வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகர சபையின் டிப்டி மேயருமான டாக்டர் அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜிநாமாக் கொடுத்து விட்டார். அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறுகையில் சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப் பிடிக்கவில்லை யென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக் கொடுத்து விட்டதாகவும், தாம் இன்னமும் தேசத்திர்க்கு உழைக்கத் தயாராயிருப்பதாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல்வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்துகொள்வது மேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
வங்காளத்தில் இப்படியென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், சிந்து முஸ்லீம்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக் கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரியவருகிறது. நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில முஸ்லீம்கள் விஷயமாய் நடந்துகொண்டது மதுரையில் சுயராஜ்யக் கட்சியின் பிரசாரம் என்ற தலைப்பின்கீழ் தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தால் தெரியவரும். அதுமாத்திரம் அல்லாமல் முஸ்லீம்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் வருகிறகாலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்களென்பதை முஸ்லீம் பெரிய உத்தியோகஸ்தர்களைக் கேட்டால் தெரியவரும்.
குழம்பு, காய் கரி முதலிய பதார்த்தங்களுக்கு வாசனை உண்டாக்கிக் கொள்ளவேண்டி தாளிதம் செய்யும்போது கருவேப்பிலையை உபயோகித்துக்கொண்டு, சாப்பிடுகிற போது அதை எடுத்து தூர எறிந்து விடுவதுபோல் சமயத்திற்குச் சேர்த்துக் கொண்டு சமயம் தப்பியவுடன் வெளியில் தள்ளிவிடுவதை நமது நாட்டு முஸ்லீம்கள் மாத்திரம் அல்லாமல் நமது நாட்டு இதர மக்களும் அறிய வேண்டுமாய் ஆவல் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.08.1925)
More articles by பெரியார்
- பொன்விழாப் புரட்டு (24 ஜூன் 2026)
- உலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம் (23 ஜூன் 2026)
- பொப்பிலி பெருந்தன்மை (22 ஜூன் 2026)
- முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா? (19 ஜூன் 2026)
- தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இலங்கை மந்திரிக்கு உபசாரம் - மந்திரி பதில் (18 ஜூன் 2026)