, மாலை 3 மணி வாணாபுரம் கூட்டுச்சாலை, மாலை 6 மணிக்கு கடுவனூர் பேருந்து நிலைத்தியலும் நடைபெற்றது. இதில் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், மாவட்டச் செயலாளர் க.ராமர், மாவட்டத் தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ.இளையரசன் திமுக கல்லக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய் ஆனந்து மற்றும் சி.பி.அய்யை சார்ந்த சையத் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மு.நாகராஜ், ரிஷிவந்திய ஓன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், வீ.முருகன், ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் மா.குமார், கி.ஆனந்தன் ஏ.ஜெயப்பிரகாஷ் சு.வல்லரசு, இரா.ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.