குடியரசு துணைத் தலைவர் பதவி என்ற அரசமைப்பு பதவியை கட்சி அரசியலுக்காக வழமைக்கு மாறாக இடையில் பறித்துவிட்டு, புதிதாக குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துகிறார்கள்.
தாங்கள் நடத்திய அரசியல் விளையாட்டுக்கு அனைத்து கட்சிகளும் துணைக்கு வர வேண்டும் என்று கேட்பதும் அதுவும் தமிழரை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம் என்று பேசுவதும் 'ஏமாற்று அரசியல்' தான்.
வேட்பாளர் சிபி. ராதா கிருஷ்ணனுக்காக பாஜக தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் ஆதரவு கேட்பது எதற்காக?
பாஜகவின் தமிழ்நாட்டு வஞ்சிப்புக் கொள்கைக்கு நீங்களும் துணை வரவேண்டும் என்பதற்காகவா?
சி .பி.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அடையாளத்தை தமிழராக ஏற்க வில்லை இந்துவாகத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவை பாரத தேசம் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மாநிலங்களவைத் தலைவராக வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் உரிமைக் குரலை அவர் அனுமதிக்கப் போவதும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டு உரிமைக்கு குரல் கொடுத்ததும் இல்லை.
"தமிழர் என்று கூறப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது தான், திமுக ஆட்சியைக் கவிழ்க்க தமிழ்நாடு ஆளுநர் பர்னாலா 356 சட்டப் பிரிவில் கையெழுத்திட மறுத்த போதும் தனது குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி கையெழுத்திட்டு திமுக ஆட்சியைக் கவிழ்த்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நிகழ்ந்தது இல்லை இது தமிழ்நாட்டு குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் சாதனை".
முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது குடியரசுத் தலைவர் பதவியே கலைஞரைத் தேடி வந்தது, கலைஞர் மறுத்து விட்டார். எனது உயரம் எனக்கு தெரியும் என்றார்.
குடியரசு தலைவர் ஆனாலும், குடியரசு துணைத் தலைவர் ஆனாலும் ஆளுங்கட்சியின் ஆணையை ஏற்று செயல்படப் போகிறவர்கள் தான் மீறினால் ஜகதீப் தன்கரைப் போல் காணாமல் போய்விடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்துவிட்டாலே தமிழ்நாட்டுக்கு உரிமை கிடைத்துவிட்டது என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.
ஒரு தமிழரை திமுக ஆட்சி ஆதரிக்கவில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற அரசியலை கையில் எடுக்கிறது பாஜகவும் அதிமுகவும். இந்த உருட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.
- விடுதலை இராசேந்திரன்