கதை கதையாய் சொல்லத் தெரிந்தவள்  

கதைகதையாய் சொல்லத் தெரிந்தவளிடம்

இப்படியானதொரு துயரம் நிகழ்ந்ததில்லை.

அலைகளை ரசித்த குழந்தையின் கண்களில்

ஒளிவற்றிப் போன இருட்டு.

கொண்டுவந்து சேர்த்த குதூகலங்கள்

பொட்டித் தெறித்து விம்முகின்றன.

ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் கடற்காற்றில்

இதயம் நொறுங்கிச் செத்த வேதனையின் வேறொரு வாசனை.

இரவுகளில் கைப்பிடித்துச் செல்லும்

கட்டுமரங்களின் சிதிலங்களில்

நேற்றைய கனவுகளின் மிச்சம் தங்கியிருந்தது.

உயிர்களின் வரைபடமொன்று

மரணத்தின் சுவடுகளை அழிக்கமுடியாமல்

தன்னையே மாய்த்துக் கொள்கிறது.

கடற்புறத்தின் கண்ணீர் மெளனங்களை

எழுதும் மொழி தெரியாமல் நடுங்குகின்றன விரல்களின் நுனி.

மனம் சொல்ல நினைப்பதை வார்த்தை சொல்ல மறுக்கிறது.

ஆயுதங்களால் அழிக்கப்பட்டவை அநேகம்.

குவிந்து கிடக்கும் சடலங்களை

கொத்தித் தின்னப் பறக்கும் பருந்துகளுடன்

வெற்றிடம் எங்கும் விரிகிறது.

விடிந்தும் பொழுது இருள் சூழ்ந்தே

விடிகிறது இப்போதெல்லாம்.

 

நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி

 

தலையால் நடந்து கொண்டிருக்கும்

ஒரு வினோத பட்சியின் பின்னே

துரத்தப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்

கைகால் முளைத்த மரங்கள்

ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை

பூமியில் வரைந்து செல்கிறது

எனக்கென தென்பட்ட திசையெங்கும்

வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்

ஒன்றின் மேல் மற்றொன்றாகி

சமாதிகளில் புதைக்கப்பட்ட

உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்

அலையடித்து கிளம்பும் பரவெளியில்

மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து

அறுபட்ட காதுகள் தொங்க

விழிகளற்ற கொடிமர வேலிகள்

உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்

துருப்பிடித்து கருகி சாம்பலாகின.

பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற

தலைகீழ் பட்சியின் நாவுகளில்

பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.

நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த

ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்

நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.

போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்

இறக்கையின் திமிறடக்கி பட்சியை இறுகி கட்டியணைத்தபோது

நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்

 

கடல்முழுவதையும் விழுங்கிய

பிரபஞ்சத்தின் வாய்க்குள் அகால பேரண்டம்

மண்ணின் இருளறையில் விந்தை தெறித்தபோது

தன் இருப்பைப் பிளந்து துளிர்த்தது செடி.

இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.

உயிரமுதை கடைந்தெடுக்கும்

பிறப்பொன்றும் எளிதல்ல

தொட்டுத் தடவிப் பார்த்து

அதீதமும் தீவிரமும் கலந்து

அந்தரங்க புதையல்களில் கண்டெடுத்த

ஆதியின் வன்ணத்துளி

தன் வாழ்தல் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறது,

மரங்களையும் மனிதர்களையும் துளைத்த

அம்புக் குறிகளினூடே

ஆதிவிலங்கின் வார்த்தைகள்

கற்கோட்டைகளிலும் குகைசுவர்களிலும் உடைபட்டு சிதறின.

காலமற்ற பெருவெளியிலின்று

கிரீடங்கள் பற்றிய கனவேதுமின்றி

தலைகள் உறுமிக் கிடக்கின்றன. 

 

வெள்ளைக் கனவின் திரை

 

வெள்ளைக் கனவின் திரை

நிழல் ஓவியங்களைத் தீட்டிப் பார்க்கலாம்.

அதிகாலைச் சூரியன் சிந்தும்

ஒளிநிறங்களின் முகம் பார்த்து

எதிர்திசையில் ஒளிந்து

உட்கார்ந்திருக்கும் மழைவில்

இரவு பகலற்ற பொழுதொன்றின் உயிர்ப் பறவை

கடல் அகன்று சிப்பி வயிற்றுள் சுழலும்.

விரித்த வானத்தில் புரளும் மேகங்களில்

ரத்தத் துளிகளின் தெறிபட்டு

கசங்கலில் நீளும் அவமானம்

குழந்தையின் மனசுக்குள் கொட்டிக் குவித்த

சின்னஞ்சிறு கார்ட்டூன் பொம்மைகளின்

நிறமற்ற உருவற்ற எழுத்துக் கண்கள்

விடுபடா மெளனம் சூடிய பின்னும்

உடைபட்ட பலூன்களை ஊதிப் பார்க்கும்.

 

வெள்ளைக் குதிரையொன்று

திரும்பவும் பறந்து வருகிறது

தன் நிறம் பற்றி ஏதுமறியாது.

 

Pin It