சற்றொப்பப் பத்து ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் பெரிய அரசியல் ஆளுமைகளான கலைஞரும், ஜெயலலிதாவும் உடல் நலிவுற்ற நிலையையும், அவர்களின் மறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கட்சி வளர்க்கக் காத்திருந்தனர் இந்துத்துவவாதிகள் பா.ஜ.கவினர்! அவர்கள் நினைத்தபடியே ஊழலில் திளைத்த அடிமைகள் கூட்டமாம் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க வலையில்
விழுந்தனர். அவர்களை வைத்து ஆட்சி, அதிகார மட்டங்களில் சாதிய மதவாத ஆட்களை ஊடுருவச் செய்த பின்னர், திட்டமிட்டபடி அந்தக் கட்சியை உருக்குலைத்தனர் காவிகள். கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை முடிந்த அளவு தடுக்கப் போராடி, தளபதியின் உழைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுப்போயினர் அந்த மதவாதக் கூட்டத்தினர்.
எதிர்க் கட்சி என்ற நிலை கூட அ.தி.மு.க. வுக்கு மறந்துவிடும் அளவு அவர்களுடைய முகங்களை, அவர்களுடைய பேச்சுகளை, அவர்களுடைய எழுத்துகளை, அவர்களுடையப் பதிவுகளை எதிர்மறையாக இடம்பெறும் வண்ணம் எல்லா எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களையும் வளைத்துப் போட்டனர். இன்றளவும் சமூக வலைத்தளங்கள் இல்லாவிடில், அவர்களுடையத் தகிடுதத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எந்த அமைப்புக்கும் சவாலான செய்தியே!
கட்சி வளர்ப்புக்கும், சித்தாந்தத் தொடர்ச்சிக்கும் கலவரங்களையும், வெறுப்பு அரசியலையும் நம்பி இருக்கும் வரலாற்றுப் பெருமை பா.ஜ.க மதவாதச் சக்திகளிடம் உண்டு! அதன்படியே மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல், கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தத் துடித்தார்கள்! ஆனால் தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தோல்வியைப் பிரகடனப்படுத்துவதாக முடிந்து விடுகின்றது.
எதைச் செய்வது எனக் கையைப் பிசைகிறார் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை! ஆ.ராசா வின் பேச்சுக்கு காவல்துறையில் வழக்குகள் போட்டது, ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது, கடையடைப்பு நடத்தியது, மிரட்டல் விடுத்தது, கைதானது என ஒரு பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே இதோ, அக்டோபர் 2 அன்று தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருக்கிறார்கள். அன்று காந்தி ஜெயந்தி. அதற்கும்,
ஆர்.எஸ்.எஸ்க்கும் என்னத் தொடர்பு?! பா.ஜ.கவினர் ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கச் சொல்லி இருக்கும் காரணங்கள், இந்திய சுதந்திரதின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்ததின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவையே!
இது வெளிக் காரணங்கள்! காந்தியாரின் பிறந்த நாளைத் தன்வயப்படுத்தி, அதை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தலும், அந்த நாளையும் பா.ஜ.கவினருக்கானதாக மாற்றுதலும்தான் அவர்களின் நோக்கம். அப்படித்தானே ரத ஊர்வலம் நடத்தினார்கள்? டிசம்பர் 6, அம்பேத்கரின் நினைவு நாளை மறைத்து, பாபர் மசூதி இடிப்பு நாளாக ஆக்கினார்கள்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால் கம்பும் கையுமாகத்தான் போவார்கள். காந்தி பிறந்தநாளில் கம்புகளை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? கம்புகள் வேறெவர் கையிலும் இருப்பதைக் காட்டிலும் ஆர்.எஸ்.எஸ். கைகளில் இருப்பதை நாம் ஆபத்தானதாகத்தான் பார்க்க முடியும்.
அமைதியில் வாழும் தமிழகத்தை இந்துத்துவவாதிகள் கலவர பூமியாக மாற்ற எண்ணுவதைப் பார்வையாளராகக் கடக்க இயலாது.
அமைதியான தமிழகம் அமைதியாகவே இருக்கட்டும்; காவியும், கம்பும் இங்கு வேண்டாம்!
- சாரதா தேவி